மூன்று பெண்களை ஏமாற்றி... இரண்டு மாணவிகளைக் கடத்தி... போலீஸில் சிக்காத ‘மாயாவி’ மணிமாறன்!

கோடிக்கணக்கில் மோசடி!
சம்பவம் 1
2021, ஜூலை 30-ம் தேதி கோவை சரவணம்பட்டியில் 16 வயது பள்ளி மாணவி மாயமாகிறார். இந்த வழக்கில் மணிமாறன் என்ற ஆசிரியர்மீது போக்சோ வழக்கு பதியப்பட்டு தேடப்பட்டுவருகிறார்!
சம்பவம் 2
2021, டிசம்பர் 31-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் பகுதியில், 18 வயது கல்லூரி மாணவி மாயமாகிறார். இந்த வழக்கில் ஆன்லைன் பிசினஸ் செய்துவரும் கார்த்திகேயன் என்பவர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு, தேடப்பட்டு வருகிறார்.
மேற்கண்ட சம்பவங்களில் ஈடுபட்ட மணிமாறன் - கார்த்திகேயன் இரண்டு நபர்கள் அல்ல... ஒருவர்தான். இரண்டு சம்பவங்களும் கிட்டத்தட்ட ஐந்து மாத இடைவெளியில் நடந்திருக்கின்றன. இப்போது வரை மாணவிகளைக் குறிவைத்துக் கடத்திச் செல்லும் அந்த நபரை போலீஸாரால் பிடிக்க முடியவில்லை!

கோவை பள்ளி மாணவியின் தந்தையிடம் பேசினோம். ‘‘கடந்த ஆண்டு எங்களுக்கு எதிர்வீட்டில் மணிமாறன் என்பவன் குடிவந்தான். சொந்த ஊர் சேலம் என்றும், அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவருவதாகவும் கூறினான். தனக்கும் தந்தைக்கும் ஜாதகத்தில் நேரம் சரியில்லாததால், இங்கு குறுகியகாலத்துக்குத் தங்கியிருக்கப்போவதாகச் சொன்னான். அவ்வப்போது அவன் மனைவி என்று ஒரு பெண் வந்து செல்வார். இங்கு ஒரு தனியார் நிறுவனத்தில், நடனம் மற்றும் கணக்கு வகுப்புகள் எடுப்பதாகக் கூறினான். தனக்கு மேஜிக் தெரியும் என்று சொல்லி, சில மேஜிக்குகளைச் செய்துகாட்டினான். கணக்கு பாடத்திலும் எளிமையான முறைகள் தெரியும் என்று கூறி, கடினமான கணக்குகளையும் நொடிப்பொழுதில் போட்டுக் காட்டினான். என் மகளுக்கு மேஜிக் மற்றும் கணக்கு பாடம் எடுப்பதாகக் கூறினான். `திறமைசாலியாக இருக்கிறானே...’ என்று சம்மதித்தோம். தினசரி எங்கள் வீட்டின் முன்புதான் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தான். எங்களுக்கு எந்தச் சந்தேகமும் வரவில்லை. ஒருநாள் கடைக்குச் செல்கிறேன் என்று கிளம்பிய மகள், வீட்டுக்கு வரவேயில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதேநேரத்தில் மணிமாறனையும் காணவில்லை. அவனின் செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்தது. எனவே, காவல் நிலையத்தில் புகாரளித்தோம். போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவுசெய்து இப்போதுவரை தேடிவருகிறார்கள். எந்த முன்னேற்றமும் இல்லை. காவல்துறை சரியாகச் செயல்படாததால், அவன் மேலும் ஒரு மாணவியைக் கடத்திவிட்டான். இனியாவது காவல்துறை தீவிரமாகச் செயல்பட்டு அவனைக் கைதுசெய்து, எங்கள் மகளை மீட்டுத் தர வேண்டும்’’ என்றார்.
