Published:Updated:

விழுப்புரம்: பாதை மாறிய நண்பர்கள்; பேச மறுத்த சிறுவன் வெட்டிக் கொலை! - தொடர் கொலைகளால் மக்கள் அச்சம்

கொலை
News
கொலை

தங்களிடம் பேச மறுத்த சிறுவனை, வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற இளைஞர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

Published:Updated:

விழுப்புரம்: பாதை மாறிய நண்பர்கள்; பேச மறுத்த சிறுவன் வெட்டிக் கொலை! - தொடர் கொலைகளால் மக்கள் அச்சம்

தங்களிடம் பேச மறுத்த சிறுவனை, வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற இளைஞர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

கொலை
News
கொலை
விழுப்புரம் மாவட்டத்தில், அண்மைக்காலமாக போதைப் பழக்கங்களால் நிகழும் கொலைக் குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன.

விக்கிரவாண்டி அருகே, காதலைத் தொடர மறுத்த மாணவியை, கடந்த மார்ச் 17-ம் தேதி காதலனே போதையில் வெட்டி, படுகொலைசெய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதேபோல், மார்ச் 27-ம் தேதி செஞ்சி அருகே ஈயக்குணம் கிராமத்தில் மதுபோதையில் இருந்த மகனைக் கண்டித்த தந்தையை, அந்த மகனே குத்திக் கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

விழுப்புரம்
விழுப்புரம்

இதற்கெல்லாம் ஒரு படி மேலாக, மார்ச் 29-ம் தேதி விழுப்புரம் நகரிலேயே குடும்பப் பிரச்னையை மையப்படுத்தி போதையில் உலா வந்த இரு சகோதரர்கள், லாட்ஜ், எண்ணெய்க்கடை உள்ளிட்ட பகுதிகளில் தகராறில் ஈடுபட்டு, பல்பொருள் அங்காடி அருகே பிரச்னையில் ஈடுபட்டனர். 'இங்கு ஏன் பிரச்னை செய்கிறீர்கள்?' எனக் கேட்ட இப்ராஹிம் என்பவரை அந்தச் சகோதரர்கள் கொடூரமாகத் தாக்கி, கொலைசெய்த சம்பவம் சட்டமன்றம் வரை எதிரொலித்தது. இந்தக் கொலைச் சம்பவம், எதிர்க்கட்சியினரின் கண்டனங்களுக்கு உள்ளானதோடு, கடை அடைப்பு, சாலைமறியல் போராட்டம் எனப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எனவே, கடந்த சனிக்கிழமை அன்று மட்டும், கஞ்சா, குட்கா, சூதாட்டம், சாராயம், லாட்டரி விற்பனை தொடர்பாக மாவட்டம் முழுவதும் சோதனை வேட்டை நடத்தி, சிலரைக் கைதுசெய்தது மாவட்ட காவல்துறை.

இந்தக் கொடூரக் கொலைச் சம்பவங்கள் மக்கள் மனதிலிருந்து மறைவதற்குள், மற்றுமொரு கொலைச் சம்பவம் விழுப்புரத்தில் நிகழ்ந்திருக்கிறது. தங்களிடம் பேச மறுத்த சிறுவனை, நண்பர்களே இணைந்து வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றனர்.

விழுப்புரம் - இப்ராஹிம் கொலை சம்பவம்
விழுப்புரம் - இப்ராஹிம் கொலை சம்பவம்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள கொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள். இவர் 10 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரின் மனைவி, குடும்பச் சூழல் காரணமாக வெளியூரில் கரும்பு வெட்டும் வேலை செய்துவருகிறார். இந்தத் தம்பதியின் 17 வயது மகன், 11-ம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு, தன்னுடைய பாட்டியின் கவனிப்பில் வீட்டிலேயே இருந்துவந்திருக்கிறார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ், கந்தசாமி, விக்கி உள்ளிட்ட இளைஞர்களுடன் பழக்கம் இருந்து வந்திருக்கிறது. மேலும், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சில இளைஞர்களுடன் நட்பு வட்டாரம் பெரிதாகியிருக்கிறது.

