உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ரக்னி (23) என்ற பெண்ணுக்குத் திருமணம் நடைபெற்றது. அதற்கான பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்றன. அந்தப் பெண்ணின் திருமண நிகழ்ச்சி தொடர்பான வீடியோவை மணமகளின் உறவினர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவேற்றியது முதல் அந்த வீடியோ வேகமாக வைரலானது. அந்த வீடியோவில், மாலை மாற்றும் விழா முடிந்து, மணமக்கள் இருவரும் அமர்ந்திருந்த நிலையில், மேடையில் மணப்பெண்ணிடம் ஆண் ஒருவர் கைத்துப்பாக்கியைக் கொடுக்கிறார். கொண்டாட்ட மனநிலையில் இருந்த மணமகள் ரக்னி, அந்தத் துப்பாக்கியால் வானை நோக்கி நான்கு முறைச் சுடுகிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதும், பலரும் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டுவருகின்றனர். சமூக வலைதளப் பயனர் ஒருவர் "இந்தியாவில் உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருக்கக் கூடாது. இது குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனப் பதிவிட்டு, காவல்துறையை டேக் செய்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து காவல்துறை, 'மனித உயிருக்கு அல்லது பிறரின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் துப்பாக்கியை அலட்சியமாகப் பயன்படுத்துபவர்கள் அல்லது கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபடுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனை வழங்கப்படும்' என்ற ஐபிசி-யின் பிரிவு 25 (9)-ன்கீழ் வழக்கு பதிவுசெய்தது.
மேலும், இது குறித்துப் பேசிய காவல்துறை அதிகாரி, "ஹத்ராஸ் சந்திப்புப் பகுதியில் வசிக்கும் ரக்னி மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக விசாரிக்கத் தொடங்கியதும், மணப்பெண் தலைமறைவாகிவிட்டார். அவரைத் தேடிவருகிறோம். மணப்பெண்ணிடம் கைத்துப்பாக்கியைக் கொடுத்த நபரையும் அடையாளம் காண முயன்றுவருகிறோம். எனவே, தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.