நெல்லை மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இம்ரான் கான் (34), ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். அவரின் மனைவி சஜிதா பேகம் (25). நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த சஜிதா பேகத்துடன் இம்ரான் கானுக்கு எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கிறது. இந்தத் தம்பதிக்கு ஆண், பெண் என இரு குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் கணவனே மனையியைக் கொலைசெய்த கொடூரம் நடந்திருக்கிறது.

ரியல் எஸ்டேட் செய்துவந்த இம்ரான் கானுக்கு தொழிலில் சறுக்கல் ஏற்பட்ட நிலையில், குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அடிக்கடி கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்ட நிலையில், சில வாரங்களுக்கு முன்பு சஜிதா பேகம் தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு டவுனிலுள்ள தாய் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.
மனைவி பிரிந்து சென்ற நிலையில், இம்ரான் கானின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. நாளுக்கு நாள் அவரது நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்ததால், அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்துவந்திருக்கின்றனர்.

இந்த நிலையில், நேற்று (22-ம் தேதி) மாலை மனைவியின் வீட்டுக்குச் சென்ற இம்ரான் கான், தனது செயல்களுக்கு வருத்தம் தெரிவித்து மனைவியிடம் அன்பாகப் பேசியிருக்கிறார். `இனிமேல் இருவரும் குழந்தைகளுடன் ஒற்றுமையுடன் நிம்மதியாக வாழலாம்’ என அவர் பேசியதை சஜிதா பேகம் நம்பியிருக்கிறார்.
பின்னர் மனைவியை பேட்டையிலுள்ள தர்காவுக்கு அழைத்திருக்கிறார். அங்கு சென்று வழிபட்டால் குடும்பப் பிரச்னைகள் தீர்ந்து நிம்மதியாக வாழலாம் என தெரிவித்திருக்கிறார். அதை நம்பிய சஜிதா பேகம் அவருடன் தர்காவுக்குச் சென்றிருக்கிறார். இருவரும் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோது இம்ரான் கான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியைச் சரமாரியாகக் குத்தியிருக்கிறார்.

ரத்தவெள்ளத்தில் துடித்த மனைவியை அங்கேயே போட்டுவிட்டு வெளியே வந்து இம்ரான் கான் தனது இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். தர்கா உள்ளே அலறல் சத்தம் கேட்டதால் அந்தப் பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்திருக்கின்றனர். பைக்கில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சென்ற நபரை அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்ததுடன் மடக்க முயன்றனர். ஆனால், அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
அந்தப் பகுதியில் இருந்தவர்கள் சஜிதா பேகத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த கொலைச் சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டதும் பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

இதற்கிடையே, கொலை செய்த இம்ரான் கான் ரத்தம் தோய்ந்த கத்தியுடன் பேட்டை காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைந்தார். மனைவி மீதான சந்தேகத்தின் காரணமாக கொலைசெய்ததாக போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், சிறையில் அடைத்தனர்.