அரசியல்
Published:Updated:

‘கன்னியாகுமரி இரட்டைக்கொலை வழக்கு’ - பத்தாண்டுகளாகத் தாக்கல் செய்யப்படாத குற்றப்பத்திரிகை!

இரட்டைக்கொலை
பிரீமியம் ஸ்டோரி
News
இரட்டைக்கொலை

ஆறுமுகத்தோட இடுப்புப் பகுதியில ஒரு தோட்டாவும், அவர் மனைவியோட கழுத்துப் பகுதியில ஒரு தோட்டாவும் பாய்ந்திருந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வனத்துறை ஊழியரும், அவரின் மனைவியும் பத்தாண்டுகளுக்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், ‘இதுவரை குற்றப்பத்திரிகைகூடத் தாக்கல் செய்யப்படாதது ஏன்?’ என்று கேட்கிறார்கள் பலியான வனத்துறை ஊழியரின் உறவினர்கள்!

ஆரல்வாய்மொழி வனத்துறை சோதனைச்சாவடியில் பணியாற்றியவர் வன ஊழியரான ஆறுமுகம். அவர், 10.11.2011 அன்று தன் மனைவி யோகீஸ்வரியுடன் ஒரு திருமணத்துக்குச் சென்றுவிட்டு, சுசீந்திரம் அருகே தேரூரிலுள்ள தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் இரவில் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, ஒரு கும்பல் அவர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தது. ‘வனத்துறையிலிருந்து மரங்களைக் கடத்திச் செல்லும் கும்பலுக்கும், சோதனைச்சாவடி பணியிலிருந்த ஆறுமுகத்துக்கும் ஏற்பட்ட பகையால், கொலை நடந்திருக்குமோ?’ என்று அப்போது சந்தேகிக்கப்பட்டது.

‘கன்னியாகுமரி இரட்டைக்கொலை வழக்கு’ - பத்தாண்டுகளாகத் தாக்கல் செய்யப்படாத குற்றப்பத்திரிகை!

தமிழகத்தையே உலுக்கிய இந்த இரட்டைக் கொலை நடந்து மூன்று மாதங்களுக்குப் பின்னர், அப்போதைய வனத்துறை அமைச்சரான குமரி மாவட்டத்தைச் சேர்ந்த கே.டி.பச்சைமாலுக்கு வலதுகரமாகச் செயல்பட்ட அ.தி.மு.க-வின் மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறைச் செயலாளரான சகாயம் என்ற ஐயப்பன், அவரின் கூட்டாளிகளான முண்டக்கண் மோகன் உள்ளிட்ட 14 பேர் கைதுசெய்யப்பட்டார்கள். அவர்களிடமிருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான சகாயம், கொலையான யோகீஸ்வரியின் உறவினர். இவர்களின் குடும்பத்துக்குச் சொந்தமான 40 சென்ட் நிலம் தொடர்பான பகை காரணமாக, கூலிப்படையைவைத்து இருவரையும் அவர் தீர்த்துக்கட்டியதாக சுசீந்திரம் போலீஸார் வழக்கு பதிவுசெய்தார்கள்.

ஏழு வருடங்களாக விசாரணை நடத்திய சுசீந்திரம் போலீஸாரால், குற்றப்பத்திரிகைகூட தாக்கல் செய்ய முடியவில்லை. இதனால் பலியானவர்களின் குடும்பத்தினர் நீதிமன்றம் செல்ல... மூன்றாண்டுகளுக்கு முன்பு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது. அங்கும் எந்த முன்னேற்றம் இல்லை என்கிறார்கள்.

ஒத்துப்போகாத புல்லட்ஸ்!

வழக்கின் நிலை குறித்து கொலையான ஆறுமுகத்துடன் பணியாற்றிய வனத்துறையினரிடம் பேசினோம்... ‘‘ஆறுமுகத்தோட இடுப்புப் பகுதியில ஒரு தோட்டாவும், அவர் மனைவியோட கழுத்துப் பகுதியில ஒரு தோட்டாவும் பாய்ந்திருந்தது. உடல்ல படாம வெளியே கிடந்த ரெண்டு தோட்டாக்களையும் போலீஸார் கைப்பற்றினாங்க. அந்தத் தோட்டாக்கள் போலீஸார் பயன்படுத்தும் துப்பாக்கி ரகத்தைச் சேர்ந்ததுன்னு சொன்னாங்க. அதோட, குற்றவாளிகள்கிட்டருந்து பறிமுதல் செய்த துப்பாக்கியோட அந்த புல்லட்ஸ் ஒத்துப்போகலைன்னும் பேச்சு வந்துச்சு’’ என்றார்கள் இது பற்றி விரிவாகப் பேச விரும்பாமல்.

