இந்திய தொல்லியல்துறையில் பழங்காலச் சிலைகளை பதிவுசெய்த நபர்களின் பட்டியலை டிசம்பர் 7-ம் தேதி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள முகவரியில் வசிக்கும் ஒருவர், சில சிலைகளைப் பதிவுசெய்திருந்தார். அவை கோயில்களிலிருந்து திருடப்பட்ட சிலைகள் என சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்குத் தெரியவந்தது. அது தொடர்பாக விசாரிக்க சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் டி.ஜி.பி ஜெயந்த் முரளி, ஐ.ஜி தினகரன் ஆகியோர் உத்தரவிட்டனர். அதன்பேரில் டி.எஸ்.பி-க்கள் முத்துராஜா, மோகன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படை போலீஸார் ஆர்.ஏ.புரத்துக்குச் சென்று விசாரித்தனர். அந்த வீட்டில் வசித்துவந்த ஷோபா துரைராஜனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் தன்னிடமுள்ள சிலைகள் குறித்த விவரங்களையும், அவற்றை வாங்கிய தகவலையும் போலீஸாரிடம் தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் ஷோபா துரைராஜிடம், ``உங்களிடம் இருக்கும் சிலைகளில் சில சிலைகள் கோயில்களிலிருந்து திருடப்பட்டவை" என்ற தகவலைத் தெரிவித்தனர். அதைக் கேட்டு ஷோபா அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து சிலைகள் திருடப்பட்ட விவரத்தையும் போலீஸார் ஷோபாவிடம் விரிவாக எடுத்துக் கூறினர். அதை க்கேட்ட ஷோபா, தன்னிடமுள்ள சிலைகளை போலீஸாரிடம் திருப்பிக் கொடுக்கச் சம்மதித்தார்.
இதையடுத்து ஷோபா வீட்டிலிருந்து ஆதி கேசவ பெருமாள் சிலை, ஸ்ரீதேவி சிலை, பூதேவி சிலை, அஸ்திர தேவர் சிலை, அம்மன் சிலை, வீரபத்ரா சிலை, மகாதேவி சிலை ஆகியவற்றை போலீஸார் மீட்டனர். பின்னர் அந்தச் சிலைகள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது விஷ்ணு, ஸ்ரீதேவி சிலைகளில் உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ கோயில் என்று பொறிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதையடுத்து சம்பந்தப்பட்ட கோயிலுக்குச் சென்ற டி.எஸ்.பி முத்துராஜா தலைமையிலான போலீஸார், அங்குள்ள கோயில் ஊழியர்களிடம் விசாரித்தனர். அப்போது 10.7.2011-ம் ஆண்டு இந்த இரண்டு சிலைகளும் திருடப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் அப்போதே கோயில் தரப்பில் புகாரளிக்கப்பட்டிருந்தது. ஆனால் சிலைகளை போலீஸார் கண்டுபிடிக்க முடியாததால் அந்த வழக்கை முடித்து வைத்திருக்கிறார்கள். இதையடுத்து கோயிலுக்குச் சொந்தமான சிலைகளை போலீஸார் ஒப்படைத்தனர். இந்தச் சிலைகளின் சர்வதேச மதிப்பு 5 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இது குறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், ``சென்னையில் சிலைகளை வைத்திருந்த ஷோபா, கலைப் பொருள்களை சேகரிப்பதைத் தன்னுடைய பொழுதுபோக்காக வைத்திருந்ததால் கடந்த 2008-ம் ஆண்டு மற்றும் 2015-ம் ஆண்டு அபர்ணா ஆர்ட் கேலரியிலிருந்து தீனதயாளன் என்பவர் மூலம் இந்தச் சிலைகளை வாங்கியிருக்கிறார். அந்தச் சிலைகளை அவர் வீட்டில் பாதாள அறையில் (ரகசிய அறை) வைத்திருந்தார். இந்தச் சிலைகள் கோயில்களில் திருடப்பட்டவை என்று ஷோபாவுக்குத் தெரியவில்லை. அதனால்தான் தன்னிடமுள்ள ஆவணங்கள் அடிப்படையில் சிலைகளை 2013-ம் ஆண்டு பதிவுசெய்து வைத்திருக்கிறார். ஷோபாவிடம் சிலைகளை விற்ற தீனதயாளன் மீது ஏற்கெனவே சிலைகளைத் திருடியதாக வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. சிலைக் கடத்தல் மன்னன் தீனதயாளன் உயிரோடு இல்லை. அதனால், அபர்ணா ஆர்ட் கேலரியின் ஊழியர்களிடம் இந்தச் சிலைகள் குறித்து விசாரிக்க முடிவு செய்திருக்கிறோம். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஷோபாவிடம் விசாரித்தவுடன் அவர், தன்னிடமிருந்த சிலைகளை எங்களிடம் ஒப்படைக்கச் சம்மதித்தார். மீட்கப்பட்ட இரண்டு சிலைகள் குறித்த தகவல் தெரியவந்திருக்கிறது. மீதமுள்ள சிலைகள் எந்தெந்தக் கோயில்களிலிருந்து திருடப்பட்டவை என்று விசாரணை நடந்துவருகிறது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு கோயிலில் திருடப்பட்ட சிலைகள் குறித்து துப்பு கிடைத்திருக்கிறது. மீட்கப்பட்ட சிலைகளின் புகைப்படங்களை இந்து சமய அறநிலையத்துறைக்கு அனுப்பிவைத்திருக்கிறோம். அவர்கள் அளிக்கும் தகவலின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.