creed iii, Devotion, Ant-Man and the Wasp, Gully உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஜொனாதன் மேஜர்ஸ். மார்வெல் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர், சமீபத்தில் ஆஸ்கர் விருது மேடையில் நடிகரான மைக்கேல் பி.ஜோர்டானுடன் இணைந்து தொகுப்பாளராகவும் இருந்தார். இந்த நிலையில், ஜொனாதனின் காதலி நியூ யார்க் காவல் நிலையத்தில் அவர்மீது புகாரளித்திருக்கிறார்.
அதில், ``புரூக்ளினிலுள்ள ஒரு மதுக்கடையிலிருந்து வீடு திரும்பும்போது, அவர் வேறு ஒரு பெண்ணுக்கு மெசேஜ் செய்துகொண்டிருந்தார். அதைப் பார்த்து, நான் அவரது செல்போனைப் பிடுங்க முயன்றதால் டாக்ஸியில் இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. அதன் விளைவாக வீடு வந்ததும் அவர் என்னைத் தாக்கினார். என்னுடைய கழுத்தை நெரிக்க முயன்றார். இதனால் என்னுடைய முதுகு, கழுத்து, காதுகளில் காயம் ஏற்பட்டது" எனத் தெரிவித்திருந்தார்.

உடனே சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை, ஜொனாதனைக் கைதுசெய்து அவருடைய காதலியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறது. ஆனால், நடிகர் ஜொனாதன் மேஜர்ஸ் தன்மீது எந்தக் குற்றமும் இல்லை எனவும், பொய்ப் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இருப்பினும் காவல்துறையோ, ``நடிகர் ஜொனாதன் தன்னுடைய காதலியைத் தாக்கியிருக்கிறார். அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன. அதனடிப்படையில்தான் அவரைக் கைதுசெய்திருக்கிறோம்" என்று விளக்கம் தெரிவித்திருக்கிறது.