புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவருக்கு என்பவருக்கு நான்கு மகள்கள். நடனக் கலைஞர்களான இவர்கள் அனைவரும், உள்ளூர் மற்றும் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நடனமாடுவது வழக்கம். இரண்டாவது மகள் திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், சென்னையிலுள்ள தனியார் அமைப்பு மூலம் துபாய் அபுதாபியிலுள்ள ஒரு விடுதியில் தங்கி நடனமாடுவதற்கான வாய்ப்பு வந்தது. அதனடிப்படையில் கடந்த 2022-ம் ஆண்டு குழந்தைகளை கணவருடன் விட்டுவிட்டு அபுதாபிக்குச் சென்ற அவர், அங்கேயே தங்கி விடுதியில் நடனமாடி வந்திருக்கிறார். அந்தப் பணத்தை தனது குடும்பத்தினருக்கு அனுப்பிவைத்து வந்ததுடன், தினமும் தன்னுடைய குழந்தைகளுடனும், கணவருடனும் பேசி வந்திருக்கிறார். மேலும் விரைவில் இந்தியா வருவதாகவும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், 24-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு அவரின் தந்தை, கணவரை தொடர்புகொண்ட சக நடனமாடும் தோழிகள், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறியிருக்கின்றனர். அதனைக் கேட்ட அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். அதையடுத்து தந்தை, கணவர், சகோதரிகள் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூரைச் சந்தித்துப் புகாரளித்தனர். மேலும் தன்னுடைய மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கண்ணீருடன் கூறினார் அவர் தந்தை. அத்துடன் அவரின் உடலைமீட்டு தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதற்கிடையில் பெற்றோர் அவரை அபுதாபிக்கு அனுப்பிய தனியார் அமைப்பின் நிர்வாகிகளை தொடர்பு கொண்டிருக்கின்றனர். அவர்களும் சரியான முறையில் பதிலளிக்காததால் மரணத்தில் மர்மம் நீடித்து வருகிறது.