இந்தக் கொலை வழக்கில் நியாயம் தேடி அலைந்துவரும் ஆறுமுகத்தின் அண்ணன் மகன் ஜெகனிடம் பேசினோம். ‘‘சொத்துக்காகக் கொலை நடந்ததா போலீஸ்காரங்க தவறா கேஸ் போட்டதால, இப்ப வரைக்கும் உண்மையான குற்றவாளி யாருன்னே தெரியலை. கொலை நடந்தப்போ விசாரிச்ச போலீஸ்காரங்க, ‘உங்ககிட்ட இருக்குற நிலப் பத்திரத்தைக் கொடுங்க’னு வாங்கிட்டுப் போனாங்க. பிறகு, அந்தப் பத்திரத்தைக் குற்றவாளிகள் வீட்டுலருந்து எடுத்தது மாதிரி காட்டினாங்க. சி.பி.சி.ஐ.டி-க்கு வழக்கை மாத்தி, மூணு வருஷமாகியும் எதுவும் நடக்கலை. இந்த வழக்கு சம்பந்தமா நாங்க வெளியில எங்கேயாவது மீடியாவிடம் பேசினா, அப்போ மட்டும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் எங்கள்ல அஞ்சாறு பேருக்கு சம்மன் அனுப்பி, திருநெல்வேலி ஆபீஸுக்குக் கூப்பிட்டு முதல்லருந்து விசாரணையைத் தொடங்குவாங்க. கடந்த மூணு வருசமா இதுதான் மாறி மாறி நடந்துக்கிட்டு இருக்கு.

சகாயம் கைது செய்யப்பட்டபோது...
சகாயம் கைது செய்யப்பட்டபோது...

‘சித்திக்கு போன் பண்ணின போலீஸ் யார்... சித்தப்பா டைரி என்னாச்சு?’

கொலை நடந்த அன்னிக்கும், அதுக்கு முந்தின நாளும் போலீஸ் அதிகாரி ஒருத்தர், எங்க சித்தியின் (யோகீஸ்வரி) மொபைலுக்கு ரெண்டு வாட்டி கூப்பிட்டுப் பேசியிருக்கார். எங்க குடும்பத்துக்கும் போலீஸுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அப்படி இருக்கும்போது, எதுக்காக அந்த போலீஸ் அதிகாரி பேசினார்னு தெரியலை. விசாரணையின்போது இந்த விஷயத்தை நாங்க ஒவ்வொரு தடவை சொன்னாலும் அதை போலீஸார் கண்டுக்குறதே கிடையாது. அதுபோல எங்க சித்தியோட செல்லுல இருந்து சகாயத்துக்கு ஒன்பது முறை போன் போயிருப்பதாக போலீஸ்காரங்க சொன்னாங்க. ஆனா, சகாயம் அந்த போனை அட்டெண்ட் பண்ணலை. எங்க சித்தியும் சகாயமும் சொந்தக்காரங்கன்னாலும், பெருசா பேச்சுவார்த்தையெல்லாம் கிடையாது. அப்படி இருக்கும்போது, எதுக்காக சகாயத்துக்கு அன்னிக்கு போன் பண்ணாங்கன்னு விசாரிக்கணும். அதுபோல, சித்தப்பா வீட்டுலருந்து போலீஸ் எடுத்த செல்போனும், சித்தப்பாவோட டைரியும் என்ன ஆச்சுன்னும் தெரியலை” என்று வேதனைப்பட்டார்.

இந்தக் கொலை வழக்கில் போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட சகாயம், இப்போது பா.ஜ.க-வில் ஐக்கியமாகியிருக்கிறார். வழக்கு பற்றி அவரிடம் கேட்டதற்கு, ‘‘என்னோட அரசியல் வளர்ச்சி பிடிக்காம, இந்த வழக்குல என்னைப் பொய்யா சேர்த்துட்டாங்க. இந்தியாவுலேயே குற்றவாளிகளைக் கைதுசெய்த பிறகு வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாத்தின கேஸ் இதுவாகத்தான் இருக்கும். இதுவரைக்கும் ஏன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலைன்னும் புரிய மாட்டேங்குது. தமிழக போலீஸால் முடியலைன்னா வழக்கை சி.பி.ஐ-க்கு மாத்தணும். இல்லைன்னா, நூறு வருஷம் ஆனாலும் இந்த வழக்கை இப்படியேதான் வெச்சுக்கிட்டே இருப்பாங்க’’ என்றார்.

ஜெகன்
ஜெகன்

இது பற்றி சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளிடம் விசாரித்தோம். ‘‘அந்த வழக்கு சுசீந்திரம் போலீஸார் விசாரித்த நிலையில், சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. அப்போது இருந்த அதிகாரிகள் முதற்கட்ட விசாரணை நடத்தி முடித்தார்கள். இடையில் சாத்தான்குளம் வழக்கு போன்றவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து விசாரணை நடத்தப்படுவதால் இது தாமதமாகிறது. விரைவில் அந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்கள்.

காலதாமதமாகக் கிடைக்கும் நீதியும் மறுக்கப்பட்ட நீதிதான்!