அதில், மோகன்ராஜ், காந்தசாமி உள்ளிட்ட சிலர் போதை பழக்கத்துக்கு அடிமையாகி, வாகனத் திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்திருக்கின்றனர். இதனால், இந்த நட்பு வட்டாரத்திலிருந்து விக்கி, 17-வயது சிறுவன் ஆகிய இருவரும் விலகி வெளியே வந்திருக்கின்றனர். தங்களிடம் பேசும்படி மோகன்ராஜ், கந்தசாமி உள்ளிட்டோர் விலகி வந்த இருவரிடம் பலமுறை கேட்டபோதும், அவர்கள் பேசாமல் விலகியே இருந்து வந்தனராம். மேலும், தங்களைத் திருடன் என விக்கி வெளியில் சொல்லிவிட்டதாகவும், அதனால்தான் பிரச்னை தங்களுக்கு ஏற்படுகிறது என்று கருதி, விக்கியைத் தீர்த்துக்கட்ட முயன்றிருக்கின்றனர். அதேபோல், அந்தச் சிறுவனையும் தீர்த்துக்கட்ட முயன்றிருக்கின்றனர். ஆனால், இருவரும் அதிலிருந்து அதிஷ்டவசமாகத் தப்பியிருக்கின்றனர். இதற்கிடையில், மோகன்ராஜ் ஓரிடத்தில் இளநீர் திருடி மாட்டிக்கொண்டிருக்கிறார். இதில் ஏற்பட்ட பிரச்னையில், மரத்தின் உரிமையாளரைத் தாக்கியிருக்கிறார். எனவே, போலீஸார் அவரைக் கைதுசெய்திருக்கின்றனர். அண்மையில் வெளியே வந்த மோகன்ராஜ் தலைமறைவாகியிருந்தாராம்.

திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையம்.
திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையம்.

இதற்கிடையில் நண்பர்கள் பேச மறுப்பதற்கான பிரச்னையும் அவர்களுக்குள்ளாக இருந்துவந்திருக்கிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் (04.04.2023) இரவு 17 வயது சிறுவன் மற்ற நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது, யதேச்சையாக அங்கு வந்த மோகன்ராஜ், கந்தசாமி ஆகியோர் சிறுவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம். இதனால் பிரச்னை ஏற்பட்டு தாக்கிக்கொண்டிருக்கின்றனர். அப்போது, மோகன்ராஜைச் சிறுவன் தாக்கியதில் மோகன்ராஜின் கண்ணருகே அடிப்பட்டுவிட்டதாம். 'இனி இவனைவிட்டால் கேவலம்' என்று மோகன்ராஜ் தரப்பு நண்பர்கள், சிறுவனைக் கொலைசெய்யத் திட்டமிட்டிருக்கின்றனர்.

இதற்கிடையே தனது வீட்டுக்கு வந்த சிறுவன்... மரத்தில் புடவையால் கட்டிவைக்கப்பட்டிருந்த தூளியில் படுத்து உறங்கியிருக்கிறார். அப்போது அங்கு வந்த மோகன்ராஜ், கந்தசாமி ஆகியோர் 'சிறுவன் எங்கே' என அவரின் பாட்டியிடம் கேட்டிருக்கின்றனர். நண்பர்கள்தானே என்பதால், தூளியில் தூங்குவதாக, பாட்டி தெரிவித்திருக்கிறார். அதன்படி அங்கு வந்த மோகன்ராஜ், கந்தசாமி உள்ளிட்ட நால்வர், தாங்கள் மறைத்துவைத்திருந்த கத்தியால் சிறுவனைச் சரமாரியாக வெட்டிக் கொலைசெய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. காலையில், சிறுவன் ரத்தவெள்ளத்தில் இறந்துகிடப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், போலீஸுக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். 

விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்
விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்

சம்பவ இடத்துக்கு வந்த திருவெண்ணெய்நல்லூர் காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான போலீஸார், சிறுவனின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்து, தனிப்படை அமைத்து நான்கு குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்துவரும் இது போன்ற கொலைச் சம்பவங்கள், மாவட்ட மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.