அரசியல்
அலசல்
Published:Updated:

இஸ்லாமிய பெண்கள் இலக்கு... மேட்ரிமோனியல் மோசடி! - அதிரவைக்கும் பின்னணி

இஸ்லாமிய பெண்கள் இலக்கு...
பிரீமியம் ஸ்டோரி
News
இஸ்லாமிய பெண்கள் இலக்கு...

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரையடுத்து, முகமது உபேஸ் பயன்படுத்திய செல்போன் எண்ணிலிருந்து வேறு எந்தெந்த எண்களுக்கு அதிகமாக அழைப்புகள் சென்றிருக்கின்றன என்று ஆய்வு செய்தோம்

மேட்ரிமோனியல் தளத்தில் இரண்டாவது திருமணத்துக்காகப் பதிவுசெய்த இளம்பெண்ணிடம், 20 சவரன் நகையைப் பறித்துச் சென்று மோசடியில் ஈடுபட்ட முகமது உபேஸ் என்பவரைக் கைதுசெய்திருக்கிறது சென்னை போலீஸ். இந்த மோசடி குறித்து வெளியில் சொல்லத் தயங்கி நின்ற அந்தப் பெண், தோழி ஒருவரின் உதவியுடன் போலீஸை அணுகியதால், இதேபோல பல பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

புதுக்கோட்டை ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த ஃபரீதாவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்று, சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்தும் ஆனது. இதனால், பிறந்த வீட்டுக்குத் திரும்பிவந்த ஃபரீதாவை ஆரம்பத்தில் அவரின் பெற்றோர் அரவணைத்தாலும், நாள்கள் செல்லச் செல்ல அவரிடம் கடுமையாக நடந்துகொள்ளத் தொடங்கினர். ஒருகட்டத்தில் மனமுடைந்த ஃபரீதா, தனியார் மேட்ரிமோனியல் வெப்சைட் ஒன்றில் இரண்டாம் திருமணத்துக்காகப் பதிவு செய்திருக்கிறார். அதன் மூலமாக, முகமது உபேஸ் என்ற நபர், ஃபரீதாவுக்கு அறிமுகமானார். இதையடுத்து, 10 நாள்களாக முகமது உபேஸுடன் ஃபரீதா பேசிப் பழகியிருக்கிறார்.

முகமது உபேஸ்
முகமது உபேஸ்

இந்த நிலையில், ஃபரீதாவைத் திருமணம் செய்துகொள்வதாகவும், `அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்குப் பணம் வேண்டும். உன்னிடம் இருக்கும் நகைகளைக் கொடுத்தால் அவற்றை விற்றுவிட்டு புதிய வாழ்க்கையைத் தொடங்கலாம்’ என்றும் சொல்லியிருக்கிறார் உபேஸ். அவரை நம்பி, சென்னை ராயப்பேட்டை பகுதியிலுள்ள மால் ஒன்றில் உபேஸைச் சந்தித்திருக்கிறார் ஃபரீதா. அவரிடமிருந்து 20 சவரன் நகைகளைப் பெற்றுச் சென்ற உபேஸ் அதன் பிறகு தலைமறைவாகிவிட்டார். இதனால், ஏமாற்றத்துடன் ஊர் திரும்பிய ஃபரீதா, தனக்கு நடந்த மோசடி குறித்து சென்னையைச் சேர்ந்த தோழி ஒருவரிடம் சொல்லி அழுதிருக்கிறார். அந்தத் தோழி அளித்த நம்பிக்கையின்பேரில், தான் ஏமாற்றப்பட்டது குறித்து சென்னை அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார் ஃபரீதா.

இது குறித்து அண்ணாசாலை போலீஸாரிடம் பேசினோம். “பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரையடுத்து, முகமது உபேஸ் பயன்படுத்திய செல்போன் எண்ணிலிருந்து வேறு எந்தெந்த எண்களுக்கு அதிகமாக அழைப்புகள் சென்றிருக்கின்றன என்று ஆய்வு செய்தோம். அதில், குறிப்பிட்ட ஓர் எண்ணுக்குப் பலமுறை அழைப்புகள் சென்றிருந்ததையடுத்து அவரைத் தொடர்புகொண்டோம். சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கணவனை இழந்த இஸ்லாமியப் பெண்ணான அவரும் மேட்ரிமோனியல் தளத்தில் முகமது உபேஸுடன் அறிமுகமாகி, 15 சவரன் நகைகளை இழந்ததாகத் தெரிவித்தார்.

