சத்தீஸ்கர் மாநிலம், கபீர்தாம் மாவட்டத்தில் வசித்தவர் ஹேமேந்திரா மெராவி (22). இவருக்குக் கடந்த 1-ம் தேதி பெற்றோரால் நிச்சயிக்கப்படு, திருமணம் நடந்தது. சிறப்பாக நடந்து முடிந்த திருமணத்தில் பல்வேறு பரிசுப் பொருள்கள் குவிந்தன. அதில் ஒன்று, ஹோம் தியேட்டர் மியூசிக் சிஸ்டம். இதை மணமகன் ஹேமேந்திரா மெராவியும், அவரின் சகோதரர் ராஜ்குமாரும் (30) இயக்குவதற்கு முயன்றனர். அதற்காக ஹோம் தியேட்டர் மியூசிக் சிஸ்டத்தை மின் இணைப்போடு இணைத்தபோது அது வெடித்துச் சிதறியது.

இதில் மணமகன், அவரின் சகோதரர், ஒரு வயதுக் குழந்தை உட்பட ஆறு பேர் படுகாயமடைந்தனர். அதைத் தொடர்ந்து, உடனே அவர்கள் கவுரதாவிலுள்ள மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி மணமகனும், அவரின் சகோதரரும் உயிரிழந்தனர். மற்றவர்களுக்குச் சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்த காவல்துறை அதிகாரிகள், அந்த ஹோம் தியேட்டர் மியூசிக் சிஸ்டத்தை ஆய்வு செய்தபோது அதில் வெடிபொருள்கள் நிரப்பப்பட்டிருந்தது தெரியவந்தது.
திருமணத்தன்று புதுமணத் தம்பதிக்கு யாரெல்லாம் பரிசு வழங்கினார்கள் என்ற பட்டியலை காவல்துறை அதிகாரிகள் ஆய்வுசெய்தனர். அதில் மணமகளின் முன்னாள் காதலன் சர்ஜு பெயரும், அவர்தான் இந்த ஹோம் தியேட்டர் மியூசிக் சிஸ்டத்தை வழங்கியிருக்கிறார் என்பதும் தெரியவந்தது. உடனே அவரைத் தேடிக் கைதுசெய்த காவல்துறை அதிகாரிகள், இது குறித்து விசாரித்துவருகின்றனர்.

கபீர்தாம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மனிஷா தாகூர்,"விசாரணையின்போது, குற்றம்சாட்டப்பட்ட சர்ஜு, தன் முன்னாள் காதலியைத் திருமணம் செய்துகொண்ட ஹேமேந்திரா மெராவி மீது கோபமாக இருந்ததை ஒப்புக்கொண்டார். எனவே, அவர் வெடிபொருள்கள் நிரம்பிய ஹோம் தியேட்டரைப் பரிசாகக் கொடுத்து, இந்தக் கொலைச் சம்பவத்தை நிகழ்த்தியிருக்கிறார். மேலும் விசாரணை நடந்துவருகிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.