தென் கொரியா நாட்டில், 60 வயது முதியவர் ஒருவர் 1,000 நாய்களைக் கொன்ற கொடிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
இது குறித்து வெளியான தகவலின்படி, தென் கொரியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட ஜியோங்கி (Gyeonggi) மாகாணத்தின், யாங்பியோங் (Yangpyeong) பகுதியில் உள்ளூர்வாசி ஒருவர் தன்னுடைய நாயைத் தேடிக்கொண்டிருந்தபோது, இத்தகைய திகில் சம்பவத்தைக் கண்டிருக்கிறார்.

குறிப்பிட்ட இடத்தில் இறந்த நாய்களின் சிதைந்த உடல்கள் ஒன்றன் மேல் ஒன்றாகப் பல அடுக்குகளாக அடுக்கி வைக்கப்பட்டிருந்திருக்கின்றன. கூடவே, இன்னும் பல நாய்கள் சாக்குப்பைகளில் அடைத்துவைக்கப்பட்டிருந்திருக்கின்றன. இதைக் கண்டு அதிர்ந்து போனவர், உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து இந்த விலங்குகள் வன்கொடுமை வழக்கை விசாரித்த போலீஸார், 60 வயதான முதியவர் ஒருவரைக் கைதுசெய்தனர். அந்த முதியவர் போலீஸ் விசாரணையில், `நாய் உரிமையாளர்களால் கைவிடப்பட்ட இந்த நாய்களை, சாகும்வரை பட்டினி போட்டுக் கொன்றேன்' என அதிர்ச்சி வாக்குமூலம் அளித்திருக்கிறார். அந்த முதியவரை கைதுசெய்த போலீஸார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசிய விலங்குகள் உரிமைகள் குழு பிரதிநிதி ஒருவர், ``குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நபர், இனப்பெருக்க வயதைக் கடந்த அல்லது வணிகரீதியில் கவர்ச்சிகரமானதாக இல்லாத நாய்களை ஒழிப்பதற்காக, அந்த நாய்களின் உரிமையாளர்கள் மூலம் பணம் பெற்றிருக்கிறார்.

2020-ம் ஆண்டு முதல், அத்தகைய நாய்களைக் கவனித்துக்கொள்ள, ஒரு நாய்க்கு 10,000 வான் (won - தென் கொரிய நாணய மதிப்பு) பெற்றிருக்கிறார். பின்னர் அவற்றைச் சாகும் வரை பட்டினி போட்டுக் கொன்றிருக்கிறார்" எனக் கூறியிருக்கிறார்.
கடுமையான விலங்குகள் பாதுகாப்புச் சட்டங்கள் அமலிலுள்ள தென் கொரியாவில், விலங்குகளுக்கு வேண்டுமென்றே உணவோ, தண்ணீரோ அளிக்காமல் கொலைசெய்பவர்களுக்கு, மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது 30 மில்லியன் வான் அபராதமாக விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியிருந்தும், 2010 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் விலங்குகள் வன்கொடுமை வழக்குகள், 69-லிருந்து 914 ஆக அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.