அரசியல்
அலசல்
Published:Updated:

எங்களை அவமானப்படுத்தினார்... கொன்னுட்டோம்... முதலீட்டாளரை போட்டுத்தள்ளிய மோசடி நிதி நிறுவனம்!

செந்தில்குமார், விஜயலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
News
செந்தில்குமார், விஜயலட்சுமி

தன் உயிருக்கு ஆபத்து என்று செந்தில்குமாரே புகார் செய்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதனால்தான் இப்படியாகிவிட்டது.

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு நிதி நிறுவனத்தில் போட்ட முதலீட்டைத் திருப்பிக் கேட்ட தொழிலதிபரை, அந்த நிறுவனத்தின் பெண் மேலாளரும், உரிமையாளரும் கூலிப்படையை ஏவி கொலைசெய்த சம்பவம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தொழிலதிபர் கொலை!

சென்னை தி.நகரில், ‘கிரீன் அக்ரோ டெக்’ என்ற நிதி நிறுவனத்தை நடத்திவருபவர் எழிலரசன். இவரது நிதி நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வந்திருக்கிறார் அரக்கோணத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி. இவருக்குத் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். நிதி நிறுவனங்களில் பணம் முதலீடு செய்துவந்த விஜயலட்சுமி, சில மாதங்களுக்கு முன்பு, எழிலரசனின் நிறுவனத்தில் லட்சக்கணக்கான தொகையை முதலீடு செய்தார். அதனாலேயே அவரை நிறுவனத்தின் மேலாளராக்கியிருக்கிறார் எழிலரசன்.

செந்தில்குமார்
செந்தில்குமார்

பணக்காரர்களை ‘பிரெயின் வாஷ்’ செய்து, தங்கள் நிறுவனத்தில் முதல் போடவைத்தால் லாபத்தில் பங்கு என்று விஜயலட்சுமியிடம் சொல்லப்பட்டிருக்கிறது. உடனே அவர் தன் தூரத்து உறவினரான தொழிலதிபர் செந்தில்குமாரிடம், ‘ஒரு லட்சம் ரூபாய்க்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக’ ஆசைவார்த்தை கூறியிருக்கிறார். அதை நம்பி ரூ.13 லட்சம் முதலீடு செய்திருக்கிறார் செந்தில்குமார். இவர் செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகேயுள்ள பெருமாட்டுநல்லூர் லட்சுமி நகரைச் சேர்ந்தவர். செங்கல், ஜல்லி, எம்.சாண்ட் பிசினஸ்தான் இவரது தொழில்.

இந்த நிலையில் கடந்த 21-ம் தேதி மகனைப் பள்ளியில் விட்டுவிட்டு பைக்கில் வீடு திரும்பிய செந்தில்குமார், கூலிப்படையினரால் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டார். செந்தில்குமார் மீது ஏற்கெனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணல் திருட்டு தொடர்பான வழக்கு இருக்கிறது. அவருக்கும் ஒரு ரெளடிக்கும் இடையே பிரச்னையும் இருந்திருக்கிறது. எனவே, யார் கொலை செய்தது என்று குழம்பிப்போனது போலீஸ். பல்வேறு கோணங்களில் விசாரித்த பிறகே, செந்தில்குமாருக்கும், எழிலரசன் - விஜயலட்சுமி தரப்புக்கும் இடையேயான பணத் தகராறு போலீஸாருக்குத் தெரியவந்தது.

கொலை நடந்தது எப்படி?

விஜயலட்சுமியின் ஆசைவார்த்தைக்கு மயங்கி, 13 லட்ச ரூபாயை முதலீடு செய்த செந்தில்குமார் ஒருகட்டத்தில் ஏமாற்றப்பட்டிருக்கிறார். கொஞ்ச நாளில் அந்த நிதி நிறுவனமே மூடப்பட்டிருக்கிறது. ‘உன்னை நம்பித்தான் பணத்தை முதலீடு செய்தேன். பணத்தை நீதான் திருப்பித் தர வேண்டும்’ என்று விஜயலட்சுமிக்கு செந்தில்குமார் நெருக்கடி கொடுத்திருக்கிறார். அதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சமயத்தில் மூடப்பட்ட நிதி நிறுவனம் சென்னை முகப்பேரில் திறந்திருப்பதாகத் தகவல் கிடைத்ததும், 20.9.2022-ம் தேதி அங்கு நேரில் சென்று பணத்தைக் கேட்டுத் தகராறு செய்திருக்கிறார் செந்தில்குமார்.

