Published:Updated:

திருப்பூர்: காட்டிக்கொடுத்த செல்போன்... 12 மணி நேரத்துக்குள் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு!

கைதுசெய்யப்பட்ட உமா
News
கைதுசெய்யப்பட்ட உமா

"கடத்தப்பட்ட 12 மணி நேரத்தில் குழந்தையை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்திருக்கிறோம்." - திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீண்குமார் அபிநபு

Published:Updated:

திருப்பூர்: காட்டிக்கொடுத்த செல்போன்... 12 மணி நேரத்துக்குள் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு!

"கடத்தப்பட்ட 12 மணி நேரத்தில் குழந்தையை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்திருக்கிறோம்." - திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீண்குமார் அபிநபு

கைதுசெய்யப்பட்ட உமா
News
கைதுசெய்யப்பட்ட உமா

திருப்பூர் மாவட்டம், பல்லடம் கே.அய்யம்பாளையம் பகுதியிலுள்ள பனியன் நிறுவனத்தில், ஒடிசாவைச் சேர்ந்த அர்ஜூன்குமார் (26) என்பவர் தங்கிப் பணியாற்றிவருகிறார். இவரின் மனைவி கமலினி (24). கர்ப்பிணியான கமலினி கடந்த 22-ம் தேதி பிரசவத்துக்காக, தாராபுரம் சாலையிலுள்ள திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கமலினிக்கு அன்றைய தினமே ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்துக்குப் பிறகு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கமலினி அருகே, அறுவை சிகிச்சை செய்துகொண்ட எஸ்தர் ராணி என்ற பெண் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உதவியாக உமா என்ற பெண் இருந்திருக்கிறார். அருகருகே இருந்ததால் உமா, கமலினியின் குழந்தையைக் கவனித்து உதவியும் செய்துவந்திருக்கிறார். இந்த நிலையில், உமா உதவி செய்து வந்ததால், அர்ஜூன்குமார் செவ்வாய்க்கிழமை வேலைக்குச் சென்றிருக்கிறார்.

குழந்தையின் தாய் கமலினி
குழந்தையின் தாய் கமலினி

வேலை முடிந்து செவ்வாய்க்கிழமை மாலை, மருத்துவமனைக்கு வந்த அர்ஜூன்குமார், மனைவி கமலினியிடம் குழந்தையைக் கேட்டிருக்கிறார். அப்போது, குழந்தையை இன்குபேட்டரில் வைக்க செவிலியர்கள் கேட்டதாகக் கூறி உமா வாங்கிச் சென்றதாகத் தெரிவித்திருக்கிறார். இன்குபேட்டர் அறைக்குச் சென்று பார்த்தபோது, உமாவும், குழந்தையும் இல்லாதது தெரியவந்தது. மருத்துவமனையில் விசாரித்துவிட்டு, உடனடியாக இது குறித்து அர்ஜூன்குமார் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். அதில், உமா ஒரு பையில் வைத்து குழந்தையைக் கடத்திச் சென்றது தெரியவந்தது.

உமாவின் செல்போன் எண்ணுக்குத் தொடர்புகொண்டபோது, அது விழுப்புரத்தில் கடைசியாக சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. எனவே, அவரின் புகைப்படங்களை வெளியிட்டு போலீஸார் தேடுதலை தீவிரப்படுத்தினர். உமா செல்போன் எண்ணை போலீஸார் ஆய்வுசெய்ததில், திருப்பூர் அம்மாபாளையம் பகுதியிலுள்ள ஒருவரிடம் உமா அடிக்கடி பேசியது தெரியவந்தது. அங்கு சென்ற போலீஸார், விஜய் என்பவரைப் பிடித்து விசாரித்தனர்.

போலீஸார் விசாரணை
போலீஸார் விசாரணை

அதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த உமா கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யைக் காதலித்து திருமணம் செய்துகொண்டு, அம்மாபாளையத்தில் வசித்து வந்திருக்கிறார். கருவுற்ற மூன்று மாதங்களில் கரு கலைந்ததால், உமா விரக்தியில் இருந்ததாகவும், திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எஸ்தர் ராணிக்கு உதவி செய்வதற்காகச் சென்றதாகவும் தெரிவித்தார். விஜய் அளித்த தகவலின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், பரங்கிநத்தம் கிராமத்திலுள்ள ராணி என்பவரது வீட்டுக்கு போலீஸார் சென்றனர்.

அங்கு குழந்தையுடன் தங்கியிருந்த உமாவைக் கைதுசெய்த போலீஸார், குழந்தையை பத்திரமாக மீட்டனர். இதைத் தொடர்ந்து, மீட்கப்பட்ட குழந்தை மருத்துவர்கள் உதவியுடன் கள்ளக்குறிச்சியிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு புதன்கிழமை மாலை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீண்குமார் அபிநபு பேசுகையில், "கடத்தப்பட்ட 12 மணி நேரத்தில் குழந்தையை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்திருக்கிறோம். திருப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியிலிருந்து கடந்த மார்ச் 25-ம் தேதியிலும், கடந்த செவ்வாய்க்கிழமை குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்திலும் பெற்றோர்களின் கவனக்குறைவு காரணமாகவே அமைந்திருக்கிறது.

பிரவீண்குமார் அபிநபு
பிரவீண்குமார் அபிநபு

இரண்டு சம்பவங்களிலும் தாய்க்கு உதவுவதுபோல் நடித்துதான் குழந்தையைக் கடத்தியிருக்கின்றனர். குறிப்பாக, இந்தச் சம்பவத்தில் கமலினியின் உதவியாளராக உமாவின் பெயர்தான் இருக்கிறது. உமாவுக்குக் குழந்தை இல்லாத விரக்தியில் குழந்தையைக் கடத்தியிருக்க வாய்ப்பிருக்கிறது. இருப்பினும், முழுமையான காரணம் தெரியவில்லை. உமாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார். திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் முருகேசன், ``கடத்தப்பட்ட குழந்தை நல்ல உடல்நிலையில் இருக்கிறது. இனிவரும் நாள்களில் பிரசவத்துக்குப் பிறகு குழந்தையை தாய் அல்லது மருத்துவமனை ஊழியர்கள் மட்டுமே கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டிருக்கிறது. பெண்ணின் உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் என யாரும் குழந்தைகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. வடமாநிலத் தொழிலாளர்கள் பிரசவத்துக்காக அதிகம் அனுமதிக்கப்படுவதால், குழந்தை பாதுகாப்பு குறித்து அவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் இந்தியில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்படும்" என்றார்.

திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஒரே மாதத்துக்குள் இரண்டு குழந்தைகள் கடத்தப்பட்டிருப்பது, மருத்துவமனையின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியிருக்கிறது.