மத்தியப்பிரதேச மாநில செக்யூரிட்டிகளைக் குறிவைத்து கொலைகள் செய்த சீரியல் கில்லரை போபாலில் போலீஸார் கைதுசெய்துள்ளனர். விசாரணையில், அவர் இதுவரை சாகர் மற்றும் போபாலைச் சேர்ந்த நான்கு காவலர்களைக் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

போலீஸார் நடத்திய கூடுதல் விசாரணையில், `ஸ்டோன் மேன்’ என்று அடையாளப்படுத்தப்பட்ட நபரின் பெயர் ஷிவ் பிரசாத் என்பது தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு பூனேவைச் சேர்ந்த காவலர் ஒருவரைக் கொடூரமாகத் தாக்கியிருப்பதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஷிவ் எட்டாம் வகுப்பு வரையே படித்திருக்கும் நிலையில் பின்பு கோவாவுக்கு வேலைக்குச் சென்றிருக்கிறார். ஆங்கிலம் சரளமாகப் பேசும் இவர், `கே.ஜி.எஃப்’ பட ராக்கி பாய் கதாபாத்திரம் தன்னை வெகுவாக ஈர்த்திருப்பதாகவும், ராக்கி பாய் போன்று பெரிய கேங்ஸ்டர் ஆவதே தன் இலக்கு என்றும் கூறியுள்ளார். இதற்காகப் பணமும் சேகரித்துவந்திருக்கிறார். அதோடு அதற்கான முயற்சியில்தான் காவல் பணியில் இருக்கும்போது தூங்கும் காவலர்களை கொலைசெய்ததாகவும் கூறியுள்ளார்.

கடைசியாக மார்பிள் கடையில் வைத்து, ஷிவ் கொலைசெய்த காவலாளி சோனு வர்மா (23)-வின் அலைபேசியை ட்ராக் செய்துதான் சீரியல் கில்லர் போபாலில் கைதுசெய்யப்பட்டார். சோனு வர்மாவின் தலை சிதறும் அளவுக்கு மார்பிள் கற்களால் தாக்கி கொலைசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் சாகர் பகுதியில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.