மணிமாறனின் பின்னணி குறித்து விசாரித்தோம். வில்லங்கமான தகவல்களே கிடைத்தன. ‘‘சேலம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவரின் மகன் மணிமாறன் (40). கெங்கவல்லி அருகேயுள்ள நரிக்குறவர் காலனி அரசுப் பள்ளியில் பணிபுரிந்துவந்தவன், முதலில் ஒரு பள்ளி ஆசிரியரைக் காதல் திருமணம் செய்திருக்கிறான். அவனின் தவறான நடத்தையால், அந்தப் பெண் அவனை விவாகரத்து செய்துவிட்டார். இரண்டாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறான். சிட்ஃபண்ட் ஒன்றை நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்திருக்கிறான். இதனால் உள்ளூர்வாசிகள் அவனைத் தேடவே, அந்த நிறுவனத்தில் பணியாற்றிய, திருமணம் ஆகாத ஒரு பெண்ணையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டான். சில நாள்களில் அந்தப் பெண்ணும் மணிமாறனைப் பற்றித் தெரிந்து, பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்தே, கோவைக்குச் சென்றிருக்கிறான்.
கடத்திச் செல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்துடன் நன்கு பழகியும், எந்த இடத்திலும் போட்டோ எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறான். இதனால், அவனின் சரியான போட்டோகூட போலீஸுக்குக் கிடைக்கவில்லை. பல்லடம் டூ வீலர் ஸ்டேண்ட் ஒன்றில், அவன் பயன்படுத்திய பைக் கண்டறியப்பட்டுள்ளது. பழநி, கொடைக்கானல், திருச்சி, சென்னை, ராமநாதபுரம் என்று பல இடங்களுக்குச் சிறுமியுடன் சென்றிருக்கிறான். எங்கேயும் அவனைப் பிடிக்க முடியவில்லை. மூன்று மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் சென்று, அடுத்த பிளானைப் போட்டிருக்கிறான்’’ என்றார்கள்.
கன்னியாகுமரி வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘‘கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்தரம் அருகே, போலி ஆவணம் கொடுத்து வாடகைக்கு வீடு எடுத்திருக்கிறான். கோவை மாணவியை, தன் மனைவி என்று சொல்லியிருக்கிறான். அங்கு தனது பெயரை கார்த்திகேயன் என்றும், ஆன்லைன் பிசினஸ் செய்துவருவதாகவும் கூறியிருக்கிறான். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த வீட்டு உரிமையாளரின் மகள், விடுமுறைக்காக வீட்டுக்கு வந்திருக்கிறார். கோவையில் செய்ததுபோலவே, தனக்கு மேஜிக் தெரியும் என்று வழக்கமான தனது சித்து விளையாட்டுகளைக் காட்டியிருக்கிறான். எந்நேரமும் மாஸ்க், ஹெல்மெட் சகிதம் தனது அடையாளம் பெரிதாக வெளிப்படாத வகையிலேயே வலம்வந்திருக்கிறான். நேரடித் தொடர்புகளைத் தவிர்த்து, ஆன்லைனிலேயே எல்லா விஷயங்களையும் செய்து கொண்டிருக்கிறான். வீட்டைக்கூட ஆன்லைன் மூலம்தான் பிடித்திருக்கிறான். பைக் உட்பட பல பொருள்களை ஆன்லைனில் வாங்கியிருக்கிறான். இங்கிருந்து எஸ்கேப் ஆவதற்கு முன்பு, பைக்கை ஆன்லைன் மூலம்தான் விற்றிருக்கிறான்.

