குஜராத் மாநிலம், ராஜ்கோட் மாவட்டத்தில் வசித்தவர்கள் ஹேமுபாய் மக்வானா (38), ஹன்சாபென் (35) தம்பதி. இவர்கள் இருவரும், விஞ்சியா கிராமத்திலிருக்கும் தங்கள் பண்ணையிலுள்ள குடிசையில் கடந்த ஒரு வருடமாகத் தங்கி பூஜை, சடங்குகளைச் செய்துவந்திருக்கின்றனர். கடந்த இரு தினங்களாக தம்பதி பல்வேறு சடங்குகளைச் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கணவன்-மனைவி இருவரும் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் குடிசையில் பிணமாகக் கிடந்திருக்கின்றனர். அதை அவர்களின் உறவினர்கள் தற்செயலாகப் பார்த்துவிட்டு, அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். பின்னர் உடனடியாக இது தொடர்பாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

உடனே சம்பவ இடத்துக்கு வந்த உதவி ஆய்வாளர் இந்திரஜித் சிங் தலைமையிலான காவல்துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியிருக்கின்றனர். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய காவல்துறையினர், ``கணவன், மனைவி இருவரும் பலியிடும் சடங்குகளைச் செய்துவந்திருக்கின்றனர். கில்லட்டின் (guillotin) போன்ற தலையைத் துண்டிக்கும் கருவியைக் கயிற்றின் மூலம் பிணைத்து இருவரும் தங்களைத் தாங்களே பலியிட்டுக்கொண்டதாகத் தெரிகிறது. ஏனென்றால், அவர்கள் தங்கள் தலைகள் துண்டிக்கப்பட்டவுடன்... உருண்டு நேராகப் பலி பீடத்துக்குச் செல்லும் வகையில் திட்டமிட்டிருக்கின்றனர்.
அந்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட தற்கொலைக் குறிப்பில், 'எங்கள் பிள்ளைகள், பெற்றோரை உறவினர்கள் கவனித்துக்கொள்ளுங்கள்' என்று எழுதப்பட்டிருந்தது. இது விபத்து மரணம் என வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறோம்" எனத் தெரிவித்தனர்.