கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி பகுதியைச் சேர்ந்த பழங்குடி இளைஞர் மது என்பவர், 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ம் தேதி ஒரு கும்பலால் அடித்துக் கொலைசெய்யப்பட்டார். பசிக்கு உணவுப் பொருள்கள் திருடியதாகக் குற்றம்சுமத்தி மதுவை அஜமுடி காட்டிலிருந்து பிடித்துக் கொண்டுவந்து, முக்காலி பகுதியில் கட்டிவைத்து ஒரு கும்பல் அடித்தது. அதில் அவர் உடலில் 45-க்கும் அதிகமான காயங்கள் ஏற்பட்ட நிலையில், மரணமடைந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மது கொலை வழக்கு மண்ணார்க்காடு மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையில் 16 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ம் தேதி சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியது. 103 சாட்சிகளிடம் அரசுத் தரப்பு வக்கீல் விசாரணை நடத்தினார். அதில் 24 சாட்சிகள் பிறழ்சாட்சிகளாக மாறினர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் எட்டு சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் எடுத்த வீடியோக்கள் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன.

இந்த நிலையில் மது கொலை வழக்கில் கடந்த மாதம் 30-ம் தேதி தீர்ப்பு வழங்கவிருப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அன்று வழக்கை விசாரித்த நீதிமன்றம், தீர்ப்பை ஏப்ரல் 4-ம் தேதி அறிவிப்பதாகத் தெரிவித்தது. அதன்படி இன்று மது கொலை வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில், நான்காம் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட அனீஷ், 11-ம் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட அப்துல் கரீம் ஆகியோர் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டனர். முதல் குற்றவாளியான ஹுசைன் உள்ளிட்ட 14 பேரும் குற்றவாளிகள் என கோர்ட் அறிவித்தது. அவர்களுக்கான தண்டனை நாளை அறிவிக்கப்படும் என கோர்ட் அறிவித்திருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மதுவின் மரண வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

அதேசமயம், மது கொலை வழக்கில் நீதி கிடைக்கவில்லை என மதுவின் தாய் மல்லி, சகோதரி ஆகியோர் தெரிவித்திருக்கின்றனர். ``இந்த வழக்கில் நீதிக்காக நிறைய துயரங்களைச் சந்தித்தோம். நிறைய மிரட்டல்கள் வந்தன. ஆனால், மதுவின் மரணத்துக்கு நீதி கிடைக்கவில்லை. 16 பேரும் குற்றவாளிகள் என நாங்கள் கருதுகிறோம். அதில் இரண்டு பேர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட் வரை சென்று நீதி கேட்போம்" என மதுவின் தாய், சகோதரி ஆகியோர் கூறியிருக்கின்றனர். குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என மதுவின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 14 பேரும் மாவட்டச் சிறைக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர்.