கல்லூரி மாணவியும் மணிமாறனும் பழகுவதே யாருக்கும் தெரியாமல் இருந்திருக்கிறது. அடிக்கடி அவர்கள் தங்கியிருந்த மாடி போர்ஷனுக்குச் சென்றிருக்கிறார் கல்லூரி மாணவி. அவனது ‘மனைவியாக இருந்த’ கோவைச் சிறுமியுடன் சேர்ந்து வெளியிலும் சென்றுவந்திருக்கிறார். இதனால், யாரும் சந்தேகப்படவில்லை. டிசம்பர் மாதம் சிறுமியுடன் கோயிலுக்குச் சென்ற மகள், வீடு திரும்பவில்லையே என்று பயந்தபோதுதான், மணிமாறனும் மாயமானது தெரியவந்திருக்கிறது. காவல் நிலையத்தில் புகார் அளித்தபோதுதான், கார்த்திகேயன் என்ற பெயரில் தங்கியிருந்தது மணிமாறன் என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரியவந்துள்ளன.
மணிமாறன் சுசீந்திரம் பகுதியில் தங்கியிருந்த காலகட்டத்தில் கோவை போலீஸார், அவனை ‘தேடப்படும் குற்றவாளி’ என்று படத்துடன் அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் தகவல் அனுப்பி, ஊடகங்களிலும் அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்கள். ஆனால், அவன் சுசீந்திரம் காவல் நிலையம் அருகிலேயே தங்கியிருந்திருக்கிறான். கல்லூரி மாணவியின் நெருங்கிய உறவினர்கள் சிலர் காவல்துறையில் பணியாற்றி வந்தபோதும், அனைவரது கண்களிலும் மண்ணைத் தூவியிருக்கிறான். காவல்துறை அறிவிப்பில், மணிமாறன் தாடியுடன் இருக்கும் மங்கிய, தெளிவில்லாத ஒரு போட்டோதான் இருக்கிறது. எனவே, தாடியை ஷேவிங் செய்து, விபூதி, பொட்டுடன் பக்திமான் கெட்டப்பில் இங்கு வலம்வந்திருக்கிறான். அவனுக்கு மேஜிக் தெரியுமோ தெரியாதோ... ஆனால், ஒரு மாயாவி செய்வதைப்போலத்தான் இருக்கின்றன அவன் வேலைகள்’’ என்றார்கள்.
இரண்டு மாணவிகளையும் அவன் என்னவிதமாக மூளைச் சலவை செய்தான்... அவனுடன் தொடர்பில் இருக்கும் வேறு சில பெண்கள் யார், யார்.. அவனுக்குப் பின்னணியில் யார் உதவி செய்கிறார்கள்... மோசடி செய்த பணத்தை என்ன செய்தான் எனப் பல கேள்விகளுக்கு விடையில்லை!

கோவை, கன்னியாகுமரி என்று இரண்டு தனிப்படை போலீஸார் மணிமாறனைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். வழக்கு விசாரணையில் ஈடுபட்டுள்ள போலீஸ் அதிகாரிகளிடம் பேசினோம். ‘‘கோவை, கன்னியாகுமரி இரண்டு தனிப்படைகளும் இணைந்துதான் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். பல்வேறு இடங்களில் விசாரித்துவிட்டோம். மணிமாறனின் குடும்பத்தினர், நண்பர்கள் என்று அவனின் நெருங்கிய வட்டாரங்களைத் தொடர்ந்து கண்காணித்துவருகிறோம். கிராமங்கள் உட்பட அனைத்துக் காவல் நிலையங்களிலும் அறிவிப்பு வெளியிட்டுள்ளோம். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா காவல் நிலையங்களுக்கும் தகவல் அனுப்பியிருக்கிறோம். அவனின் வங்கிக் கணக்கு உட்பட அனைத்தையும் கண்காணித்துக்கொண்டேதான் இருக்கிறோம். விரைவில் பிடித்துவிடுவோம். மணிமாறனைப் பற்றி விவரம் தெரிந்தால், 94981 77345 என்ற எண்ணுக்குத் தொடர்புகொண்டு தகவல் சொல்லவும்’’ என்றார்கள்.
இன்னொரு பெண் பாதிக்கப்படுவதற்குள் மணிமாறனைக் கைதுசெய்யுமா காவல்துறை?