ஹைதராபாத் சதர்காட் அருகேயுள்ள முசி நதிக் கால்வாய்ப் பகுதியில் கடந்த 18-ம் தேதி, துண்டிக்கப்பட்ட பெண் தலை கிடந்தது. இதைக் கண்டு திடுக்கிட்ட அந்தப் பகுதிவாசிகள், உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்துவந்து தலையை மீட்டு கொலைசெய்யப்பட்டவர் யார், எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என விசாரிக்கத் தொடங்கினர். கொடூரக் கொலையாளியைப் பிடிக்கவும் எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது. தலை கிடைத்த சுற்றுப்புறப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில், மே 10-ம் தேதி தொடங்கி மே 17-ம் தேதி வரை பதிவாகியிருந்த காட்சிகளை போலீஸார் ஆய்வுசெய்து, சந்தேகத்துக்குரிய நபர்களை விசாரிக்கத் தொடங்கினர்.

அதில், ஹைதராபாத் அருகேயுள்ள சைதன்யபுரியைச் சேர்ந்த 48 வயதுடைய சந்திரமோகன் என்பவர் சந்தேகத்துக்குரிய வகையில் அடையாளம் காணப்பட்டார். கறுப்பு நிற பாலிதீன் கவரில், அவர் எதையோ எடுத்துச்செல்வதும், வழியிலுள்ள ஒரு கடையில் டிஜிட்டல் பேமென்ட் முறையில் சிகரெட் வாங்கிக்கொண்டு ஆட்டோவில் ஏறுவதும், தலை கிடந்த கால்வாய்ப் பகுதியோரம் இறங்கிச்செல்வதும் தெளிவாகப் பதிவாகியிருந்தது.
இதையடுத்து, சந்திரமோகனைத் தேடிப்பிடித்த போலீஸார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். கொலையை ஒப்புக்கொண்ட சந்திரமோகன், கொலைசெய்யப்பட்ட பெண் 55 வயதுடைய எர்ரம் அனுராதா என்பதையும் தெரியப்படுத்தினார். அடுத்தடுத்து அவர் கூறிய தகவல்களும், மற்ற உடல் பாகங்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்த இடங்களும் அதிர்ச்சி ரகம். திரைப்பட திரில்லர் காட்சிகளையே மிஞ்சும் அளவுக்கு இந்தக் கொலைச் சம்பவம் நிகழ்த்தப்பட்டிருப்பதாகத் திகிலூட்டுகிறது ஹைதராபாத் போலீஸ்.
இது பற்றி போலீஸ் தரப்பில், ``சந்திரமோகன் ஆன்லைன் பங்குச்சந்தை முதலீட்டில் ஆர்வம் கொண்டவர். சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சந்திரமோகனின் தந்தைக்கு தீகிலகுடா பகுதியிலுள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது, அங்கு நர்ஸாகப் பணிபுரிந்த அனுராதாவுடன் சந்திரமோகனுக்குப் பழக்கம் ஏற்பட்டது. அனுராதாவின் கணவர் பல வருடங்களுக்கு முன்னரே இறந்துவிட்டார். அவருக்குப் பிறந்த ஒரு மகளும் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். தனிமையில் இருந்த அனுராதா, சந்திரமோகனுடன் நெருக்கமாகப் பழகியிருக்கிறார்.
இதையடுத்து, சைதன்யபுரி பகுதியிலுள்ள தனது வீட்டின் கீழ்த் தளத்திலேயே அனுராதாவை வாடகைக்கு தங்கவைத்துக்கொண்டார் சந்திரமோகன். அனுராதாவிடம் நிறைய பணப்புழக்கமும் இருந்ததால், வட்டிக்கு விடும் தொழிலையும் அவர் செய்துவந்தார். இதனால், அடிக்கடி கடனாகவும் பணம் வாங்கியிருக்கிறார் சந்திரமோகன். சுமார் ரூ.7 லட்சம் வரை கடன் வாங்கி பங்குச்சந்தையில் முதலீடு செய்த சந்திரமோகனுக்கு நஷ்டம் ஏற்பட்டதால், பணத்தை அவரால் திரும்பத் தர முடியவில்லை.

இதனால், இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது. ஒருகட்டத்தில், ஆத்திரமடைந்த சந்திரமோகன் கடந்த 12-ம் தேதி, வீட்டிலிருந்த அனுராதாவை கத்தியால் குத்திக் கொலைசெய்தார். நெஞ்சுப் பகுதியிலும், வயிற்றிலும் கத்திக்குத்து ஆழமாக இறங்கியதால், சில நிமிடங்களிலேயே அனுராதா துடிதுடித்து இறந்துபோனார். பின்னர், கொலையை மறைக்கத் திட்டமிட்ட சந்திரமோகன் உடலை எப்படி அகற்றுவது என கூகுளில் தேடிப் பார்த்திருக்கிறார்.
உடலைத் துண்டு துண்டாகக் கூறுபோட்டு வீசினால் மட்டுமே தப்பிக்க முடியும் எனத் திட்டமிட்டிருக்கிறார். அதன்படி, கடைக்குச் சென்று கல் வெட்டும் இயந்திரத்தை வாங்கிக்கொண்டு வந்து, தலையை முதலில் துண்டித்து எடுத்திருக்கிறார். பின்னர், இரண்டு கைகள், இரண்டு கால்களையும் துண்டாகக் கூறுபோட்டிருக்கிறார். மீதமிருந்த நெஞ்சுப் பகுதியையும் இரண்டு துண்டுகளாக வெட்டியிருக்கிறார். கறுப்பு கலர் பாலிதீன் கவர்களையும் வாங்கி வந்து, ஆறு துண்டுகளாக வெட்டப்பட்ட கை, கால், உடல் பாகங்களை அதில்போட்டு ஃபிரிட்ஜில் வைத்திருக்கிறார்.

தலையை மட்டும் மூன்று நாள்கள் கழித்து முசி நதிக் கால்வாயில் வீசியிருக்கிறார். மற்ற உடல் பாகங்களிலிருந்து துர்நாற்றம் வீசாமலிருக்க வாசனைத் திரவியங்கள், பினாயில், கற்பூரம் என பல ரசாயனங்களையும் பயன்படுத்தியிருக்கிறார். அதோடு, கொலையுண்ட அனுராதாவின் உறவினர்கள், வெளிநாட்டில் வசிக்கும் அவரின் மகளுக்குச் சந்தேகம் வராமலிருக்க அனுராதாவின் செல்போனில் எண்ணிலிருந்தே அவர்களுக்கு மிஸ்டு கால், மெசேஜ் அனுப்பிவந்திருக்கிறார்.
இதனால், அவர் குடும்பத்தினருக்கு அனுராதா கொலைசெய்யப்பட்ட விவகாரமே ஒருவாரத்துக்குமேல் தெரியாமலிருந்திருக்கிறது’’ என்று ‘பகீர்’ கிளப்பிய போலீஸார், ஆறு துண்டுகளாகக் கூறுபோட்டு ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த மற்ற உடல் பாகங்களையும் கைப்பற்றி, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்திருக்கின்றனர். இதையடுத்து, நீதிமன்றக் காவலில் சந்திரமோகனும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்தக் கொடூரச் சம்பவம், ஹைதராபாத் தலைநகரையே திடுக்கிடச் செய்திருக்கிறது.