அலசல்
Published:Updated:

தகாத உறவு, ஆபாச வீடியோ, தற்கொலை... பெண் விவகாரத்தில் சிக்கிய தி.மு.க பிரமுகர்!

மகாலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
News
மகாலட்சுமி

தி.மு.க-வைச் சேர்ந்த சாதிக், இந்தப் பெண்ணுடன் மட்டுமின்றி வேறு சில பெண்களுடனும் இப்படி தொடர்பில் இருந்திருக்கிறார்.

குன்னூர் அருகே இளம்பெண் ஒருவர் திடீரென தூக்கிட்டு, தற்கொலை செய்துகொண்டதன் பின்னணியில் இருந்த ‘பாலியல் அத்துமீறல், ஆபாச வீடியோ’ உள்ளிட்ட அதிர்ச்சித் தகவல்கள் எட்டு மாதங்கள் கடந்து தற்போது வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகிலுள்ள கரன்சி கிராமத்தைச் சேர்ந்தவர் 27 வயதான மகாலட்சுமி. கிராம உதவியாளரான (தலையாரி) இவருக்கு இரண்டு மகள்கள். குன்னூர் ஆழ்வார்பேட்டையில் வாடகை வீட்டில் வசித்தார். இந்த நிலையில், கடந்த மார்ச் 22-ம் தேதி வீட்டில் தூக்கிட்டு, தற்கொலை செய்துகொண்டார் மகாலட்சுமி. இது குறித்து அப்பர் குன்னூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்துவந்தனர்.

தகாத உறவு, ஆபாச வீடியோ, தற்கொலை... பெண் விவகாரத்தில் சிக்கிய தி.மு.க பிரமுகர்!
தகாத உறவு, ஆபாச வீடியோ, தற்கொலை... பெண் விவகாரத்தில் சிக்கிய தி.மு.க பிரமுகர்!

சம்பவம் நடந்து எட்டு மாதங்கள் ஆன நிலையில், குன்னூரைச் சேர்ந்த 37 வயதான சாதிக்கைக் கைதுசெய்திருக்கிறது காவல்துறை. தி.மு.க மாணவர் அணி உறுப்பினரான இவர்மீது, மகாலட்சுமியைத் தற்கொலைக்கு தூண்டியது, தடயங்களை மறைத்தது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. மகாலட்சுமி, சாதிக் இடையே திருமணம் மீறிய உறவு இருந்ததாகவும், ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாலேயே அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் திடுக்கிடும் தகவல்கள் கசிய ஆரம்பித்திருக்கின்றன.

இது குறித்து பெயரை மறைத்து நம்மிடம் பேசிய மகாலட்சுமியின் உறவினர் ஒருவர், ‘‘சாதிக், மகாலட்சுமியின் உறவுக்காரப் பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதன் மூலம் உறவினர் என்ற முறையில், மகாலட்சுமியுடனும் சாதிக் நெருங்கிப் பழகிவந்தார். இருவருக்கும் இடையே திருமணம் மீறிய தகாத உறவு ஏற்பட்டு, அது தொடரவும் செய்தது.

தி.மு.க-வைச் சேர்ந்த சாதிக், இந்தப் பெண்ணுடன் மட்டுமின்றி வேறு சில பெண்களுடனும் இப்படி தொடர்பில் இருந்திருக்கிறார். அவர் தி.மு.க மருத்துவர் அணியைச் சேர்ந்த தனது நண்பர்கள் இருவரோடு சேர்ந்து, பெண்களுடன் தனிமையில் இருப்பதை வீடியோ எடுத்துவைத்து மிரட்டிவந்ததோடு, அதே பெண்களை பணம் படைத்தவர்களிடம் நெருங்கிப் பழகவைத்தும் காரியம் சாதித்திருக்கிறார்கள். குன்னூரைச் சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவரைப் பெண்ணாசையில் வீழ்த்தியதோடு, அவரையும் நிர்வாண வீடியோ எடுத்துப் பணம் பறித்திருக்கிறார்கள். 11-ம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவரையும் ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியதில் அந்த மாணவி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

