விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகிலுள்ள பகுதி எக்கியார்குப்பம். கடந்த 13-ம் தேதி, இந்தப் பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்தவர்கள் ஒருவர் மாற்றி மற்றொருவர் என்று மயங்கி விழுந்திருக்கிறார்கள். அதேபோல, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகிலுள்ள சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் மயங்கி விழுந்திருக்கிறார்கள். இந்த இரண்டு இடங்களிலும் கள்ளச்சாராயம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் 50-ம் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த இரண்டு இடத்திலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது. இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணமும், சிகிச்சையிலிருக்கும் நபர்களுக்கு 50,000 ரூபாய் நிவாரணமும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. எத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தைக் குடித்ததே மரணத்துக்குக் காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
கள்ளச்சாராயம் குடித்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையிலிருக்கும் நபர்களை முதல்வர் ஸ்டாலின் நேரடியாகச் சென்று பார்த்துவந்தார். அடுத்ததாக இந்தச் சம்பவம் தொடர்பாக முதல்வர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், "எத்தனால் பயன்பாட்டைக் கண்காணிக்க வேண்டும். மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலர்கள் கூடுதல் கவனத்துடன் பணியாற்ற வேண்டும். சரியாகப் பணியாற்றாத காவலர்கள்மீது துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்பது உட்பட பல்வேறு விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டது.
ஏற்கெனவே இந்தக் கள்ளச்சாராயம் உயிரிழப்பு விவகாரத்தில், மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வடிவழகன், உதவி ஆய்வாளர்கள் தீபன், சிவகுருநாதன், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் மரியா உட்பட நான்கு காவலர்கள்மீது துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில், முதல்வர் ஆய்வுக்கூட்டம் முடிந்த பின்னர், விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா, செங்கல்பட்டு எஸ்.பி பிரதீப் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாகச் சிறப்பு தேடுதல் வேட்டை நடத்த டி.ஜி.பி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். ஒரே நாளில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் 22 சாராய வியாபாரிகள் கைதுசெய்யப்பட்டு, 226 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அதேபோல, விழுப்புரம் மாவட்டத்தில் 57 வியாபாரிகள் கைதுசெய்யப்பட்டு 109 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
மொத்தமாக 247 கள்ளச்சாராய வியாபாரிகள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 6,000 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அனைத்து மாவட்டங்களில் நடைபெறும் சிறப்புக் கூடுதல் வேட்டையில் இன்னும் பல சட்டவிரோத சாராய வியாபாரிகள் சிக்கக்கூடும் என்று காவல்துறை வட்டாரம் தகவல் தெரிவித்திருக்கிறது. அதே சமயத்தில், இந்த உயிரிழப்புகளுக்கு முன்பாகவே இந்த நடவடிக்கையை எடுத்திருந்தால் இத்தனை உயிர்கள் பலியாகியிருக்காதே என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
தமிழகத்தில் திரும்பும் இடமெல்லாம் அரசு டாஸ்மாக் இருக்கும்போது கள்ளச்சாராய விற்பனை அதிகரிக்க என்ன காரணம் என்பது தொடர்பாக, தகவலறிந்த வட்டாரத்தில் பேசினோம். "டாஸ்மாக் மதுவைவிட கள்ளச்சாராயத்தின் விலை மிகவும் குறைவு என்பது முதல் காரணம். அதைத் தாண்டி, கள்ளச்சாராயத்தில் போதை அதிகம் என்பது ஒரு முக்கியக் காரணம். ஆனால், மக்கள் இதில் இருக்கும் ஆபத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரைக் கள்ளச்சாராயம் தடைசெய்யப்பட்ட ஒன்றாக இருந்தாலும், இன்றளவும் பல்வேறு இடங்களில் சாராய விற்பனை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இது அந்தப் பகுதியில் இருக்கும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலர்களுக்கும் நன்கு தெரியும்.

இருந்தபோதிலும், பல்வேறு பகுதிகளில் இருவருக்கும் உள்ள புரிதல் காரணமாகச் சாராய விற்பனை தங்குதடை இல்லாது நடைபெற்று வருகிறது. சாராய வியாபாரிகளின் நெட்ஒர்க் எப்படிப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். காரணம் தங்கு தடையின்றி ஓர் இடத்தில் உற்பத்தி செய்து, சிக்காமல் பிற இடங்களுக்குக் கொண்டுசெல்கிறார்கள்.
தமிழக அரசு விரைவில் 500 டாஸ்மாக் கடைகளை மூடவிருக்கிறது. இதனால் அந்தப் பகுதிகளில் சாராய விற்பனை அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது. காவல்துறை இனியாவது இந்தக் கள்ளச்சாராய விற்பனைக்கு ஒரு நிரந்தர முடிவை ஏற்படுத்த வேண்டும்" என்றார்கள் விரிவாக.