Published:Updated:

`கடத்தல் தங்கத்துக்கு ஸ்கெட்ச்?; சிக்கிய 3 பேர்’ - விஸ்வரூபம் எடுக்கும் திருச்சி கடத்தல் விவகாரம்!

திருச்சி விமான நிலையம்
News
திருச்சி விமான நிலையம்

கடத்தல் தங்கத்தைக் கொள்ளையடிக்க, எட்டு பேர் சேர்ந்து நள்ளிரவில் சினிமா பாணியில் சேஸிங் செய்திருக்கின்றனர்.

Published:Updated:

`கடத்தல் தங்கத்துக்கு ஸ்கெட்ச்?; சிக்கிய 3 பேர்’ - விஸ்வரூபம் எடுக்கும் திருச்சி கடத்தல் விவகாரம்!

கடத்தல் தங்கத்தைக் கொள்ளையடிக்க, எட்டு பேர் சேர்ந்து நள்ளிரவில் சினிமா பாணியில் சேஸிங் செய்திருக்கின்றனர்.

திருச்சி விமான நிலையம்
News
திருச்சி விமான நிலையம்

சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற பல்வேறு நாடுகளிலிருந்து விமானம் மூலமாக திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு ஏராளமான கடத்தல் தங்கம் இறங்குகிறது என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக வைக்கப்பட்டுவருகிறது. விமான நிலைய அதிகாரிகளின் சோதனையில், அவ்வப்போது கடத்தல் தங்கம் பிடிபட்டாலும், தங்கக் கடத்தல் சம்பவங்கள் குறைந்தபாடில்லை. அப்படி திருச்சி விமான நிலையத்தில் இறங்கிய தங்கத்தை வாங்கிக்கொண்டு வீடு திரும்பிய சாதிக் பாட்சா என்பவரை, ஒரு டீம் `ஸ்கெட்ச்’ போட்டுத் தூக்கியிருப்பது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி புத்தூர் மூலக்கொல்லைப் பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் பாட்சா. இவர் திருச்சி விமான நிலையத்துக்கு வந்த கடத்தல் தங்கத்தை வாங்கி, காரில் வீடு திரும்பியிருக்கிறார் எனச் சொல்லப்படுகிறது. வீட்டினருகே வந்தபோது, அவரைப் பின்தொடர்ந்து வந்த மர்மக்கும்பல் ஒன்று தங்கத்தைக் கேட்டு மிரட்டியதோடு, சாதிக் பாட்சாவைக் கடத்திச் சென்றனர். சாதிக் பாட்சாவின் அலறல் சத்தத்தைக் கேட்டு அந்தப் பகுதி மக்கள் கூட, எதிர்பாராதவிதமாகக் கடத்தலுக்கு ஸ்கெட்ச் போட்ட டீமைச் சேர்ந்த கதிரேசன் தடுமாறி கீழே விழுந்து பொதுமக்களிடம் சிக்கியிருக்கிறார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கதிரேசனைக் கைதுசெய்து, விசாரணையில் இறங்கினர். அதையடுத்து, கடத்தப்பட்ட சாதிக் பாட்சாவை சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இறக்கிவிட்டுச் சென்றது கதிரேசன் டீம்.

‘என்னிடமிருந்த 20 கிராம் நகையைக் கொள்ளயடிக்கவே வந்தனர்’ என்று கடத்தப்பட்ட சாதிக் பாட்சா கூறியிருக்கிறார். 20 கிராம் நகை என்பது விமானத்தில் கொண்டுவர அனுமதிக்கப்பட்ட அளவு. ஆனால், சாதிக் பாட்சாவிடம் அதிகளவு தங்கம் இருப்பதாகத் தகவல் கிடைக்கவே, அவரைக் கடத்தினோம் என்று போலீஸாரிடம் அகப்பட்ட கதிரேசன் கூறியிருக்கிறார். சாதிக் பாட்சா, கதிரேசன் ஆகிய இருவரும் கடத்தல் தங்கத்தைக் கையாளும் புரோக்கர்களாகச் செயல்பட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது. இரு தரப்புக்குமிடையே எழுந்த தொழில் போட்டி காரணமாகவே, இந்தச் சம்பவம் நடைபெற்றிருக்கிறது என்கின்றனர் விஷயமறிந்த அதிகாரிகள்.

கடத்தல் சம்பவத்துக்கு ஸ்கெட்ச் போட்ட கதிரேசன்
கடத்தல் சம்பவத்துக்கு ஸ்கெட்ச் போட்ட கதிரேசன்

அதையடுத்து திருச்சி விமான நிலையத்திலிருந்து, சாதிக் பாட்சா கடத்தப்பட்ட புத்தூர் மூலக்கொல்லை வரையுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் ஆராய்ந்திருக்கின்றனர். அதில் நள்ளிரவு சுமார் 2 மணியளவில் சாதிக் பாட்சா காரை, ஒரு கார் மற்றும் இரண்டு பைக் பின்னாலேயே ஃபாலோ செய்து வந்ததும், கடத்தல் கும்பல் எட்டு பேர் கொண்ட நபர்கள் என்பது தெரியவந்திருக்கிறது. அதையடுத்து, அகப்பட்ட கதிரேசனிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள், செல்போன் சிக்னல்களை வைத்து, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஹக்கிம் ஜியாவுதீன், அப்துல்கபூர் ஆகிய இருவரையும் போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். இந்த தங்கக் கடத்தல் விவகாரத்தில் இதுவரை மூன்று பேர் கைதுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், சமீர், பிரதாப், பிரகாஷ் உள்ளிட்ட இன்னும் ஐந்து பேரை போலீஸார் தேடிவருகின்றனர்.