மகாராஷ்டிரா மாநிலம், சகிநாகா பகுதியில், 17 வயது சிறுமியின் தங்க நகை, ஐபோன் உள்ளிட்ட ரூ.80,000 மதிப்பிலான பொருள்களை ஒருவர் ஏமாற்றி எடுத்துச் சென்றுவிட்டதாக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறை குற்றவாளியைத் தேடிவந்தது. இந்த நிலையில், குஜராத் மாநிலத்தின் கெடா மாவட்டத்திலுள்ள கல்லூரி மாணவரை காவல்துறை கைதுசெய்தது. அதைத் தொடர்ந்து, நடந்த விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
``கல்லூரி மாணவர் ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டுமென விருப்பப்பட்டிருக்கிறார். அதற்காக அவர் நடத்தியதுதான் இந்த மோசடிகள். இது தொடர்பாக காவல்துறை தரப்பு, ``கடந்த ஆண்டு இந்தக் கல்லூரி மாணவனுக்கு சமூக வலைதளத்தின் மூலம் அறிமுகமான 17 வயது சிறுமி, ஆன்லைன் வேலை பெறுவதற்காக அவரின் உதவியை நாடியிருக்கிறார். மாணவர் பூல்சந்தனி அந்த சிறுமிக்கு உதவுவதாக தெரிவித்திருக்கிறார். இதனால் சிறுமியைப் பொதுவான இடத்தில் சந்தித்துப் பேசி, ஹோட்டலில் இருவரும் சாப்பிட்டிருக்கின்றனர். பிறகு அதே ஹோட்டலின் ஆறாவது மாடிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

அங்கு அந்த சிறுமியின் நகை, செல்போன் உள்ளிட்டவற்றைப் பெற்றுக்கொண்டு 'இங்கேயே இரு இதோ வருகிறேன்' என அங்கிருந்து தப்பித்துச் சென்றிருக்கிறார். அதற்குப் பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சிறுமி, தந்தையிடம் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகே எங்களிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்தச் சிறுமி மட்டுமல்லாமல், கடந்த மூன்று மாதங்களுக்குள் அகமதாபாத், ஜெய்ப்பூர், உதய்பூர் என வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த எட்டுப் பெண்களை அந்த மாணவர் ஏமாற்றியிருக்கிறார். இவர்களிடமிருந்து ஏமாற்றி அபகரித்த விலையுயர்ந்த பொருள்களை விற்று, கோவாவிலுள்ள சூதாட்ட விடுதிகளில் செலவழிப்பதுதான் பூல்சந்தனின் வழக்கம். இப்போதுகூட தகவல் தொழில்நுட்பத்தின் உதவியின் மூலமே அவரைக் கைதுசெய்தோம். அவரிடமிருந்து ஐந்து மடிக்கணினிகள், இரண்டு போன்கள், ஒரு ஏர்பாட், ஹெட்போன்கள், ஹார்டு டிஸ்க் என மொத்தம் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருள்களைப் பறிமுதல் செய்திருக்கிறோம்" என காவல்துறை தெரிவித்திருக்கிறது.