ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததாகச் சொல்லப்படும் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மதுரை அண்ணா நகர் பகுதியிலுள்ள ஹோட்டலில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த குணசீலன் என்ற 26 வயது இளைஞர் பணியாற்றிவந்தார்.
இவர் தங்கியிருந்த இடத்தில் நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அண்ணா நகர் போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட, உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவிட்டு வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர்.

இது குறித்து காவல்துறையினரிடம் விசாரித்தபோது, ``சேலம் மாவட்ட முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த குணசீலன் பி.காம் படித்திருக்கிறார். அம்மா இறந்த நிலையில், இவரும் சகோதரர்களும் பாட்டி மற்றும் உறவினர் பராமரிப்பில் வளர்ந்திருக்கின்றனர்.
இவரின் சகோதரர்கள் மதுரையில் வீடு எடுத்து தங்கி ஹோட்டலில் வேலை பார்த்துவந்தனர். ஆறு மாதங்களுக்கு முன் குணசீலனும் மதுரையில் சகோதரர்களுடன் தங்கியிருந்து ஹோட்டலில் வேலைசெய்திருக்கிறார்.
கடந்த சில மாதங்களாக ஆன்லைனில் தொடர்ச்சியாக ரம்மி விளையாடி வந்திருக்கிறார். அதில் குடும்பத்தினருக்குப் பணம் அனுப்பாமலும் தம்பியிடம் ஐம்பதாயிரம் கடன் வாங்கியும் பல லட்சம் ரூபாயை ஆன்லைன் ரம்மியில் இழந்துவந்திருக்கிறார் எனச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், தங்கியிருந்த வீட்டில் நேற்று அதிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்திருக்கிறார் குணசீலன்.
இந்தத் தற்கொலைக்கு ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தது மட்டும்தான் காரணமா, வேறு ஏதும் காரணமா என்ற ரீதியிலும் விசாரித்துவருகிறோம்" என்றனர்.
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்துவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.