இணையத்தின் வருகைக்குப் பிறகு கணினிமயமாக்கல் வேலைகள் அனைத்துக்கும் மனிதன் பழக்கப்படுத்தப்பட்டான். அடுத்து, மனிதன் பார்க்கும் வேலைகளைச் செய்ய மனிதர்களைக்கொண்டே ரோபோக்கள் உருவாக்கப்பட்டன. தற்போது மனிதனின் மூளையைப்போலவே சிந்தித்து செயல்படுமளவுக்கு, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) எனும் அடுத்தகட்டத்தை நோக்கி தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டேயிருக்கிறது. குறிப்பாக இந்த AI தொழில்நுட்பம் குறிப்பிட்ட மனிதர்களின் முகம், குரல் ஆகியவற்றைப் பதிவுசெய்து, அச்சு அசல் அந்தக் குறிப்பிட்ட நபர்களைப்போலவே பேசவும் செய்யும்.

இவ்வாறான தொழில்நுட்ப வளர்ச்சியில் பல்வேறு நன்மைகள் இருக்கும் அதே அளவுக்கு மோசடிகளும் இருக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்து எதுவும் இருக்க முடியாது. அதை உறுதிப்படுத்தும் விதமாகவே, அமெரிக்காவில் ஒரு கடத்தல் கும்பல் AI தொழில்நுட்பத்தின் மூலம், சிறுமி ஒருவரைப்போலவே பேசி, சிறுமியின் தாயிடம் பணம் பறிக்க முயன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
இது குறித்து ஊடகத்திடம் பேசிய ஜெனிஃபர் டெஸ்டெஃபனோ (Jennifer DeStefano) என்பவர், ``என்னுடைய மகள் பிரியானா (Briana), பனிச்சறுக்குப் பயணத்தில் (Skiing Trip) இருந்தபோது, தெரியாத எண்ணிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது.
அதை எடுத்துப் பேசியபோது, என் மகள் அழும் குரல் கேட்டது. நான் பதறிவிட்டேன். என்ன ஆனது என்று நான் கேட்டபோது, சிலர் தன்னைக் கடத்தியிருப்பதாகவும், காப்பாற்றுங்கள் என்றும் என் மகள் கூறியதும் இன்னொரு நபர், `நான் சொல்வதைக் கேள். உன்னுடைய மகள் என்னிடம் இருக்கிறாள். நீங்கள் போலீஸ் அல்லது வேறு யாரை வேண்டுமானாலும் அழையுங்கள். ஆனால், நான் உங்கள் மகளுக்குப் போதைப்பொருள் செலுத்தி, மெக்ஸிகோவில் இறக்கிவிடப்போகிறேன்' என்றார். பின்னர் என் மகளை என்னிடம் ஒப்படைக்க ஒரு மில்லியன் டாலர் கேட்டார். என்னிடம் அவ்வளவு பணம் இல்லையென்றதும் ஒருவழியாக அந்தக் கடத்தல்காரர் 50,000 டாலருக்கு ஒத்துக்கொண்டார்.

அது முழுக்க முழுக்க என் மகளின் குரல்தான். அதனால்தான் ஒரு நொடிகூட யோசிக்காமல் இந்த முடிவுக்கு வந்தேன். பிறகுதான் என்னுடைய மகள் பனிச்சறுக்குப் பயணத்தில் பாதுகாப்பாக இருப்பது தெரியவந்தது" என்றார்.
மேலும் இந்தச் சம்பவம் குறித்து ஜெனிஃபர் டெஸ்டெஃபனோ ஃபேஸ்புக்கில், ``இது போன்ற இக்கட்டான சூழலில் உங்கள் குடும்பத்துக்கு மட்டுமே தெரிந்த ஒரு வார்த்தையைக் கேள்வியாகக் கொண்டுவாருங்கள். அப்போது நீங்கள், AI-யால் மோசடி செய்யப்படுகிறீர்களா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்" என்று தெரிவித்திருந்தார். இன்னொருபக்கம், இதை யார் செய்தார்கள் என போலீஸ் விசாரணை செய்துவருகிறது.