அப்போது அங்கிருந்தவர்கள், `பணம் கேட்டு ஆபீஸுக்கு வந்தால் கொலை செய்துவிடுவோம்’ என்று மிரட்டி, அவரைத் தாக்கியுள்ளனர். உடனே கோபத்தில், காவல் அவசர உதவி எண்ணை அழைத்து, புகார் தெரிவித்திருக்கிறார் செந்தில்குமார். அதற்கு அடுத்த நாளே (21.09.2022) அவர் கூலிப்படையால் கொல்லப்பட்டிருக்கிறார்.

விஜயலட்சுமி
விஜயலட்சுமி

ஒப்புதல் வாக்குமூலம்!

இது குறித்து செந்தில்குமாரின் மனைவி லோகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில், விஜயலட்சுமியைக் கைதுசெய்தது போலீஸ். தலைமறைவான நிதி நிறுவன உரிமையாளர் எழிலரசன் உள்ளிட்ட கூலிப்படையினரை போலீஸார் தேடிவருகிறார்கள்.

போலீஸாரிடம் நாம் பேசியபோது, “கைதான விஜயலட்சுமி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அதில், ‘எழிலரசனின் நிதி நிறுவனத்தில் தி.நகர் கிளை மேலாளராக இருந்தேன். நிதி நிறுவனங்கள் சில சர்ச்சையில் சிக்கியதையடுத்து, எழிலரசனும் தனது நிதி நிறுவனத்தின் ஒன்பது கிளைகளையும் மூடிவிட்டார். கஸ்டமர்களின் டார்ச்சர் தாங்க முடியாமல், நான் தலைமறைவாக இருந்தேன். இந்தச் சமயத்தில் என்னுடைய புகைப்படம், என் கணவர் கமலக்கண்ணன், எழிலரசன் ஆகியோரின் புகைப்படங்களை இணைத்து, நாங்கள் முதலீட்டாளர்களிடம் 900 கோடி ரூபாய் வசூலித்து ஏமாற்றிவிட்டதாக வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டார் செந்தில்குமார். அதை என் உறவினர்களுக்கும் அனுப்பி அவமானப்படுத்தினார். அதை நான் எழிலரசனிடம் கூறியபோது, செந்தில்குமாரின் கதையை முடித்துவிடுவதாகக் கூறினார்’ என்று சொல்லியிருக்கிறார்” என்றார்கள்.

வாட்ஸ்அப்பில் போட்டோ!

“செந்தில்குமாரைக் கொலை செய்வதற்கு முன்பு வியாசர்பாடியைச் சேர்ந்த பிரபல ரௌடி ஒருவருக்கும், காஞ்சிபுரத்திலுள்ள இன்னொரு ரௌடி டீமுக்கும் செந்தில்குமாரின் புகைப்படம் வாட்ஸ்அப் மூலம் பகிரப்பட்டிருக்கிறது. தன் உயிருக்கு ஆபத்து என்று செந்தில்குமாரே புகார் செய்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதனால்தான் இப்படியாகிவிட்டது. இப்போதும் தனது பண பலத்தைப் பயன்படுத்தி எழிலரசன் தப்பிவிடுவாரோ என்று அஞ்சுகிறோம்” என்கிறார்கள் செந்தில்குமாரின் உறவினர்கள்.

இது குறித்து தாம்பரம் போலீஸ் துணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தியிடம் கேட்டபோது, ``பணம் தொடர்பான மோதலில் இந்தக் கொலை நடந்திருக்கிறது. புகாரளித்ததும் விஜயலட்சுமியைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம். மற்றவர்களைத் தேடிவருகிறோம்” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தையும் உயிரையும் இழந்திருக்கிறார் செந்தில்குமார்.

நிற்கதியாக நிற்கும் அவருடைய மனைவி, குழந்தைகளுக்கு யார் பதில் சொல்வது?!