Published:Updated:

மயக்கிய சவுதி ஸ்வப்னா... மயங்கிய கேரள அதிகாரிகள்...

சவுதி ஸ்வப்னா
பிரீமியம் ஸ்டோரி
News
சவுதி ஸ்வப்னா

பினராயி தலையை உருட்டும் தங்கக் கடத்தல்

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி ஆட்சியில் `சோலார்’ சரிதா நாயர் புயலைக் கிளப்பியதுபோல, பினராயி விஜயன் ஆட்சியில் சூறாவளியைக் கிளப்பியிருக்கிறார் தங்கம் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஸ்வப்னா சுரேஷ்.

திருவனந்தபுரத்தில் செயல்படும் ஐக்கிய அரபு நாடுகளின் தூதரகத்துக்கு விமானம் மூலம் வரும் பார்சல்களில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் சென்றது. ஒரு நாட்டின் தூதரகத்துக்கு அந்த நாட்டிலிருந்து வரும் பார்சல்களைச் சோதனை செய்ய சுங்க அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை. எனவே, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடன், யூ.ஏ.இ தூதரகத்துக்கு ‘உணவுப் பொருள்கள்’ என்ற முத்திரையுடன் வந்த பார்சலை ஜூலை 6-ம் தேதி சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

ஸ்வப்னா
ஸ்வப்னா

அந்த பார்சலைப் பெற்றுக்கொள்வ தற்காக யூ.ஏ.இ தூதரகக் கடிதத்துடன் வந்த ஸரித் என்பவர் கைது செய்யப் பட்டார். அவர் யூ.ஏ.இ தூதரகத்தின் முன்னாள் ஊழியர். பணியில் இருந்து நீக்கப்பட்ட அவர், `தூதரக பி.ஆர்.ஓ’ எனக் கூறிக்கொண்டு தங்கம் கடத்தலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஸரித்திடம் நடத்திய விசாரணையில், கேரள தலைமைச் செயலக ஐ.டி பிரிவில் ஆபரேஷன் மேலாளராக தற்காலிகப் பணியிலிருக்கும் ஸ்வப்னா சுரேஷ் என்பவருக்குத் தொடர்பிருப்பது தெரியவந்தது. ஸ்வப்னா சுரேஷ் தலைமறைவான நிலையில், முதல்வர் அலுவலகத் துக்கும் ஸ்வப்னாவுக்கும் தொடர்பிருப்பதாகச் சர்ச்சை கிளம்பியுள்ளது.

‘‘ஸ்வப்னாவைக் காப்பாற்றுவதற்காக முதல்வர் அலுவலகத்திலிருந்து சுங்கத்துறை அதிகாரிகளுக்கு போன் சென்றது’’ என்று எதிர்க்கட்சித் தலைவர் (காங்கிரஸ்) ரமேஷ் சென்னிதலா கூறியதால், இந்தப் பிரச்னை கேரள அரசியலில் புயலைக் கிளப்பியது. இதன் தொடர்ச்சியாக ஸ்வப்னாவின் வீட்டுக்குச் செல்லும் அளவுக்கு நெருக்கமாக நட்பு பாராட்டிய முதல்வர் பினராயி விஜயனின் செயலர் சிவசங்கரன் அந்தப் பதவியிலிருந்து நீக்கப் பட்டுள்ளார். அதே சமயம், அவர் வகித்துவந்த ஐ.டி செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்படவில்லை.

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, அங்குள்ள உயர் அதிகாரிமீது பாலியல் புகார் தெரிவித்தார் ஸ்வப்னா. `அந்தப் புகாரில் உண்மை இல்லை’ என்றும், `ஸ்வப்னாவைக் குற்றவாளியாக விசாரிக் கலாம்’ என்றும் கோர்ட்டில் க்ரைம் பிராஞ்ச் போலீஸார் தெரிவித்திருந்தனர். திருவனந்தபுரத்திலுள்ள யூ.ஏ.இ தூதரகத்தில் செயலாளராக இருந்த சமயத்தில், மோசடிப் புகார் காரணமாக பணியிலிருந்து நீக்கப்பட்டவர் ஸ்வப்னா. ‘இவ்வளவு குற்றச்சாட்டுக்கு ஆளான ஸ்வப்னா முதல்வர் அலுவலகத்தில் தற்காலிகப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். எனவே, இது பினராயி விஜயனுக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை’ என்பதே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.

மயக்கிய சவுதி ஸ்வப்னா... மயங்கிய கேரள அதிகாரிகள்...

