வரதட்சணைக் கொடுமையால் நாட்டில் அன்றாடம் எத்தனையோ பெண்கள் தங்களது உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். அல்லது கொலை செய்யப்படுகின்றனர். மும்பை அருகிலுள்ள நவிமும்பை காமோட்டே என்ற இடத்தில் தன் கணவருடன் வசித்துவந்தவர் ஐஸ்வர்யா (28). இவருக்குக் கடந்த ஆண்டுதான் திருமணம் நடந்தது.
கணவன் வீட்டினர் ஐஸ்வர்யாவிடம் கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி கூறி சித்ரவதைச் செய்தனர். கணவரின் சகோதரி தூண்டுதலின்பேரில், ஐஸ்வர்யாவிடம் வீட்டிலிருந்து கூடுதல் நகை, பணம் ஆகியவற்றை வாங்கி வரும்படி அவரின் கணவர் கூறினார். அதோடு ஐஸ்வர்யாவை சதாராவிலுள்ள அவரின் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பிவைத்தார்.

மூன்று மாதங்கள் வீட்டிலிருந்த ஐஸ்வர்யாவை அவரின் தந்தை ராவ்ஜி வந்து சமாதானப்படுத்தி கணவன் வீட்டில் விட்டுச்சென்றார். மேலும், கூடுதல் வரதட்சணை கொடுக்க தற்போது தன்னிடம் பணம் இல்லை. மேலும் மூன்று பெண்களுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்றும் தன் நிலையைச் சொல்லிவிட்டுச் சென்றார்.
ஐஸ்வர்யா வீட்டில் அமர்ந்தபடி தன் லேப்டாப் மூலம் தந்தைக்கு ஃபேஸ்புக் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தார். தன் கணவர் வீட்டார் வரதட்சணைக் கேட்டு துன்புறுத்துவது குறித்து கூறிக்கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் `எனக்குச் சுதந்திரம் வேண்டும்’ என்று சொல்லிவிட்டு லேப்டாப்பை அப்படியே வைத்துவிட்டு ஐஸ்வர்யா எழுந்து சென்றார். அவர் சிறிது நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டதை ஐஸ்வர்யாவின் தந்தை பார்த்தார். உடனே ஐஸ்வர்யாவின் கணவருக்கு போன் செய்தார். ஆனால், லட்சுமண் போனை எடுத்துப் பேசவில்லை.

மகள் தற்கொலை செய்துகொண்டது குறித்து ஐஸ்வர்யாவின் தந்தை போலீஸில் புகார் செய்திருக்கிறார். அதனடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். போலீஸார் நடத்திய விசாரணையில் லட்சுமணுக்கு பல்லவி என்ற பெண்ணுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இது குறித்து பல்லவியிடம், ஐஸ்வர்யா சண்டையிட்டபோது அவரை பல்லவி கடுமையாகத் திட்டியதும் தெரியவந்திருக்கிறது. போலீஸார் இதுவரை யாரையும் கைதுசெய்யவில்லை.