சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலைக் கல்லூரி இயங்கிவருகிறது. இந்தக் கல்லூரி மத்திய கலாசார அமைச்சகத்தின் நேரடி நிதி ஒதுக்கீட்டின்கீழ் செயல்பட்டுவருகிறது. இந்த நிலையில், கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதைத்தொடர்ந்து மாணவிகளும் பேராசிரியர்கள் ஹரிபத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோர்மீது பாலியல் தொல்லை குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்திவந்தனர்.
மாணவிகளின் இந்தப் போராட்டம் குறித்து மாநில மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியது. இதற்கிடையே, கேரளத்தைச் சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர், அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கலாஷேத்ரா கல்லூரியில் நடந்த பாலில் தொல்லை விவகாரம் தொடர்பாக புகாரளித்திருந்தார். அதனடிப்படையில், பெண் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், பெண்ணின் மாண்புக்குக் குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின்கீழ் உதவி பேராசிரியர் ஹரிபத்மன் மீது காவல்துறை வழக்கு பதிவுசெய்தது.

அதைத் தொடர்ந்து மாநில மகளிர் ஆணையத் தலைவர், மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெற வலியுறுத்தினார். மாணவிகளும் போராட்டத்தைத் தற்காலிகமாக திரும்பப் பெற்றனர். இந்த நிலையில், உதவி பேராசிரியர் ஹரிபத்மனைக் கைதுசெய்ய தனிப்படை அமைத்து காவல்துறை தீவிரமாகத் தேடிவந்தது. ஹைதராபாத் சென்ற ஹரிபத்மன் தலைமறைவாகிவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், தனிப்படைப் போலீஸார் அங்கு ஹரிபத்மனைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.