இதுபற்றி கேரள மாநில பி.ஜே.பி தலைவர் கே.சுரேந்திரன், ‘‘முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி தனக்கு சரிதாவுடன் எந்தத் தொடர்பு இல்லை; அவரைப் பற்றித் தெரியாது எனச் சொன்னார். அதுபோல ஸ்வப்னா சுரேஷை தெரியாது என பினராயி விஜயன் கூறுவதும் பச்சைப் பொய். உம்மன் சாண்டி காதில் ரகசியம் பேசும் அளவுக்கு சரிதா நாயருக்கு சுதந்திரம் இருந்தது. அதுபோல 2017-ம் ஆண்டு, செப்டம்பர் 24-ம் தேதி ஷார்ஜா ஷேக்குக்கு நடத்தப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியின்போது முதல்வர் பினராயி விஜயனின் காதில் சில விஷயங்களைப் பேசும் அளவுக்கு ஸ்வப்னா அதிகாரம் மிக்கவராக இருந்தார். முதல்வர் அலுவலகத்துக்குத் தொடர்பு இல்லையென்றால், எதற்காக சிவசங்கரனை மாற்றினார்கள்?’’ என்று கேள்வி எழுப்பினார்.

இதுபற்றி முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ‘‘சர்ச்சைக்குரிய பெண்ணுக்கும் முதல்வர் அலுவலகத்துக்கும் தொடர்பு இல்லை. ஐ.டி துறையில் நிறைய புராஜெக்டுகள் உண்டு. அவற்றில் ஒரு திட்டத்தின் மார்க்கெட்டிங் தலைவர் பதவியில், ஒப்பந்த அடிப்படையில் பணியில் இருந்துள்ளார். ஒருவேளை வேலைக்கு எடுத்த ஏஜென்சிக்கு அவருடன் பழக்கம் இருந்திருக்கலாம். எந்தக் குற்றவாளியையும் பாதுகாக்க வேண்டிய தேவை அரசுக்கு இல்லை. முதல்வர் அலுவலகத்திலிருந்து யாரும் அழைக்கவில்லை என்று கஸ்டம்ஸ் அதிகாரிகளே தெளிவு படுத்தியுள்ளனர். அந்தப் பெண்ணுடன் பொது இடத்தில் சிவசங்கரன் இருப்பது போன்ற தகவல்கள் வந்ததால் அவர் நீக்கப்பட்டார். ஒரு இஃப்தார் விருந்தில் அந்தப் பெண் பங்கெடுத்ததைச் சிலர், ‘முதல்வருடன் ரகசியம் பேசுகிறார்’ என்று பரப்புகிறார்கள். தேர்தலுக்குச் சில மாதங்களே உள்ள நிலையில் அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தலாம் என்றால் அது நடக்காது’’ என்றார்.

மயக்கிய சவுதி ஸ்வப்னா... மயங்கிய கேரள அதிகாரிகள்...

திருவனந்தபுரத்தில் ஸ்வப்னா தொடங்கிய ஒரு ஸ்டார்ட்-அப் கம்பெனியை கேரள சபாநாயகர் ஶ்ரீராமகிருஷ்ணன் தொடங்கிவைத்தார். ஸ்வப்னா தங்கம் கடத்தல் வழக்கில் சிக்கியதைத் தொடர்ந்து சபாநாயகரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதுகுறித்து ஸ்ரீராமகிருஷ்ணன், ‘‘அவர் யூ.ஏ.இ தூதரகச் செயலாளர் என்ற முறையில் எனக்கு தெரியும். அதன் அடிப்படையில் அவர் அழைத்ததால் அந்த நிகழ்ச்சிக்குச் சென்றேன்’’ என்கிறார்.

இந்த நிலையில், ‘‘கேரள ஐ.டி துறையிலிருந்து தனியார் நிறுவனமான பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனத்துக்கு ஸ்வப்னாவின் புரொஃபைல்கள் அனுப்பிவைக்கப்பட்டன. அதன் பிறகே அவர் ஒரு வருட ஒப்பந்தப் பணியில் சேர்க்கப்பட்டார்’’ என்று பதவியிலிருந்து நீக்கப்பட்ட சிவசங்கரன் தெரிவித்திருப்பது கேரள அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

விடை தெரியாத கேள்விகள்!

ஸ்வப்னா சுரேஷின் மர்மப் பக்கங்கள் இன்னும் வெளியே வராமலேயே உள்ளன. ஸ்வப்னாவின் தந்தை அரபு நாடுகளில் பிசினஸ் செய்துவந்தவர் என்பதால், ஸ்வப்னாவுக்கு அரபி மொழி நன்கு தெரியும். ஆனாலும், 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாகக் கூறப்படும் ஸ்வப்னா ஏர் இந்தியா நிறுவனத்திலும், யூ.ஏ.இ தூதரகத்திலும் பணிக்குச் சேர்ந்தது எப்படி என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. இதுவரை 30 முறைக்கும் மேல் தங்கம் கடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. ‘யூ.ஏ.இ-யிலிருந்து தங்கம் அனுப்புவதும், அதைப் பெற்றுக்கொள்ளக் கடிதம் கொடுத்து அனுப்புவதும் யார்?’ என்ற கேள்விக்கும் இன்னும் விடை கிடைக்கவில்லை.