அலசல்
Published:Updated:

பாலியல் குற்றங்களில் 65% பேர் விடுதலை! - பலவீனமாக இருக்கிறதா போக்சோ?

 பலவீனமாக இருக்கிறதா போக்சோ?
பிரீமியம் ஸ்டோரி
News
பலவீனமாக இருக்கிறதா போக்சோ?

- தீர்வுகளை முன்வைக்கிறார் கண்ணப்பன் ஐ.பி.எஸ்

கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை விவகாரம் பூதாகரமெடுத்துள்ளது. மாணவர்களின் எதிர்காலத்துக்கு வழிகாட்ட வேண்டிய ஆசிரியர்களே இதை நிகழ்த்துவதுதான் மிகப்பெரிய கொடுமை. சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்களைக் கையாள்வதற்காக 2012-ம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் வன்கொடுமைகள் குறைந்தபாடில்லை. அதற்கான காரணங்கள் என்னென்ன, பள்ளிகளில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பவை குறித்தெல்லாம் ஆய்வு செய்துவரும் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி பெ.கண்ணப்பனிடம் பேசினோம்…

கண்ணப்பன் ஐ.பி.எஸ்
கண்ணப்பன் ஐ.பி.எஸ்

‘‘தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவில் 2017-ம் ஆண்டில் போக்சோ சட்டத்தில் 32,608 வழக்குகளும், 2018-ல் 39,827 வழக்குகளும், 2019-ல் 47,335 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த மூன்று ஆண்டுகளில் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 46 சதவிகிதம் அதிகரித்திருப்பது, குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துவருகின்றன என்பதைத்தான் காட்டுகிறது.

நீதிமன்ற விசாரணையில் 35 சதவிகித போக்சோ வழக்குகளில் மட்டும்தான் தண்டனை தரப்படுகிறது. போக்சோ வழக்குகளில், பாலியல் துன்புறுத்தலுக்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பின்னரும், விசாரணை முடிவில் 65 சதவிகித அளவுக்குக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பித்துள்ளனர். போக்சோ வழக்குகளில் இப்படி அதிக எண்ணிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலையாவது, சிறார் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்கான காரணங்களில் ஒன்று. இது பற்றி காவல்துறை முழுமையான ஆய்வுகளை மேற்கொள்ளத் தவறினால், போக்சோ சட்டம் அதன் வலிமையை இழந்துவிடும். மேலும், அந்தச் சட்டம் உருவாக்கப்பட்ட நோக்கமும் நிறைவேறாது. உடனடியாக அந்தச் சட்டத்தை ஆய்வு செய்து குற்றம்சாட்டப்படுபவர்கள் தப்பிக்கும் சட்ட ஓட்டைகளை அடைக்கும் பணிகளைத் தொடங்க வேண்டும்.

அடுத்து பள்ளிகளில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். மேல்நிலை வகுப்பு மற்றும் உண்டு உறைவிடப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள்தான் அதிக அளவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறார்கள் என பல்வேறு கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், தற்போது நடைமுறையில் இருந்துவரும் அக மதிப்பெண்கள் மற்றும் செய்முறைத் தேர்வு மதிப்பெண்களைக் குறைத்துவிடுவதாக மிரட்டியே, சில ஆசிரியர்கள் தங்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகளைத் தருகிறார்கள். விடுமுறை நாள்கள் மற்றும் பள்ளி வேலை நாள்களில் நடைபெறும் கூடுதல் வகுப்புகளிலும் மாணவிகளுக்குப் பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன. கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தற்போது நடைமுறையில் இருக்கும் இணையவழியில், இரவு நேரங்களிலும் தனிப்பட்ட முறையில் மாணவிகளிடம் தொடர்புகொள்ளும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. கற்றலுக்கு உதவி செய்வதுபோல ஆசிரியர்கள் பாலியல் சீண்டல்களைச் செய்கிறார்கள்.

