மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஐந்து மாதங்களுக்கு முன்பு கடத்தப்பட்டு, பணத்துக்காக இரண்டு முறை திருமணம் செய்துவைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய மத்தியப் பிரதேச குழந்தைகள் நலவாரியத் தலைவி கனிஸ் பாத்திமா,``17 வயது சிறுமி கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு 10-ம் வகுப்புத் தேர்வை எழுதிவிட்டு சுற்றுலாச் செல்ல புறப்பட்டிருக்கிறார். அதற்காக அவர் கட்னி ரயில் நிலையத்தில் ரயிலுக்காகக் காத்திருந்தபோது, சில இளைஞர்கள் அந்தச் சிறுமியிடம் நட்பாகப் பேசி, அருகிலுள்ள பூங்காவுக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

மேலும், சிறுமிக்கு குளிர்பானம், உணவு ஆகியவற்றை வழங்கி சாப்பிட வைத்திருக்கின்றனர். அதன் பிறகு சிறுமிக்கு சுயநினைவு திரும்பியபோது, உஜ்ஜயினியிலுள்ள ஒரு ஹோட்டல் அறையில் இரண்டு ஆண்கள், ஒரு பெண்ணுடன் இருப்பதைக் கண்டு மிரண்டிருக்கிறார். மேலும், அந்தக் குழு சிறுமியை மிரட்டி 27 வயது இளைஞரைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி, திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். அந்தத் திருமணத்துக்குப் பிறகே, சிறுமி மணமகளாக ரூ.2 லட்சத்துக்கு அந்த நபரிடம் விற்கப்பட்டிருப்பதை அறிந்திருக்கிறார். இதற்கிடையே, புதிதாகத் திருமணம் செய்துகொண்டவர் பூச்சிமருந்து அருந்தி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
அதனால், இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள், சிறுமியைக் கோட்டா மாவட்டத்தின் கன்வாஸ் பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபருக்கு மணமகளாக ரூ.3 லட்சத்துக்கு விற்றிருக்கின்றனர். இதனால் மனமுடைந்த சிறுமி தற்கொலைக்கும் முயன்றிருக்கிறார். இந்த நிலையில்தான், அவர்களிடமிருந்து தப்பிய சிறுமி கோட்டா பகுதி ரயில் நிலையத்துக்கு வந்திருக்கிறார். அவர் நோய்வாய்ப்பட்டிருப்பதை அறிந்த ரயில்வே காவல்துறை அதிகாரி ஒருவர், அந்தச் சிறுமியை மீட்டு விசாரித்தபோது, நடந்தக் கொடூரங்களைத் தெரிவித்திருக்கிறார்.

உடனே காவல்துறை அதிகாரிகள், குழந்தைகள் நலவாரியத்துக்குத் தகவலளித்தனர். தற்போது சிறுமியைக் குழந்தைகள் நலவாரிய அமைப்பு மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறது. மேலும், சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் சிறுமியைக் காணவில்லை என்பது குறித்து புகாரளித்திருந்த நிலையில், அவர்களிடம் சிறுமி சிகிச்சைக்குப் பிறகு ஒப்படைக்கப்படுவார். குற்றவாளிகளை அடையாளம் காண காவல்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது" எனத் தெரிவித்தார்.