கொடுத்த கடனைத் திரும்ப வாங்க எத்தனையோ வழிகளைக் கையாள்வதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், பீகாரில் கொடுத்த கடனை வசூலிக்க 11 வயது சிறுமியை, கடன் கொடுத்தவர் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். பீகாரிலுள்ள சிவான் மாவட்டத்திலிருக்கும் லட்சுமிபூர் என்ற கிராமத்தில் வசிப்பவர் மகேந்திர பாண்டே (40). இவர் அதே கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் கடன் கொடுத்திருந்தார். அந்தக் கடனை அந்தப் பெண்ணால் திரும்பக் கொடுக்க முடியவில்லை. கடனைக் கேட்டுப் பார்த்த பாண்டே அதற்கு ஒரு மாற்றுத்தீர்வு சொல்லியிருக்கிறார்.

இது குறித்து அந்தச் சிறுமியின் தாயார், ``என்னுடைய மகளை தன் வீட்டில் தங்கவைத்து படிக்கவைப்பதாக பாண்டே தெரிவித்தார். ஆனால், படிக்கவைத்து அவளைத் திருமணம் செய்துகொண்டார். என்னுடைய மகள் எனக்கு வேண்டும்'' என்று தெரிவித்தார். பாண்டேயும், மைனர் பெண்ணும் விரும்பித்தான் திருமணம் செய்துகொண்டதாக இருவரும் தெரிவித்திருக்கின்றனர்.
சிறுமியின் தாயார் இது தொடர்பாக போலீஸில் புகார் செய்திருக்கிறார். போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து பாண்டேயைக் கைதுசெய்திருக்கின்றனர். பாண்டேயிக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சிறுமியிடம் கேட்டதற்கு, ``என்னுடைய தாயார் பாண்டேயிடமிருந்து கடன் வாங்கியிருக்கிறார். எவ்வளவு வாங்கினார் என்று தெரியாது. ஆனால், என்னுடைய தாயாரின் சம்மதத்தின் பேரில்தான் திருமணம் செய்துகொண்டோம். நாங்கள் சேர்ந்து வாழ விரும்புகிறோம். எங்களை என் தாயார் சிக்கவைத்திருக்கிறார்'' என்றார்.

இது குறித்து பாண்டே, ``நான் சிறுமியைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்யவில்லை. அந்தப் பெண், அவரின் தாயாரின் ஒப்புதலோடுதான் திருமணம் செய்துகொண்டேன். அதிகப் பணம் பறிக்க வேண்டும் என்பதற்காக பெண்ணின் தாயார் என்னைச் சிக்கவைத்திருக்கிறார். என்னை மிரட்டி பணம் கேட்கிறார். எங்களுக்குள் எந்தவித பணப் பரிவர்த்தனையும் நடைபெறவில்லை'' என்று தெரிவித்தார்.