சாதிக்
சாதிக்

தன்னுடன் தகாத உறவில் இருந்த மகாலட்சுமியையும் தாசில்தார் ஒருவருடன் நெருங்கிப் பழகுமாறு மிரட்டியிருக்கிறார் சாதிக். இதற்கு மகாலட்சுமி சம்மதிக்காததால், கடுமையாகச் சித்ரவதை செய்திருக்கிறார். இந்தத் தொடர் சித்ரவதையைத் தாங்க முடியாத மகாலட்சுமி, இரண்டு குழந்தை களைப் பற்றிக்கூட யோசிக்காமல் தற்கொலை செய்துகொண்டார். மகாலட்சுமியின் செல்போனில் இதற்கான அனைத்து ஆதாரங்களும் இருக்கின்றன. ஆனால், அந்த செல்போன் மாயமாகியிருக்கிறது‌. தற்போதுவரை அந்த செல்போன் கிடைக்கவில்லை. காவல்துறையும் செல்போனைக் கண்டுபிடிக்க ஆர்வம் காட்டவில்லை. அந்த போன் கிடைத்தால்தான் இவர்களின் கொடூர முகம் அப்பட்டமாகத் தெரியும். ஆனால், கட்சி நிர்வாகிகள் சிலர் சாதிக்குக்கு ஆதரவளிப்பதால், போலீஸும் வழக்கில் ஆர்வம் காட்டுவதில்லை’’ என்றார் ஆதங்கத்தோடு.

குற்றச்சாட்டுகள் குறித்து குன்னூர் நகர தி.மு.க செயலாளரும், கவுன்சிலருமான ராமசாமியிடம் கேட்டபோது, “சாதிக் தி.மு.க-வில் கட்சி உறுப்பினர்கூட இல்லை. தி.மு.க மருத்துவர் அணியில் இருக்கும் சிலரின் நண்பர்... அவ்வளவுதான். மற்றபடி கட்சி நிகழ்ச்சிகளுக்கு வருவார்‌. எல்லா வேலைகளையும் செய்துகொடுப்பார். சாதிக் குறித்து என்னிடம் போலீஸார் விசாரித்தபோதும்கூட, இதைத்தான் சொன்னேன். குற்றம் செய்தவருக்கு நான் ஏன் உதவ வேண்டும்?” என்றார்.

ராமசாமி, முபாரக், கவிதா, ஆசிஸ் ராவத்
ராமசாமி, முபாரக், கவிதா, ஆசிஸ் ராவத்

தி.மு‌.க மாவட்டச் செயலாளர் முபாரக், “மகாலட்சுமி என்பவர் எட்டு மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார் என்பதையே பத்திரிகை மூலம்தான் தெரிந்துகொண்டேன். ஆனால், இதில் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்ற தகவல் எதுவும் எனக்கு வரவில்லை. எனவே, வழக்கு விசாரணைக்கு தி.மு.க-வினர் முட்டுக்கட்டை போடுவதாகச் சொல்வது அபாண்டம்” எனச் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

வழக்கை விசாரித்துவரும் அப்பர் குன்னூர் ஆய்வாளர் கவிதாவிடம் இந்த விவகாரம் குறித்துக் கேட்டபோது, “சாதிக், மகாலட்சுமி இருவரும் உறவினர்கள். தகாத உறவில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். இந்த விஷயம் வெளியே தெரிந்ததால், மகாலட்சுமி தற்கொலை செய்திருக்கிறார். சாதிக் தி.மு.க உறுப்பினர் அவ்வளவுதான். மகாலட்சுமி செல்போனில் பெரிதாக எதுவும் இருக்க வாய்ப்பு இல்லை” என்றார் மழுப்பலாக.

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத்திடம் பேசினோம். “இந்தத் தற்கொலை வழக்கில் தொடர்புடைய நபரைக் கைது செய்து விசாரித்துவருகிறோம். தொடர் விசாரணையில் கூடுதல் தகவல்கள் கிடைத்தால், குற்றவாளிகள்மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் உறுதியான குரலில்.

இது இன்னொரு ‘பொள்ளாச்சி சம்பவமாக’ மாறும் முன் நடவடிக்கை எடுக்கவேண்டியது காவல்துறையின் கடமை!