மதுரை, சிந்தாமணி ரிங்ரோடு பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அதனடிப்படையில் கீறைத்துறை காவல் நிலைய போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினிவேனை நிறுத்தினர். அப்போது வேனை ரோட்டு ஓரம் நிறுத்திவிட்டு, அதில் வந்த கும்பல் தப்பியோடியது. ஒருவர் மட்டும் போலீஸில் சிக்கினார். அந்த வேனைச் சோதனையிட்டதில் உள்ளே இருந்த சாக்கு மூட்டைகளில் கஞ்சா இருந்திருக்கிறது.

பின்னர் நடத்திய விசாரணையில், அவர்கள் மதுரையைச் சேர்ந்த ராஜ்குமார், சண்முகராஜா, தூத்துக்குடியைச் சேர்ந்த சுடலைமணி, மகேஷ்குமார், முத்துராஜ், ராஜா ஆகியோர் எனத் தெரியவந்தது. கும்பலில் சிக்கிய ராஜ்குமாரிடமிருந்து 40 கிலோ கஞ்சா, நான்கு செல்போன் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், தூத்துக்குடியைச் சேர்ந்த ஆரோன் என்பவரிடமிருந்து கஞ்சா வாங்கியதாகக் கூறினர். அவர் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் கருவாடு ஏற்றுமதி செய்யும் ஒருவரின் தோட்டத்தில் இருப்பதைக் கண்டுபிடித்தனர். ஆரோனைப் பிடிக்க கீரைத்துறை ஆய்வாளர் பெத்துராஜ் தலைமையிலான தனிப்படை போலீஸார் தூத்துக்குடிக்கு வந்தனர்.

சாத்தான்குளம் அருகேயிருக்கும் வேலன்புதுக்குளத்திலுள்ள ஒருவரின் தோட்டத்துக்குச் சென்றனர். அங்கு நடத்திய சோதனையில் டெம்போ வேனில் இருந்த சாக்கு மூட்டைகளில் 2,050 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆரோனையும் கைதுசெய்தனர். பின்னர் கைதுசெய்யப்பட்ட ஆறு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இது குறித்து கீறைத்துறை போலீஸாருக்கு உதவிய சாத்தான்குளம் போலீஸாரிடம் பேசினோம். “மீன்களை, கருவாடாகக் காயவைத்து வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்வதாக, அந்தத் தோட்டத்தின் உரிமையாளரிடம் கூறி இரண்டு மாதங்களுக்கு முன்பு தோட்டத்தை வாங்கியிருக்கின்றனர். கருவாடு ஏற்றுமதி செய்வதுபோல நடித்து, கஞ்சாவைப் பதுக்கியும் கடத்தியும் வந்திருக்கின்றனர். மதுரையில் வாகன சோதனையில் பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையின் மூலம், இங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த 2,050 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த கஞ்சாவின் சர்வதேச மதிப்பு ரூ.4 கோடி வரை இருக்கலாம். ஆந்திர மாநிலம், ராஜமுந்திரி என்ற இடத்திலிருந்து மதுரையைச் சேர்ந்த ஜெயக்குமார், ராஜ்குமார் ஆகியோர் கஞ்சாவை வாங்கி போலிப் பதிவு எண்கொண்ட காரில் கடத்தி வந்து கூலி ஆட்கள் மூலம் தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்குக் கடத்தி வந்திருக்கின்றனர். இது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது” என்றனர்.