இஸ்லாமிய பெண்கள் இலக்கு... மேட்ரிமோனியல் மோசடி! - அதிரவைக்கும் பின்னணி

பாதிக்கப்பட்ட இரு பெண்களிடமும் முகமது உபேஸின் புகைப்படம் உள்ளிட்ட எந்த உண்மையான விவரமும் இல்லாத காரணத்தால் அவரைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது. அதனால், உபேஸ் கடைசியாகப் பயன்படுத்திய செல்போனின் IMEI நம்பரைக்கொண்டு, அதில் தற்போது பயன்படுத்தப்படும் புதிய சிம் கார்டை ட்ரேஸ் செய்தோம். அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் பதுங்கியிருந்த முகமது உபேஸைக் கடந்த 06-02-2023 அன்று கைதுசெய்தோம்.

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முகமது உபேஸ், ப்ளஸ் டூ வரை மட்டுமே படித்த ஏழ்மையான குடும்பப் பின்னணிகொண்டவர். திருமணத்துக்காக மேட்ரிமோனியல் தளத்தில் பதிவுசெய்யும் இஸ்லாமியப் பெண்களின் விவரங்களைச் சேகரித்து, அவர்களைக் குறிவைத்து இந்த மோசடியில் ஈடுபட்டுவந்திருக்கிறார். அதிலும் இரண்டாவது திருமணம், நீண்டகாலம் திருமணமாகாமல் இருப்பவர்களைத் தொடர்புகொண்டு, அவர்களின் நம்பிக்கையைப் பெற்று, நகை, பணத்தைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாகிவிடுவது இவரின் வாடிக்கை.

சாந்தகுமாரி
சாந்தகுமாரி

விசாரணையின்போது, இதே பாணியில் மதுரை, வாணியம்பாடி உள்ளிட்ட பிற மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் மூன்று இஸ்லாமியப் பெண்களையும் உபேஸ் ஏமாற்றியிருப்பது தெரியவந்திருக்கிறது. தற்போது, உபேஸிடமிருந்து ஒரு லட்ச ரூபாய் பணம், ஒரு தங்கச் சங்கிலி ஆகியவற்றை மீட்டிருக்கிறோம்” என்றனர்.

தற்போது முகமது உபேஸ் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இது போன்ற மேட்ரிமோனியல் மோசடிகள் குறித்து விழிப்புணர்வு பெறுவது எப்படி என வழக்கறிஞர் சாந்தகுமாரியிடம் பேசினோம். “இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் மனதளவில் பலகீனமானவர்களாகவும் எளிய இலக்காகவும் (Easy Target) இருக்கிறார்கள். கணவர் அல்லது பெற்றோரின் ஆதரவு இல்லாத நிலையில், எதிர்காலம் குறித்த அச்சத்துடனிருக்கும் இவர்கள், அக்கறையும் ஆறுதலும்கொண்ட ஓர் ஆணின் வார்த்தைகளை எளிதில் நம்பிவிடுகிறார்கள். இவர்களுக்கு உரிய கவுன்சலிங் கொடுக்க ஓர் அமைப்பை ஏற்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பு. சாதாரணமாக ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேருவதற்கே குற்றப் பின்னணி இல்லை எனச் சான்றிதழ் கேட்கும் சூழலில், மேட்ரிமோனியல் தளங்களுக்கு இது போன்ற சரிபார்த்தல் கட்டுப்பாடுகள் இல்லாமலிருப்பது வேதனை. மேட்ரிமோனியல் தளங்கள் மூலம் அறிமுகமான நபரால் தாங்கள் ஏமாற்றப்பட்டால், அவற்றின் மீது வழக்கு போடவும் முடியாது. காரணம் அதற்கான எந்த வழிகாட்டு நெறிமுறைகளும் கிடையாது. அதற்கான நெறிமுறைகளை உருவாக்கி, மேட்ரி மோனியல் தளங்களைக் கண்காணிப்புக்குள் கொண்டுவர வேண்டியதும் அரசின் முக்கியப் பொறுப்பாகும்” என்றார்.

விழிப்போடிருங்கள்!

- ராணி கார்த்திக்