பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான், 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைதுசெய்யப்பட்டார். அவருடன் அவரின் நண்பர்கள் சிலரும் கைதானார்கள். மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரியாக இருந்த சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் குழு ரெய்டு நடத்தி, அவர்களைக் கைதுசெய்தது. ஆனால், கைதுசெய்த பிறகு ஆர்யன் கானை விடுவிக்க சமீர் வான்கடே நடிகர் ஷாருக் கானிடம் ரூ.25 கோடி கேட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. அது தொடர்பாக இப்போது சி.பி.ஐ அதிகாரிகள் சமீர் வான்கடே உட்பட நான்கு அதிகாரிகள்மீது வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்.

சமீர் வான்கடே இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ ஏற்கெனவே சம்மன் அனுப்பியிருக்கிறது. ஆர்யன் கானைப் போன்று பிரிட்டனைச் சேர்ந்த கரண் சஜ்னானி என்பவரும் போதைப்பொருள் வைத்திருந்ததாக சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். கரண் கைதுசெய்யப்படும்போது அவரிடம் ரோலக்ஸ் வாட்ச் ஒன்று இருந்தது. அதன் மதிப்பு ரூ.30 லட்சமாகும். அந்த வாட்ச்சை சமீர் வான்கடேவுடன் சேர்ந்து இந்த வழக்கை விசாரித்துவந்த ஆசிஷ் ரஞ்சன் என்ற அதிகாரி திருடிக்விட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
அந்த ஆடம்பர வாட்ச்சை விற்பனை செய்ததில் சமீர் வான்கடேவுக்கும் தொடர்பிருப்பது குறித்து சி.பி.ஐ தனது முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. சமீர் வான்கடே வெளிநாட்டு வாட்ச் வாங்கி விற்றார் என்று மட்டும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவருக்கு அந்த வாட்ச் எப்படிக் கிடைத்தது என்று சி.பி.ஐ விசாரித்துவருகிறது. தற்போது அந்த வாட்ச் கரணுக்குச் சொந்தமானது என்று தெரியவந்திருக்கிறது. இது குறித்துப் பேசிய கரண், ``எனது 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்ச்சை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி ஆசிஷ் ரஞ்சன் திருடிவிட்டார்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் பட்டியலில் எனது வாட்ச் இடம்பெறவில்லை. எங்களைக் கைதுசெய்தபோது எப்படி நடத்தினார்களோ அதே போன்று சமீர் வான்கடேவும் நடத்தப்பட வேண்டும். நான் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, சமீர் வான்கடே மீது புதிய புகார் செய்வேன்" என்றார். 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் கரண் சஜ்னானி, முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக் மருமகனுடன் கைதுசெய்யப்பட்டார்.
அவர்களிடம் 125 கிலோ கஞ்சா இருந்ததாகக் கணக்கு காட்டப்பட்டது. ஆனால், தங்களிடம் வெறும் 7.5 கிராம் கஞ்சா மட்டுமே இருந்தது என்றும், மற்றவை புகையிலை என்றும் கரண் தெரிவித்திருக்கிறார். சமீர் வான்கடே மீது நவாப் மாலிக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.