கட்டுரைகள்
Published:Updated:

கொள்ளையடித்த பணத்தில் மெடிக்கல் பிசினஸ்...

‘பிரதர்ஸ் கொள்ளையர்’களின் கைவரிசை
பிரீமியம் ஸ்டோரி
News
‘பிரதர்ஸ் கொள்ளையர்’களின் கைவரிசை

‘பிரதர்ஸ் கொள்ளையர்’களின் கைவரிசை

கொள்ளையடித்த பணத்தில் மெடிக்கல் உள்ளிட்ட பிசினஸில் முதலீடு செய்த ‘பிரதர்ஸ்’ கொள்ளையர்கள் குறித்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. போலீஸ் எஸ்.ஐ ஒருவரைத் தாக்கிவிட்டு நெய்வேலியிலிருந்து தப்பிச் சென்ற இவர்கள், சென்னையில் டாக்டர் ஒருவரிடம் கொள்ளையடித்தபோது வசமாகச் சிக்கியிருக்கிறார்கள்.

இது குறித்து செம்மஞ்சேரி போலீஸார் பேசும்போது, “சென்னை சோழிங்கநல்லூர் காந்தி நகரில் சித்தா கிளினிக் நடத்திவருபவர் டாக்டர் சதீஷ்குமார். இவர் கடந்த ஜனவரி 28-ம் தேதியன்று கிளினிக்கில் இருந்தபோது, காலில் அடிபட்டிருப்பதாகக் கூறி இரண்டு இளைஞர்கள் இரவு நேரத்தில் வந்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சையளிக்க டாக்டர் சதீஷ்குமார் தயாரானபோது, திடீரென அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன், 20,000 ரூபாய் பணம் மற்றும் கார் சாவியைப் பறித்துக்கொண்டு அந்த இளைஞர்கள் தப்பிச் சென்றனர்.

கொள்ளையடித்த பணத்தில் 
மெடிக்கல் பிசினஸ்...

இதனால் அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார், `திருடன், திருடன்...’ எனக் கூச்சலிட்டிருக்கிறார். அந்தச் சமயத்தில் தப்பியோடிய கொள்ளையர்களில் ஒருவன் அதே வழியாக வந்த வாகனம் ஒன்றில் மோதி கீழே விழுந்திருக்கிறான். அவனைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து எங்களிடம் (செம்மஞ்சேரி காவல் நிலையத்தில்) ஒப்படைத்தனர். அவனிடம் விசாரித்தபோது, அவன் பெயர் பிரகாஷ் என்பது தெரியவந்தது. அவனுடன் சேர்ந்து இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட சத்தியசீலன், வெற்றிச் செல்வன், பிரகாஷின் தம்பி பிரதாப் ஆகியோரைக் கைது செய்திருக்கிறோம்.

கைதுசெய்யப்பட்ட சத்தியசீலன் மருந்தகம் ஒன்றை நடத்திவருகிறார். இவர் டாக்டர் சதீஷ்குமாருடன் தொழில்ரீதியான நண்பர். தனது மருந்தகத்தில் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேலாக மருந்துகள் வாங்கிக்கொண்டு, அதற்கான பணத்தைக் கொடுக்காமல் டாக்டர் சதீஷ்குமார் இழுத்தடித்ததால் சத்தியசீலன் இந்தக் கொள்ளைச் சம்பவத்துக்குத் திட்டமிட்டிருக்கிறார். இதற்காக கடலூரைச் சேர்ந்த பிரதாப், பிரகாஷ், வெற்றிச் செல்வன் ஆகியோரின் உதவியை நாடியிருக்கிறார்.

இதில், அண்ணன் தம்பிகளான பிரகாஷ், பிரதாப் இருவரும் நெய்வேலி பகுதியில் ஒரு குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள். அப்போது அவர்களைப் பிடிக்க வந்த போலீஸ் எஸ்.ஐ ஒருவரைத் துப்பாக்கியால் தாக்கிவிட்டு சென்னைக்குத் தப்பி வந்திருக்கின்றனர். அந்தச் சமயத்தில்தான் டாக்டர் சதீஷ்குமாரிடம் கொள்ளையடிக்க சத்தியசீலன் திட்டம்போட்டுக் கொடுத்திருக்கிறார். ஆனால், பொதுமக்களிடம் சிக்கியதால் அவர்கள் கைதுசெய்யப் பட்டிருக்கிறார்கள். அவர்களின் அறையிலிருந்து துப்பாக்கி ஒன்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம்” என்றனர்.

பிரதாப், வெற்றிச் செல்வன்,  பிரகாஷ், சத்தியசீலன்
பிரதாப், வெற்றிச் செல்வன், பிரகாஷ், சத்தியசீலன்

மருந்தகம் நடத்திவந்த சத்தியசீலன் ஏற்கெனவே பிரதாப், பிரகாஷ் ஆகியோருடன் சேர்ந்து அவ்வப்போது குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இவர்கள்மீது கடலூர் மாவட்டத்தில் குற்ற வழக்குகள் நிலுவையிலிருக்கின்றன. ‘பிரதர்ஸ் கொள்ளையர்’ பிரதாப், பிரகாஷ் இருவரின் பின்னணி குறித்து கடலூர் போலீஸாரிடம் விசாரித்தோம்.

“அண்ணன், தம்பி இருவரும் கொள்ளையடித்த பணத்தை சத்தியசீலன் மூலம் மருந்து பிசினஸில் முதலீடு செய்திருக்கிறார்கள். அதில் வரும் வருமானத்தைவைத்து தலைமறைவாகியிருக்கும் காலத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் டெக்னாலஜி அறிவும் பயிற்சியும் உண்டு. அதனால்தான், டாக்டரின் கிளினிக்கில் கொள்ளையடிக்கச் சென்றபோது, சிசிடிவி கேமராவின் சிப் இருக்குமிடத்தைச் சரியாகக் கண்டுபிடித்து, காட்சிகளை அழித்திருக்கிறார்கள். நவீன துப்பாக்கிகளையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்” என்றனர்.