இவற்றையெல்லாம் பெற்றோரிடம் சொன்னால் பள்ளியிலிருந்து நிறுத்திவிடுவார்களோ என்கிற அச்சம் ஒருபக்கம்... பாலியல் வன்கொடுமைப் புகார்கள் வரும்போது சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகமே பெற்றோரைச் சமாதானப்படுத்துவது மறுபக்கம் என, புகார்கள் வெளியே வராமல் தடுக்கப்படுகின்றன. தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் பெற்றோர்களும் சட்டரீதியான நடவடிக்கையை நாடுவதில்லை. சில தனியார் பள்ளி நிர்வாகங்கள், மாணவிகளிடம் தவறாக நடந்துகொள்ளும் ஆசிரியர் பாடம் நடத்துவதில் திறமையானவராக இருந்தால், அவரிடம் மன்னிப்புக் கடிதம் வாங்கிக்கொண்டு, பணியில் தொடர அனுமதிக்கும் மிகப்பெரிய அநீதியும் நடக்கிறது. இதனால், ருசிகண்ட பூனைபோல குற்றம் செய்த ஆசிரியர்கள் மீண்டும் துணிச்சலாக மாணவிகளிடம் அத்துமீறுகிறார்கள்” என்றவர், மேற்கண்ட பிரச்னைகளுக்குச் சில தீர்வுகளையும் முன்வைக்கிறார்.

பாலியல் குற்றங்களில் 65% பேர் விடுதலை! - பலவீனமாக இருக்கிறதா போக்சோ?

“பள்ளிகளில் பெற்றோர் - ஆசிரியர் கூட்டங்கள் முறையாக நடத்தப்பட்டால், இது போன்ற பிரச்னைகள் நிகழாமல் தவிர்க்கலாம். தற்போது அந்தக் கூட்டங்கள் நடந்தாலும் பெரும்பாலும் மாணவ, மாணவியர்கள் பற்றிய குறைகளை மட்டுமே கூறி, பெற்றோர்களின் மனதை நோகடிக்கும் நிகழ்வுகளாகத்தான் இருக்கின்றன. பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் குறைகளையும் கருத்துகளையும் உள்வாங்கும் மனநிலையில் பள்ளி நிர்வாகங்களும் ஆசிரியர்களும் இருப்பதில்லை. ஆசிரியர் - பெற்றோர் இரு தரப்பினரும் மனம்விட்டுப் பேசி, கற்றலில் ஏற்படும் குறைபாடுகளுக்குத் தீர்வு காண முயற்சி மேற்கொண்டால், பள்ளியில் பாலியல் துன்புறுத்தலுக்கு மாணவிகள் ஆளாகும் நிலை ஏற்படாது. அதேபோல முன்னாள் மாணவர்கள் கூட்டங்களைப் பள்ளிகளில் நடத்தினால், ஆக்கபூர்வமான செயல் திட்டங்களுக்கு வழி கிடைப்பதோடு, பள்ளிகளில் நடக்கும் தவறான செயல்களும் வெளிச்சத்துக்கு வந்துவிடும்.

பள்ளிகளில் ‘போக்சோ சட்டம்’ பற்றிய தகவல்களை அறிவிப்புப் பலகையில் வைக்கலாம். ஆசிரியர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பள்ளியில் படித்துவரும் மாணவ - மாணவியர்கள் அடங்கிய ‘போக்சோ கமிட்டி’ மூலம் பள்ளியில் நிகழும் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டறிந்து, அவற்றைக் களைய நடவடிக்கை எடுக்கலாம். பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள், கூடுதல் வகுப்புகள், மாலை நேர வகுப்புகள் ஆகியவற்றை முறையாக, கண்காணிப்புடன் நடத்துவதற்கான செயல் திட்டங்களை வகுக்க வேண்டும். பள்ளியில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து புகார் அளிக்க பிரத்யேக ‘ஹெல்ப் லைன்’ தொலைபேசி சேவையை அறிமுகப்படுத்தலாம். இவற்றையெல்லாம் செயல்படுத்தினால் மட்டுமே பள்ளிகளில் பாலியல் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இயலும்” என்றார் உறுதியாக.

சட்டத்துறை வல்லுநர்களும் கல்வியாளர்களும் இணைந்து செயல்பட வேண்டிய நேரமிது!