கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டம், திரூரைச் சேர்ந்தவர் சித்திக் (58). இவருக்கு ஷக்கீலா என்ற மனைவியும், நான்கு பிள்ளைகளும் இருக்கின்றனர். கோழிக்கோடு மாங்காவு பகுதியில், `சிக் பக்’ என்ற பெயரில் ஹோட்டல் நடத்திவந்தார் சித்திக். இவரைக் கடந்த 18-ம் தேதி முதல் காணவில்லை என 22-ம் தேதி அவருடைய மகன் ஷகத், திரூர் போலீஸில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து போலீஸார் சித்திக்கின் செல்போன் டவர் லொகேஷனை சோதனை செய்தபோது, கோழிக்கோடு இரிஞ்ஞிப்பாலம் டீக்காஷா என்ற தனியார் ஹோட்டலில் அவர் கடைசியாகச் சென்றது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தியதில் கடந்த 18-ம் தேதி அவர் அந்த ஹோட்டலில் இரண்டு ரூம்களை புக் செய்ததாகவும், அதன் பிறகு அவரைக் காணவில்லை என்பதும் தெரியவந்தது. இதற்கிடையே அந்த ஹோட்டல் அருகிலுள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்த்தபோது 19-ம் தேதி மதியத்துக்கு மேல் ஓர் ஆணும், ஒரு பெண்ணும் ட்ரோலி பேக்குகளைக் கொண்டு செல்வது தெரியவந்தது. அவர்கள் குறித்து விசாரித்ததில் அவர்களில் ஒருவர் சித்திக்கின் ஹோட்டலில் வேலை செய்த ஷிபிலி (22) எனவும், அவருடன் சென்றது தோழியான பர்ஹானா (18) எனவும் தெரியவந்தது.
அவர்கள் ரயிலில் சென்னைக்குத் தப்பிச் சென்றதும் தெரியவந்தது. கேரளா போலீஸார் கொடுத்த தகவலின்பேரில் சென்னை ரயில்வே போலீஸார் ஷிபிலி, பர்ஹானா ஆகியோரைக் கைதுசெய்தனர். பின்னர் அவர்கள் கேரளா போலீஸில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், இவர்களுக்கு உதவிய ஆஷிக் என்பவரும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

ஷிபிலி, பர்ஹானா உள்ளிடோர் கூறியதன் அடிப்படையில் அட்டப்பாடியில் 50 அடி ஆழமுள்ள தண்ணீர் செல்லும் பாறை இடுக்கிலிருந்து இரண்டு ட்ராலி பேக்குகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த பேக்குகளில் சித்திக்கின் உடல் பாகங்கள் இருந்தன. உடலை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். முதற்கட்ட பிரேதபரிசோதனையில் அவர் இறந்து ஏழு நாள்கள் ஆனதாகவும். அவரது பின்தலையில் பலமாகக் காயம் ஏற்பட்டிருப்பதும். எலெக்ட்ரிக் கட்டர் மெஷின் மூலம் உடல் பாகங்கள் துண்டாக்கப்பட்டதும் தெரியவந்திருக்கிறது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "சித்திக்கின் ஹோட்டலில் இந்த மாதம் தொடக்கத்தில் ஷிபிலி என்பவர் வேலைக்குச் சேர்ந்தார். சித்திக் இல்லாத சமயத்தில் அவரது கல்லாப்பெட்டியிலிருந்து ஷிபிலி பணம் எடுத்திருக்கிறார். அதைக் கண்டித்த சித்திக், கடந்த 18-ம் தேதியே ஷிபிலியை வேலையிலிருந்து நீக்கிவிட்டார். அடுத்த அரை மணி நேரத்தில் சித்திக்குக்கு தொடர்ச்சியாக போன் வந்திருக்கிறது. பின்னர் அவர் புறப்பட்டு கோழிக்கோடு இரிஞ்ஞிப்பாலத்திலுள்ள டீக்காஷா ஹோட்டலுக்குச் சென்றிருக்கிறார். அந்த ஹோட்டலில் இரண்டு அறைகளை புக் செய்து பணமும் கொடுத்திருக்கிறார் சித்திக். அதில் ஓர் அறையில் ஷிபிலியும் பர்ஹானாவும் தங்கியிருந்தனர்.

இந்த நிலையில் 18-ம் தேதிக்கும் 19-ம் தேதிக்கும் இடையே சித்த்திக் கொலைசெய்யப்பட்டிருக்கிறார். அவரது உடலைத் துண்டுகளாக்கி ட்ராவல் பேக்குகளில் அடைத்து மே 19-ம் தேதி மதியம் 3 மணியளவில் சித்திக்கின் காரிலேயே எடுத்துச் சென்றிருக்கின்றனர். பின்னர் அட்டப்பாடி பகுதியில் இரண்டு பேக்குகளையும் வீசியிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து காரை செறுதுருத்தி பகுதியில் விட்டுவிட்டு சொர்னூர் ரயில் நிலையத்திலிருந்து ரயிலேறி சென்னைக்குச் சென்றிருக்கின்றனர். இவர்களுக்கு உதவிய ஆஷிக் என்பவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவரிடமும் விசாரணை நடந்துவருகிறது. இதில் இன்னும் பல மர்ம முடிச்சுகள் அவிழ வேண்டியிருக்கின்றன" என்றனர்.