திருப்பூர் மாவட்டம், செரங்காடு பகுதியைச் சேர்ந்த பனியன் தொழிலாளி கோபி (30). இவரின் மனைவி சத்யா (28). இரண்டாவது முறையாக கர்ப்பமான சத்யாவுக்கு, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 18-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையின் மூன்றாவது தளத்திலுள்ள மகப்பேறு வார்டில் சத்யாவும், குழந்தையும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். கோபியின் தாய் மாலா, சத்யாவுடன் மருத்துவமனையில் இருந்தார்.
இந்த நிலையில், சத்யாவுக்குக் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக சனிக்கிழமை மாலை மூன்றாவது தளத்திலிருந்து இரண்டாவது தளத்திலுள்ள அறுவை சிகிச்சை அரங்குக்கு மருத்துவமனை ஊழியர்கள் அழைத்துச் சென்றனர். சத்யா லிஃப்டில் சென்ற நிலையில், குழந்தையைத் தூக்கிக்கொண்டு மாலா படிக்கட்டுகள் வழியாக வந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த பெண் ஒருவர், குழந்தையைத் தான் தூக்கி வருவதாகக் கூறியிருக்கிறார்.

அதை நம்பிய மாலா அந்தப் பெண்ணிடம் குழந்தையைக் கொடுத்திருக்கிறார். குழந்தையை வாங்கிக்கொண்ட அந்தப் பெண், படிக்கட்டில் வேகமாக இறங்கியிருக்கிறார். லிஃப்ட் இரண்டாவது தளத்துக்கு வந்ததும், லிஃப்டிலிருந்து சத்யா வெளியே வந்து பார்த்தபோது, அந்தப் பெண்ணிடம் குழந்தை இல்லை. குழந்தை எங்கே என்று அந்தப் பெண்ணிடம் சத்யா கேட்டபோது, மாலா கொண்டு வருவதாகக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றிருக்கிறார்.
படிக்கட்டு வழியாக கீழே வந்த மாலாவிடம் குழந்தை இல்லாதது குறித்து சத்யா கேட்டபோது, படிக்கட்டில் இறங்குவதற்கு, சிரமமாக இருந்ததால், அந்தப் பெண்ணிடம் குழந்தையைக் கொடுத்ததாகக் கூறியிருக்கிறார். அதன் பிறகே, அந்தப் பெண் குழந்தையைக் கடத்திச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து தகவலறிந்து வந்த திருப்பூர் தெற்கு போலீஸார், அரசு மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அந்தப் பெண், குழந்தையை பைக்குள் வைத்துக் கடத்திச் சென்றது தெரியவந்தது. குழந்தைக் கடத்தலில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா... அந்தப் பெண் யார் என போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

குழந்தையின் பாட்டி மாலா இது குறித்துப் பேசுகையில், ``சத்யாவுக்கு குழந்தை பிறந்தது முதல் மூன்று நாள்களாக அந்தப் பெண் எங்களைப் பார்க்க வருவார். தன்னுடைய உறவினர் பெண் பிரசவத்துக்கு வந்திருப்பதாகவும், அவரை கீழ்த்தளத்தில் அனுமதித்திருப்பதாகவும் கூறினார். டீ வாங்கிக் கொண்டுவந்து எங்களுடன் அமர்ந்து சாப்பிடுவார். உறவினர்போல் சகஜமாகப் பழகியதால் படிக்கட்டில் இறங்கும்போது, சிரமமாக இருந்ததால் குழந்தையை அவரிடம் கொடுத்தேன். ஆனால், குழந்தையைக் கடத்திச் சென்றுவிட்டார்" என்றார்.