நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் நேற்று முன்தினம் அதிகாலை, தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு அழைத்துவரப்பட்ட வாணியம்பாடியைச் சேர்ந்த மருத்துவர் சஃபியிடம் இரண்டு நாள்களாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

`நீட் தேர்வு' ஏஜென்ட் ரஷித் என்பவரை அறிமுகம் செய்து வைத்தவர் என உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசன் கொடுத்த தகவலின் அடிப்படையில் வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூரில் மருத்துவமனை வைத்துள்ள மருத்துவர் சஃபியை கைது செய்தது சி.பி.சி.ஐ.டி!
மேலும், சஃபியின் மகன் இர்ஃபான், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில்தான், இர்ஃபான் தலைமறைவானார். அவரைத் தேடுவதில் தீவிரம் காட்டிய சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்தச் சூழலில் நேற்று, சேலம் நீதிமன்றத்தில் இர்ஃபான் சரணடைந்தார். இந்நிலையில், தங்களது கஸ்டடியில் இருக்கும் சஃபியிடம், நீட் ஏஜென்ட் குறித்த தகவல்களைத் திரட்டிவருகிறது சி.பி.சி.ஐ.டி.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய சி.பி.சி.ஐ.டி அதிகாரி ஒருவர், ``சஃபியிடம் விசாரணை நடந்து வருகிறது. தனக்கு, கோவிந்தராஜன் என்ற ஒருவர் அறிமுகம் ஆனார். அவர் மூலமாகத்தான் நீட் ஏஜென்ட் ரஷித் அறிமுகம் கிடைத்தது எனக் கூறினார் சஃபி. அவரிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் வாணியம்பாடியைச் சேர்ந்த கோவிந்தராஜனை பிடித்துவிட்டோம். நேற்று இரவு அவர், சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு அழைத்துவரப்பட்டார். இருவரிடமும் விசாரணை நடந்துவருகிறது. ஏஜென்ட் ரஷித் குறித்த தகவல்களை பெற்றுவருகிறோம். ஒருபுறம் ரஷித்தைத் தேடும் பணியும் நடந்துவருகிறது. விரைவில் ரஷித் கைது செய்யப்படுவார்” என்றார்.