மகாராஷ்டிரா மாநிலம், லாத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வைபவ் வாக்மாரே (30). இவர் புனேயில் தங்கியிருந்து தனியார் கம்பெனியில் பணிபுரிந்துவந்தார். இவருக்கும் அம்ரபல்லி (25) என்ற உறவுக்காரப் பெண்ணுக்கும் திருமணத்துக்கு முன்பே தொடர்பு இருந்தது. அம்ரபல்லிக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகும், அவர்களுக்குள் தொடர்பு நீடித்தது. அம்ரபல்லி இரு குழந்தைகளுடன் புனே கொண்ட்வா பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தார். அம்ரபல்லிக்கு வேறு ஆண்களுடன் தவறான உறவு இருப்பதாக வைபவ் சந்தேகப்பட்டார். இதனால் அடிக்கடி இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுவந்தது.

நேற்று இரவு இருவருக்குமிடையே மீண்டும் இது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் கோபத்தில் அம்ரபல்லியை வைபவ் கழுத்தை நெரித்துக் கொலைசெய்தார். இதை நேரில் பார்த்த 6 வயது குழந்தையையும், 4 வயது குழந்தையையும் வைபவ் கழுத்தை நெரித்துக் கொலைசெய்தார். பின்னர் உடல்களை அப்புறப்படுத்துவதற்காக வீட்டுக்கு வெளியிலிருந்த ஒரு சிறிய ஷெட்டுக்கு மூன்று பேரின் உடல்களையும் எடுத்துச் சென்றார். அதோடு பெட்ஷீட், வீட்டில் கிடந்த விறகைப் பயன்படுத்தி மூன்று பேரின் உடல்களையும் எரித்துவிட்டு, தப்பிச்சென்றுவிட்டார். காலையில் பக்கத்து வீட்டுக்காரர்கள் மூன்று பேரையும் காணவில்லை என, வீட்டுக்கு வெளியிலிருந்த சிறிய குடிலில் பார்த்தனர். அங்கு மூவரும் எரிந்து கிடந்தனர்.
உடனே இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து செயல்பட்டு, வைபவைக் கைதுசெய்திருக்கின்றனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர். நள்ளிரவில் மூன்று பேரைக் கொலைசெய்து வீட்டுக்கு முன் எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.