டெல்லி தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி அளவுக்கு பணத்தை மிரட்டி பறித்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையிலிருக்கும் சுகேஷ் சந்திரசேகர், பாலிவுட் நடிகைகள் பலருக்கு கோடிக்கணக்கில் பணம் செலவு செய்திருக்கிறார். சிறையில் இருந்துகொண்டே மாடல் அழகிகள், நடிகைகளை வரவழைத்து அவர்களுக்குப் பரிசுப்பொருள்களையும், பணத்தையும் வாரி வழங்கியதாக விசாரணையில் தெரியவந்தது. இதில் அதிகம் பயனடைந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், மிரட்டி பணம் பறித்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவருக்குச் சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது.

இது தவிர நடிகை நோரா ஃபஹேதி இந்த வழக்கில் சாட்சியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். அமலாக்கப்பிரிவு, டெல்லி போலீஸார் இரண்டு நடிகைகளிடமும் பல முறை விசாரணை நடத்தியிருக்கின்றனர். இதில், ஜாக்குலின் பெர்னாண்டஸ் கொடுத்திருக்கிற வாக்குமூலம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதன் விபரம் இப்போது வெளியாகியிருக்கிறது.
அதில், `சுகேஷ் சந்திரசேகர் என்னுடைய வாழ்க்கையையே நகரமாக்கிவிட்டார். சுகேஷ் என்னை தவறாக வழிநடத்தி எனது தொழிலையும், வாழ்வாதாரத்தையும் நாசமாக்கிவிட்டார். சுகேஷ் தன்னை அரசு அதிகாரி என்று என்னிடம் அறிமுகப்படுத்திக்கொண்டார். என்னுடைய மேக்கப் ஊழியரிடம் பிங்கி இரானி என்பவர் பேசி, `சுகேஷ் சந்திரசேகர் உள்துறை அமைச்சகத்தின் முக்கிய அதிகாரி’ என்று கூறி நம்பவைத்த பிறகுதான் சுகேஷுடன் நான் பேச ஆரம்பித்தேன். சன் டி.வி-யின் உரிமையாளர் என்றும், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தன்னுடைய உறவினர் என்றும் தெரிவித்தார். தான் ஒரு ரசிகர் என்றும், நான் தென்னிந்திய மொழிப்படங்களில் நடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தான் சன் டி.வி உரிமையாளர் என்பதால் பல படங்கள் தயாரிக்க இருப்பதாகவும், இருவரும் சேர்ந்து தென்னிந்திய படங்களில் பணியாற்றலாம் என்றும் தெரிவித்தார்.
தினமும் இரண்டு பேரும் மூன்று முறை போன், வீடியோ காலில் பேசிக்கொள்வோம். காலையில் படப்பிடிப்புக்குச் செல்வதற்கு முன்பு ஒரு முறையும், பகலில் ஒரு முறையும், உறங்கச் செல்லும் முன்பு ஒரு முறையும் போனில் பேசிக்கொள்வோம். பேசும்போது ஒரு முறை கூட சிறையிலிருந்து பேசுவதாக என்னிடம் தெரிவித்ததில்லை. சிறையில் இருப்பதாகச் சொல்லவும் இல்லை. கடைசியாக 2021-ம் ஆண்டு, ஆகஸ்ட் 8-ம் தேதி பேசினோம். அதன் பிறகு அவர் என்னைத் தொடர்புகொள்ளவில்லை. அதன் பிறகுதான் உள்துறை, சட்ட அமைச்சக அதிகாரி என்று கூறி ஏமாற்றி சிறையில் இருப்பதைத் தெரிந்துகொண்டேன்.

சுகேஷும், பிங்கி இரானியும் எப்போதும் என்னை ஏமாற்றும் எண்ணத்தில் இருந்தனர். சேகர் (சுகேஷ்) என்னை முட்டாளாக்கிவிட்டார். சுகேஷின் குற்றப்பின்னணி குறித்து தெரியவந்தபோதுதான் அவரின் உண்மையான பெயர் சுகேஷ் என்று தெரிந்துகொண்டேன். அவரின் செயல்பாடுகள், பின்னணி குறித்து பிங்கிக்குத் தெரியும். ஆனால், அந்தத் தகவல்களை என்னிடம் சொல்லாமல் மறைத்துவிட்டார். நான் கேரளாவுக்குச் சென்றபோது என்னிடம் தனது விமானத்தைப் பயன்படுத்தும்படி சுகேஷ் கேட்டுக்கொண்டார். அதோடு கேரளாவில் பயணம் செய்ய ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்துகொடுத்தார். சென்னைக்குச் சென்று அவரை இரண்டு முறை சந்தித்தேன். இரண்டு முறையும் அவரின் விமானத்தில்தான் சென்றுவந்தேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஜாக்குலின் பெர்னாண்டஸ் மட்டுமல்லாது அவரின் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் சுகேஷ் பண உதவி செய்திருக்கிறார். இப்போது ஜாக்குலின், வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.