கன்னியாகுமரி மாவட்டம், மூலச்சல் பகுதியைச் சேர்ந்தவர் ஜெபசிங். மின் வாரிய ஊழியரான இவரின் மூத்த மகள் ஜெபபிரின்ஸா (32). இவர் 14 வருடங்களுக்கு முன்பு அழகியமண்டபம் பகுதியைச் சேர்ந்த டெம்போ டிரைவர் எபினேசர் என்பவரை காதலித்து பெற்றோர் எதிர்பையும் மீறி வீட்டைவிட்டு வெளியேறிச் சென்று திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. ஆனால், எபினேசர் குடித்துவிட்டு ஊர்சுற்றியதால் அவரது குடும்பம் வறுமையில் வாடியது. சொகுசாக வாழ்ந்த தன்னுடைய மகள் காதலனை நம்பிச்சென்று இப்படி ஆகிவிட்டாரே என மனம் நொந்த தந்தை ஜெபசிங் மகளுக்கு உதவிச்செய்ய தொடங்கியுள்ளார். தன் மகள் ஜெபபிரின்ஸாவை பியூட்டிசியன் படிக்க வைத்தார் ஜெபசிங். பியூட்டிசியன் படித்துவந்ததுடன் திருவனந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் பணியாற்றியும் வந்துள்ளார் ஜெபபிரின்ஸா.

பியூட்டி பார்லருக்கு வேலைக்குச் செல்லும் ஜெபபிரின்ஸா பணி நிமித்தமாக மேக்கப் தரித்து, நாகரிக ஆடைகளை அணிந்து சென்றுள்ளார். இதற்கு கணவர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சில சமயங்களில் பணி முடிந்து இரவு தாமதமாக வீட்டிற்கு வரும் மனைவியின் நடத்தை மீது சந்தேகமடைந்த எபினேசர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மனைவி ஜெபபிரின்ஸாவை அடித்துள்ளார். இதனால் கோபித்து கொண்ட அவர் தன் இரு குழந்தைகளுடன் மூலச்சல் உள்ள தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
கடந்த வியாழக்கிழமை இரவு குடிபோதையில் ஜெபபிரின்ஸா வீட்டிற்குச் சென்ற எபினேசர், அவரிடம் சமாதானம் பேசி இனி இது போல் நடந்து கொள்ள மாட்டேன் புது வீடு கட்டுவதற்கு தந்தையிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் வாங்கி தந்தால் போதும் என பாசமாகப் பேசியுள்ளார். பின்னர் ஜெபபிரின்ஸாவை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக்கூறி தனது பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். முலச்சல் ஆற்றங்கரையில் இருட்டான பகுதியில் சென்றபோது பைக்கை நிறுத்திய எபினேசர் மனைவி ஜெபபிரின்ஸாவை கீழே இறக்கிவிட்டுள்ளார். பின்னர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜெபபிரின்ஸாவை சரமாரியாக வெட்டியுள்ளார் எபினேசர். இதில் நிலைகுலைந்து சாலையில் விழுந்த ஜெபபிரின்ஸா, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். ஜெபபிரின்ஸாவின் அலறல் சத்தம்கேட்டு அப்பகுதியினர் அங்கு கூடியதும் எபினேசர் பைக்கில் தப்பிச்சென்றுவிட்டார்.

தகவலின்பேரில் அங்கு சென்ற தக்கலை போலீஸார் ஜெபபிரின்ஸாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தப்பி ஓடிய எபினேசரை தேடினர். போலீஸுக்கு பயந்து எபினேசர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதைப்பார்த்த அவரது உறவினர்கள் அவரை மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்தச் சம்பவம் குறித்து தக்கலை போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.