கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில், கடந்த ஓராண்டாக, ஷேர் மார்க்கெட், கிரிப்டோகரன்சி, `வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்' எனப் பல வகைகளில் பேராசையைத் தூண்டி, நூதன மோசடிகள் நடப்பது அதிகரித்துவருகிறது. இப்படியான நிலையில், நேற்று, ‘சதுரங்க வேட்டை’ பட பாணியில், ஓசூரில் பெண்ணிடம் நூதன முறையில், ரூ.6.9 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த மத்திகிரியைச் சேர்ந்த சுந்தரேசன் மகள் சுமதி (28). இவர் பெங்களூரிலுள்ள தனியார் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராகப் பணியாற்றிவருகிறார். இவரது மொபைல் எண்ணுக்கு, சில வாரங்களுக்கு முன்பு தொடர்புகொண்ட மோசடிக் கும்பல், ‘லோ இன்வெஸ்ட்மென்ட், ஹை ரிட்டர்ன்ஸ்’ எனக் கூறி, சுமதியிடம் சிறிது சிறிதாகப் பணத்தை பெற்றிருக்கிறது. நிறைய பணம் கிடைக்கும் என்ற ஆசையில், ஒருகட்டத்தில் சுமதி, ரூ.6.9 லட்சம் ரூபாயை அவர்கள் சொன்ன வங்கிக் கணக்குக்குச் செலுத்தியிருக்கிறார்.

கமிஷன் வராததால் அதிர்ச்சியடைந்து அந்த எண்ணுக்குத் தொடர்புகொண்டபோது ஸ்விட்ச் ஆஃப் என வந்ததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுமதி, கிருஷ்ணகிரி சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் செய்தார். போலீஸார் சம்பவம் குறித்து விசாரித்துவருகின்றனர்.
போராசை பெரும் நஷ்டம்!
இது குறித்து, கிருஷ்ணகிரி சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் காந்திமதி நம்மிடம், ‘‘குறைந்த முதலீடு செய்தால், அந்தப் பணத்தைவைத்து தொழில் தொடங்கியும், ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தும் அதிக வருவாய் தருவதாகக் கூறிய மோசடிக் கும்பல், சுமதி மொபைலுக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறது. சுமதி பணம் கொடுத்தபோது, அந்த மோசடிக் கும்பல் சில நாள்களுக்கு சிறிய அளவில் கமிஷன் தொகையை சுமதிக்கு அனுப்பி, நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

சுமதி நிறைய சம்பாதிக்க வேண்டுமென்ற ஆசையில் மொத்தமாக, 6.9 லட்சம் ரூபாய் வரையில் செலுத்தியதும், அந்தக் கும்பல் மோசடி செய்திருக்கிறது. மோசடிக் கும்பலைத் தேடிவருகிறோம். இது போன்றவர்கள் பல வகைகளில், மக்களின் பேராசையைத் தூண்டி பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திவருகின்றனர். மக்கள் உஷாராக இருக்க வேண்டும்’’ என்றார் விரிவாக.