கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகரத்துக்குட்பட்ட புதுப்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி, அதே பகுதியிலிருக்கும் பிரைமரி, நர்சரி பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துவந்தார். கடந்த 11-ம் தேதியன்று வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற சிறுமி, மாலை வீட்டுக்கு வரும்போது தொடர்ச்சியாக அழுதுகொண்டிருந்தார். அதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், என்னவென்று கேட்டபோது, பிறப்புறுப்பைக் காட்டி `வலிக்கிறது...' என்று அழுது துடித்திருக்கிறார். பிறப்புறுப்பில் ரத்தம் வந்துகொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்துபோன பெற்றோர், உடனடியாக அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். ஆனால் `சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை நடந்திருக்க வாய்ப்பிருப்பதால், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்’ என்று அங்கிருந்த மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.

அதையடுத்து சிறுமியை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியிடம் பேசிய மருத்துவர்கள், `சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது' என அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் மருத்துவமனைக்கு விரைந்த அனைத்து மகளிர் காவல்துறையினர், சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, “ஸ்கூல்ல இருக்குற சார், என்ன தப்பா தொட்டுக்கிட்டே இருந்தாரு... நா வலிக்குதுன்னு சொல்லியும் அவரு விடவேயில்லை" என்று விவரிக்க, நிலைகுலைந்து போயிருக்கின்றனர் காவல்துறையினர். அதனடிப்படையில் சிறுமியைக் காண மருத்துவமனைக்கு வந்திருந்த பள்ளியின் உரிமையாளரும், விருத்தாசலம் 30-வது வார்டின் தி.மு.க கவுன்சிலருமான பக்கிரிசாமியை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
ஆனால், ”அந்தச் சிறுமி எனக்கு பேத்தியைப் போன்றவள்... நான் எப்படி..?" என்று பேசியதால், காவல்துறையினரும் லேசாக குழம்பிப்போனார்கள். இதற்கிடையில் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானதால், அலர்ட்டான போலீஸார், பக்கிரிசாமி உள்ளிட்ட நான்கு ஆசிரியர்களின் போட்டோவை சிறுமியிடம் காட்டியிருக்கின்றனர். அப்போது தன்னிடம் தவறாக நடந்துகொண்டது இவர்தான் என்று பக்கிரிசாமியை அடையாளம் காட்டி, வாக்குமூலம் கொடுக்க அவரை அப்படியே அமரவைத்த போலீஸார், தங்கள் பாணியில் விசாரணை செய்தபோதுதான் உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார் பக்கிரிசாமி. தொடர்ந்து தங்கள் மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த பக்கிரிசாமிமீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகாரளித்தனர்.

அதனடிப்படையில் பக்கிரிசாமிமீது போக்சோ வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று காலை தி.மு.க-வின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், “கடலூர் மேற்கு மாவட்டம், விருத்தாசலம் நகராட்சியின் 30-வது வார்டு நகரமன்ற உறுப்பினர் பக்கிரிசாமி கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்கிவைக்கப்படுகிறார்” என்று குறிப்பிட்டிருந்தார். அதையடுத்து இன்று காலை சட்டப்பேரவையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி, “கடலூர், நர்சரிப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தை வயிற்றுவலியால் துடித்தநிலையில், குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

பள்ளியின் உரிமையாளர், தி.மு.க-வின் நகர்மன்ற உறுப்பினரை குழந்தை அடையாளம் காட்டியிருக்கிறது” என்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அதேபோல விருத்தாசலம் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணனும் இதே விவகாரத்தை வலியுறுத்தி கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், மனிதகுலத்துக்கு அவமானச் சின்னம். விருத்தாசலத்தில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளர் பக்கிரிசாமிமீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவர் தி.மு.க-வைச் சேர்ந்தவர் எனத் தெரிந்ததும், உடனடியாக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டிருக்கிறார்” என்று தெரிவித்தார்.