அலசல்
Published:Updated:

“நான் கிருஷ்ணர், நீங்கள் என் ராதைகள்!” - சிவசங்கரனின் பாலியல் சீண்டல்கள்...

சிவசங்கர் பாபா
பிரீமியம் ஸ்டோரி
News
சிவசங்கர் பாபா

சிவசங்கர் பாபாவைக் கடவுளாகவே பார்க்க வேண்டும்’ என்று மாணவ, மாணவிகளிடம் ஆசிரியர்கள் மூளைச்சலவை செய்துவிடுகிறார்கள்

காஞ்சிபுரம் மாவட்டம், கேளம்பாக்கத்தில் `சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல் பள்ளி’யை நடத்திவருபவர் சிவசங்கர் பாபா என்கிற சிவசங்கரன். இவர் தன் பள்ளி மாணவிகளுக்கு, `ஆசீர்வாதம் தருகிறேன்’ என்கிற பெயரில் கட்டிப்பிடித்தும், முத்தம் கொடுத்தும் பாலியல் வன்கொடுமைகளைச் செய்தது பற்றி முன்னாள் மாணவிகள் உள்ளிட்ட சிலர் சமூக வலைதளங்களில் பதிவிடவே பிரச்னை தீயாகப் பற்றியெரிகிறது. இதையடுத்து, சிவசங்கரனுக்கு குழந்தைகள் நல பாதுகாப்புக்குழு, விசாரணைக்காக சம்மன் அனுப்பியிருக்கிறது.

 “நான் கிருஷ்ணர், நீங்கள் என் ராதைகள்!” - சிவசங்கரனின் பாலியல் சீண்டல்கள்...

ஆசிரமத்தில் என்னதான் நடந்தது என்பதை அறிய கேளம்பாக்கத்திலிருக்கும் சிவசங்கரனின் ஆசிரமத்துக்குச் சென்றோம். கொரோனா ஊரடங்கால் உள்ளே செல்ல அனுமதியில்லை என்றார்கள் அங்கிருந்த செக்யூரிட்டிகள். தொடர்ந்து, சிவசங்கரன் மீது பாலியல் புகார் கிளப்பியிருக்கும் - அவர் நடத்தும் பள்ளியில் படித்த - முன்னாள் மாணவி ஒருவரைச் சந்தித்தோம். அவர் சொன்ன தகவல்கள் அத்தனையும் அதிர்ச்சி ரகம்...

“சிவசங்கர் பாபா ஆசிரமத்துக்குள் செயல்பட்டுவரும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல் பள்ளியில் நான் ப்ளஸ் டூ வரை படித்தேன். பள்ளியின் ஆசிரியர்கள் பெரும்பாலும் அவரின் பக்தர்கள்தான். ஆசிரமத்துக்குள் பள்ளிகளைத் தவிர மகாஜோதி காலனி, கல்கி கார்டன், பழனி கார்டன் ஆகிய குடியிருப்புகளில் அவரை கடவுளாக வணங்கும் குடும்பங்கள் வசித்துவருகின்றன. இவை தவிர மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனியாக தங்கும் விடுதிகளும் உள்ளன.

லிப் டு லிப் முத்தம்

4, 5-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் தொடங்கி ப்ளஸ் டூ படிக்கும் மாணவிகள் வரை அனைவரையும் சிவசங்கர் பாபா கட்டிப்பிடித்து நெற்றியில் முத்தம் கொடுப்பார். குறிப்பாக, தேர்வு நேரத்தில் ஆசி வழங்குவதாகக் கூறி மாணவிகளுக்கு லிப் டு லிப் முத்தம் கொடுப்பார். ஆசிரியர்களிடம் புகார் சொன்னால், ‘அது பாபாவின் ஆசீர்வாதம்’ என்று அவர்கள் சொல்வார்கள். அவ்வப்போது வகுப்பறைக்கு விசிட் செய்யும் சிவசங்கர் பாபா, ஆசீர்வாதம் என்கிற பெயரில் மாணவிகளைக் கட்டிப்பிடித்து, தொடக் கூடாத இடங்களில் தொடுவார். அந்தப் பள்ளியில் அக்கா, தங்கை படித்தால் அவர்களின் விவரங்கள் அவரின் டேபிளுக்குச் சென்றுவிடும். இருவரையும் அழைத்து மடியில் அமர வைத்துக்கொள்வார். பிறகு, ‘நான் கிருஷ்ணர், நீங்கள் ராதைகள்’ என்று கூறி, ‘என்னுடன் நீங்கள் சந்தோஷமாக இருந்தால்தான் இந்தப் பிறவிப் பலனை அடைய முடியும்’ என்று பேசி, பாலியல் தொல்லை கொடுப்பார்.

