அரசியல்
அலசல்
Published:Updated:

தம்பி... என் சர்வீஸ்தான் உங்க வயசு... போலீஸாரை கலாய்த்த திருட்டுத் தாத்தா!

தங்கமுத்து
பிரீமியம் ஸ்டோரி
News
தங்கமுத்து

கையில் எவ்வளவு பணம் புரண்டாலும் வெற்றிலை பாக்கு, பீடி, சிகரெட், சரக்கு, பொம்பளை சோக்கு என எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை.

‘‘திருடுவதும் ஒருவித கலை... அதை ரசித்துச் செய்வதால்தான், இந்த 72 வயதிலும் சலிப்பில்லாமல் சுவர் ஏறிக் குதிக்கிறேன்’’ என்று தன் ஐம்பது வருட திருட்டு வாழ்க்கையை விடிய விடியச் சொல்லி, காவல்துறையினரை வியர்க்க வைத்திருக்கிறார் தாத்தா தங்கமுத்து!

அண்மையில் நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள தோப்புத்துறையில் பிரகாஷ் என்பவரின் வீட்டிலிருந்த எட்டு பவுன் நகை, எழுபதாயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளைபோனது. வழக்கை விசாரித்த வேதாரண்யம் போலீஸார், சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்தபோது, துணியால் முகத்தை மறைத்துக் கட்டிய நிலையில், ‘உறங்காப் புலி’ ஒன்று சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மறைத்துக் கட்டிய துணியைத் தாண்டியும் வெளியே தெரிந்த நரைத்த முடியை அடையாளமாகக்கொண்டு, அடுத்த மூன்றே நாள்களில் கொள்ளையனைக் கொத்தாகப் பிடித்தது போலீஸ். வயதைக் கேட்ட போலீஸுக்குக் கடும் அதிர்ச்சி... காரணம், கொள்ளையன் 72 வயது தள்ளாத தாத்தா!

தொடர் விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பகுதியைச்சேர்ந்த 72 வயதான தங்கமுத்து, ‘‘கொள்ளையடிச்சதுல பாதியை ஜாலியா செலவழிச்சுட்டேன்; இந்தாங்க மீதிப் பணம்’’ என கரன்சியோடு, எட்டு பவுன் நகையையும் பத்திரமாக போலீஸிடம் ஒப்படைத்திருக்கிறார்.

தம்பி... என் சர்வீஸ்தான் உங்க வயசு... போலீஸாரை கலாய்த்த திருட்டுத் தாத்தா!

‘‘தம்பி... என் சர்வீஸ்தான் உங்க வயசு... நான் சாதாரணக் கொள்ளையன் கிடையாது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரினு எல்லா மாநிலத்துலயும் 50 வருஷமா திருடுறேன். என்மேல 250-க்கும் அதிகமான வழக்கு இருக்கு. 200 முறைக்கு மேல சிறைக்குப் போயிருக்கேன்’’ என்று தங்கமுத்து தாத்தா பில்டப் கொடுக்க... ‘‘யப்பா சாமி. உன் அலம்பலை நிறுத்து’’ என அதட்டிய போலீஸார், “உண்மையை மட்டும் சொல்லு” என்று தங்கள் பாணியில் விசாரித்திருக்கிறார்கள். “என்னை டச் பண்ணாதீங்க சார். வலி தாங்க மாட்டேன். அடிக்காம குணமா வாயில கேளுங்க” என்று அழாத குறையாகச் சொல்லியிருக்கிறார். தங்கமுத்து தாத்தாவின் குற்றப் பதிவேடுகளை ஆராய்ந்தபோது, அவர் ஒரு ‘அக்மார்க் திருடர்குலத் திலகம்தான்’ என்ற உண்மை தெரியவந்திருக்கிறது.

தங்கமுத்து தாத்தாவின் ‘பூமர்’ கதையைக் கேட்ட போலீஸார், அதை அப்படியே நம்மிடமும் சொல்லி கிறுகிறுக்க வைத்தனர்...

தங்கமுத்து
தங்கமுத்து

‘‘ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் தங்கமுத்து. இளம் வயதான பிறகும் வேலை வெட்டி எதற்கும் போகாமல் சுற்றிக்கொண்டிருந்த தங்கமுத்துவைப் பார்த்து ‘சல்லிப் பய, தம்பிடி காசுக்குத் தேற மாட்டான்’ என்று ஊர்க்காரர் களும், சொந்தக்காரர்களும் திட்டித் தீர்த்திருக் கிறார்கள். யாரோ அவரது தன்மானத்தை ஓவராகச் சீண்டிவிட்டதால், ‘இனிமே காலணா, அரையணாவுக்குக்கூட யார்கிட்டயும் கையேந்தக் கூடாது’ எனத் திருட்டு தொழிலுக்குப் பிள்ளையார்சுழி போட்டிருக்கிறார் தங்கமுத்து.

