விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை மாவட்டம் பேரையூர், தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதிகள் இணைக்கப்பட்டு 2021-ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டது. இதையடுத்து, வனப்பகுதிக்குள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் பாட்டில்கள், பாலிதீன் பைகள், வெடிக்கக்கூடிய பொருள்களைக் கொண்டுசெல்லவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், அத்திக்கோயில் பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருப்பதாக கூமாப்பட்டி போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து கான்சாபுரத்தைச் சேர்ந்த சோலையப்பன் என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் போலீஸார் சோதனை நடத்தியதில் அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த நான்கு நாட்டு வெடிகுண்டுகளைத் தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து சோலையப்பனிடம் விசாரித்தபோது, "இரவு நேரத்தில் தோட்டத்தில் யாரும் தங்குவதில்லை. இதனால் நாட்டு வெடிகுண்டுகளைத் தோப்புக்குள் பதுக்கிவைத்தது யார் என்பது எனக்குத் தெரியாது" எனக் கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து போலீஸார் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.

வத்திராயிருப்பு மலையடிவாரப் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கிவைக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்துவருகின்றன. இதேபோல, வத்திராயிருப்பு மலையடிவாரத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நாட்டு வெடிகுண்டு வைத்து காட்டுப்பன்றி வேட்டையாடியவர்களை போலீஸார் கைதுசெய்தனர். அதேபோல கான்சாபுரம் அருகே ஓடையில் ஒன்பது நாட்டு வெடிகுண்டுகளை மறைத்துவைத்திருந்த ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டனர். கடந்த செப்டம்பர் மாதம் அத்திக்கோயில் பகுதியிலுள்ள தனியார் தென்னந்தோப்பில் வேட்டையாடுவதற்காக ஐந்து நாட்டு வெடிகுண்டுகளைப் பதுக்கிவைத்திருந்த மூன்று பேரை போலீஸார் கைதுசெய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.