ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்குட்பட்ட தன்யாநகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றன. தன்யாநகர் உள்பகுதியான பாரதி நகர், வி.ஆர்.என்.காலனி ஆகிய பகுதிகளில் நேற்று நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, தங்களின் கைவரிசையைக் காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து போலீஸார், "பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த காமாட்சி என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுவிட்டு, இன்று காலை ஊருக்குத் திரும்பியிருக்கிறார். அப்போது அவர் வீட்டின் வெளிப்பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 4.5 சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.
இது குறித்த தகவல் போலீஸுக்குத் தெரியவந்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், கொள்ளை முயற்சி குறித்து விசாரணை நடத்தினர். மேலும், அந்தப் பகுதியில் வேறு ஏதேனும் வீடுகளில் இது போன்று கொள்ளை முயற்சி நடந்திருக்கிறதா எனவும் விசாரித்தனர்.

இதில் தனியாநகர் மெயின் ரோடு பகுதியில் அருகருகே மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் திருட முயன்றது தெரியவந்தது. மேலும் வி.ஆர்.என்.காலனியில் வங்கி காசாளர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, அவரின் வீட்டு பீரோவில் வைத்திருந்த நெக்லஸ், கம்மல் உட்பட 15 சவரன் தங்க நகைகளையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றதைக் கண்டுபிடித்தனர்.
இந்த தொடர் திருட்டு முயற்சி காரணமாக மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து, தடயவியல் நிபுணர்கள் வந்து திருட்டு நடந்த இடங்களில் தடயங்களைச் சேகரித்தனர்.

மேலும் அக்கம் பக்கத்து வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்த வீடியோ காட்சிகளைக் கைப்பற்றி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் பற்றி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்" என்றனர்.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் பூட்டியிருக்கும் வீடுகளைக் குறிவைத்து அடுத்தடுத்து கொள்ளை நடந்த சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.