ஹரியானா மாநிலம், குருகிராமில் சில தினங்களுக்கு முன்பு, இளைஞர் ஒருவர் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதைத் தொடர்ந்து, காவல்துறை அதிகாரி குற்றம்சாட்டப்பட்டவர்மீது வழக்கு பதிவுசெய்து விசாரித்துவந்தார். இதற்கிடையே புகார் அளித்த பெண், பாலியல் புகாரை வாபஸ் பெற தன்னிடம் 10 லட்சம் ரூபாய் கேட்பதாகக் குற்றம்சாட்டப்பட்டவர் காவல் அதிகாரியிடம் தெரிவித்திருக்கிறார். பின்னர் விசாரணையில், அந்தப் பெண் போலியாகப் புகாரளித்து, பணம் பறிக்கும் நோக்கில் செயல்பட்டது தெரியவந்தது.

இந்தச் சம்பவம் குறித்து ஊடகங்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி, ``பாதிக்கப்பட்டவரும், குற்றம்சாட்டப்பட்டிருக்கும் பெண்ணும் ஏப்ரல் 13-ம் தேதி சவுத் சிட்டியிலுள்ள ஹோட்டல் அறையில், இருவருக்கும் பொதுவான நண்பர் அறிமுகப்படுத்தியதன் மூலம் சந்தித்திருக்கின்றனர். பிறகு அந்தப் பொதுவான நண்பர் அறையிலிருந்து வெளியேறிய பிறகு, இவர்கள் இருவரும் சில மணி நேரம் ஹோட்டல் அறையில் தங்கியிருந்தாகக் கூறப்படுகிறது.
அதற்கு அடுத்த நாள் அந்தப் பெண் காவல் நிலையத்தை அணுகி, ஹோட்டல் அறையில் தான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகப் புகாரளித்தார். அதைத் தொடர்ந்து அந்த ஆணும், `என்மீது குற்றம்சாட்டிய பெண் தனது புகாரை வாபஸ் பெறுவதற்காக, என்னிடம் 10 லட்சம் ரூபாய் கேட்கிறார்' எனப் புகாரளித்தார். இருவரிடமிருந்தும் புகார்கள் கிடைக்கப்பெற்ற பின்னர், அந்த நபரிடம் தொலைபேசியை வழங்கி குற்றம்சாட்டும் பெண்ணுடனான அவரது உரையாடலைப் பதிவுசெய்யும்படி கேட்டுக்கொண்டோம்.

அந்தப் பெண் உண்மையில் பாதிக்கப்பட்டவரிடம் பணம் கோரியது அவர்களின் உரையாடல் மூலம் உறுதியானது. அதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணுக்கு எதிராக எழுத்துபூர்வ புகார் பெற்று இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி) பிரிவு 389 (குற்றச்சாட்டுக்கு பயந்து ஒருவரை மிரட்டிப் பணம் பறித்தல்) கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்தார்.