கரூர், பசுபதிபாளையம் வடக்குத்தெரு பகுதியில், நாள் முழுவதும் செல்போனில் கேம் விளையாடிய சிறுவனைத் தாய் திட்டியதால், மனமுடைந்த அந்தப் பள்ளி மாணவன், சகோதரியின் துப்பட்டாவில் தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கரூர் அருகே பசுபதிபாளையம் ஏ.வி.பி.நகர், வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்த முத்துமாணிக்கம், ராமாயி தம்பதியினரின் இளைய மகன் ராஜேஷ். முத்துமாணிக்கம் கொத்தனாராக வேலை பார்த்துவருகிறார். ராஜேஷ் அருகேயுள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

தற்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்துவந்த ராஜேஷ், நாள் முழுவதும் செல்போனில் கேம் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்.
வேறு வேலைகள் எதுவும் செய்யாமல், கேம் விளையாடுவதை மட்டுமே முழுநேர வேலையாகச் செய்துவந்ததால், அவரின் தாய் ராஜேஷைத் திட்டியிருக்கிறார். இருந்தாலும், ராஜேஷ் தொடர்ந்து கேம் விளையாடி வந்திருக்கிறார். இதை ராஜேஷின் தாய் ராமாயி கண்டிக்கவே, நேற்று பெற்றோர் வேலைக்கு வெளியே சென்ற நிலையில், தனது அக்காவின் துப்பட்டாவில் தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் கரூர், பசுபதிபாளையம் போலீஸார் பிரேதத்தைக் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

'செல்போனில் கேம் விளையாடக் கூடாது' எனக் கண்டித்ததால், சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கரூர் மாவட்ட பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.