‘சிவசங்கர் பாபாவைக் கடவுளாகவே பார்க்க வேண்டும்’ என்று மாணவ, மாணவிகளிடம் ஆசிரியர்கள் மூளைச்சலவை செய்துவிடுகிறார்கள். ஒருகட்டத்தில் அவரைக் கடவுளாகவே மனதில் பதியவைத்து, அவரது பாலியல் அத்துமீறல்களைத் தவறு என்றே நினைக்க முடியாத வகையில் உளவியல்ரீதியாக மாணவிகளை மாற்றி விடுகிறார்கள். சுமார் 20 ஆண்டுகளாக இந்தக் கொடுமைகள் நடந்துவருகின்றன. யாரேனும் அவரது அத்துமீறல்களைத் தட்டிக் கேட்டால் அவர்களைப் பள்ளியைவிட்டு நீக்கிவிடுவார்கள். அதற்கு பயந்து பலரும் சிவசங்கர் பாபாவின் பாலியல் சீண்டல்கள் குறித்து வாய் திறப்பதில்லை. பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளியே வரும்” என்றார்.

இருட்டு அறையில் ஒளி!

கடந்த வாரத்திலிருந்தே முன்னாள் மாணவிகள் உட்பட சிலர் சமூக வலைதளங்களில் சிவசங்கரன் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இதையடுத்து மாநிலக் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சிவசங்கரன் உட்பட ஆசிரமத்திலிருக்கும் சிலரிடம் விசாரணை செய்ய சம்மன் அனுப்பி யிருக்கிறது. இந்தநிலையில்தான் திருப்போரூர் தொகுதியின் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ மூர்த்தியிடம் பேசினோம்.

 “நான் கிருஷ்ணர், நீங்கள் என் ராதைகள்!” - சிவசங்கரனின் பாலியல் சீண்டல்கள்...

``நான் எம்.எல்.ஏ-வாக இருந்தபோது சிவசங்கரனின் ஆசிரமத்துக்குச் சென்றேன். அப்போது இருட்டு அறைக்குள் அழைத்துச் சென்ற சிவசங்கரன், என்னிடம் ஓர் இடத்தைக் காட்டி ‘ஒளி தெரிகிறதா?’ என்று கேட்டார். ‘எனக்கு எதுவும் தெரியவில்லை’ என்றேன். உடனே அவர், ‘எல்லோருக்கும் தெரிகிற ஒளி உங்களுக்கு மட்டும் தெரியவில்லை’ என்று கூறி, என்னை அந்த அறையிலிருந்து வெளியில் அழைத்து வந்துவிட்டார். பிறகுதான் அவரைப் பற்றி விசாரித்துத் தெரிந்துகொண்டேன். ஆரம்பத்தில் பிழைப்புத் தேடி சென்னை வந்தவருக்கு பல்வேறு தொழில்களில் நஷ்டம் ஏற்படவே சாமியாராகிவிட்டார். அவருக்குக் குடும்பம் இருந்தாலும் தனியாக வசிப்பவர் தையூர், கேளம்பாக்கம், புதுப்பாக்கம் ஆகிய இடங்களில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டடங்களைக் கட்டியிருக்கிறார். கடந்த 2006-2011-ம் ஆண்டுகளில் கேளம்பாக்கம் பஞ்சாயத்து தலைவராக இருந்த கன்னியப்பன், அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக சிவசங்கரன் மீது புகார் எழுப்பி, அந்த இடத்தில் அம்பேத்கர் சிலையையும் நிறுவினார். சிவசங்கரன் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸார், கன்னியப்பன் மீது வழக்கு பதிவு செய்தனர். சிவசங்கரனுக்குப் பின்புலமாக தலைமைச் செயலகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற உயரதிகாரிகள் சிலர் ஆசிரம குடியிருப்பில் தங்கியிருக்கின்றனர். சிவசங்கரனின் பல்வேறு இடங்கள், கட்டடங்களின் பின்னணியை வருவாய்த்துறையினர் விசாரித்தாலே பல உண்மைகள் தெரியவரும். இப்போது புதிதாக அவர்மீது பாலியல் குற்றச்சாட்டுகளும் எழுந்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது” என்றார்.

குற்றச்சாட்டுகள் குறித்து சிவசங்கரனின் ஆசிரமத்தின் தரப்பு விளக்கத்தைக் கேட்க பலமுறை முயன்றும் பதில் சொல்ல மறுத்துவிட்டார்கள். “சிவசங்கர் பாபாவின் பக்தர்” என்று கூறிக்கொண்ட கேளம்பாக்கத்தைச் சேர்ந்த ஒருவர் நம்மிடம், “இந்தப் பகுதியில் நல்ல பள்ளிகள் எதுவும் இல்லை. அதனால், குறைந்த கல்விக் கட்டணத்தில் மாணவர்களுக்குக் கல்வி போதிக்கும் சிவசங்கர் பாபாவைக் களங்கப்படுத்தி, அவரது பள்ளியைச் சீர்குலைக்கும் நோக்கத்தில் இதே பகுதியில் இருக்கும் பிரபல தனியார் பள்ளி செய்யும் சதி இது. இதை பாபா சட்டப்படி எதிர்கொள்வார்” என்றார்.

தோண்டத் தோண்ட பூதங்கள் கிளம்புவதுபோல இன்னும் எத்தனை பள்ளிகளிலிருந்துதான் இப்படி பாலியல் பூதங்கள் கிளம்புமோ என்று தெரியவில்லை. குழந்தைகளை மென்மேலும் கவனித்து, பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கும் அரசுத் தரப்புக்குமே இருக்கிறது.