தூத்துக்குடி மட்டுமன்றி மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை போன்ற அண்டை மாவட்டங்களிலும் கைவரிசை காட்டி போலீஸிடம் மாட்ட ஆரம்பித்தவர், சில இடங்களில் திருடும்போது பொதுமக்களிடம் சிக்கி சின்னா பின்னமும் ஆகியிருக்கிறார். போலீஸ்காரர்கள் அடிக்கடி வீட்டுக்கு வந்து, இவரைக் கைதுசெய்து இழுத்துக்கொண்டு போனதால், அசிங்கப்பட்டுப் போன தங்கமுத்து குடும்பம், ஊரைவிட்டு திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பகுதிக்கு இடம்பெயர்ந்துவிட்டது. சிறையிலிருந்து வெளியே வந்த தங்கமுத்து, குடும்பத்தைப் பிரிந்த சோகத்தை மறக்க ‘வேலை’யில் கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். பார்ட் டைம் திருடர், ஃபுல் டைம் கொள்ளையராக மாறிவிட்டார்.

தங்கமுத்து
தங்கமுத்து

தேனியில் திருடப்போன இடத்தில் ஒரு பெண்ணின் இதயத்தைத் திருடிவிட்டார். அந்தக் காதல், கல்யாணத்தில் முடிந்தது. ஒரு குடும்பம் வந்தது... தேவையும் அதிகமானது. அதனால், ஓவர் டைமும் பார்க்க ஆரம்பித்திருக்கிறார் திருட்டுத் தாத்தா.

நகை, பணம் சேரச் சேர நிறைய சொத்து களையும் வாங்கிப்போட்டிருக்கிறார். சொந்த ஊரான திருச்செந்தூர் பகுதியில் தன் கெளரவத்தைப் பறைசாற்ற ஒரு மாடி வீடு, தேனி மாவட்டம், சின்னமனூர் அருகேயுள்ள காமாட்சிபுரத்தில் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுக்கும் பங்களா வீடு, வணிக வளாகம், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் வசிக்கிற தங்கைக்கு அடுக்குமாடி வீடு, காரைக்காலில் தான் பதுங்கியிருக்க கெஸ்ட் ஹவுஸ் மாதிரி ஒரு வீடு... என நினைத்த இடங்களிலெல்லாம் சொத்துகளை வாங்கிக்குவித்திருக்கிறார்.

தேவையைவிட அதிகமாகப் பணம் சேர்ந்துவிட்டபோதும், திருட்டுத் தொழிலை விட முடியவில்லை தாத்தாவுக்கு. கையில் எவ்வளவு பணம் புரண்டாலும் வெற்றிலை பாக்கு, பீடி, சிகரெட், சரக்கு, பொம்பளை சோக்கு என எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. நாற்பது வயது நபரைப்போல் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறார். திருட்டு நடந்த இடத்தில் சிக்னலை வைத்து போலீஸார் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால் செல்போனைக்கூட பயன்படுத்துவதில்லை. ஆனால், ஊருக்கு ஊர் நிறைய வழக்கறிஞர் சகவாசம் இருக்கிறது. அவர்களது செல் நம்பர்களை மனப்பாடம் செய்து வைத்திருக்கிறார். போலீஸிடம் மாட்டும்போது, அவர்களிடமே போனை வாங்கி வழக்கறிஞர்களுக்குத் தகவல் கொடுத்துவிடுவார்.

கறுப்பு நிற பேக் ஒன்றை வைத்திருக்கிறார். அதில் வேட்டி, சட்டை, துண்டு, சிறிய அளவிலான இரும்பு ராடு ஆகியவை மட்டுமே இருக்கின்றன. எங்கு மாட்டினாலும் அடிக்கு பயந்து திருட்டை ஒப்புக்கொள்கிறார். ஆனாலும், ‘எக்காரணம் கொண்டும் திருடுவதை நிறுத்த மாட்டேன்’ என்று சொல்கிறார். இதையடுத்து, ‘சரி வாங்க, பேசிக்கிட்டே போவோம்’ என்று அழைத்துச் சென்று நாகை சிறையில் அடைத்துவிட்டோம்’’ என்கிறார்கள் போலீஸார்.

`என் திருட்டுக்கு ‘எண்டே’ கிடையாதுடா’ என்கிறாராம் தாத்தா!