20 மாநிலங்களில் 35 லட்சம் முதலீட்டாளர்களிடம் ரூ.4,000 கோடி வரை சிட் ஃபண்டு நடத்தி ஏமாற்றிய குற்றத்துக்காக, மத்திய பிரதேசம் செஹோர் மாவட்ட நீதிமன்றம் ஒருவருக்கு 250 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இந்தியாவில் வழங்கப்பட்ட நீண்ட கால சிறைத்தண்டனையாக இது கருதப்படுகிறது.

பாலாசாகேப் பாப்கர் என்பவர் சாய் பிரசாத் குழும நிறுவனங்களின் தலைவராக இருக்கிறார். இவர் 2009 நவம்பர் முதல் 2016-ம் ஆண்டு வரை, கிராமங்களில் உள்ள பல லட்சக்கணக்கான மக்களிடமிருந்து, 5 ஆண்டுகளில் பணத்தை இரட்டிப்பாக்குவதாக உறுதியளித்து பணத்தைப் பெற்றிருக்கிறார்.
பால் விற்பனையாளராகத் தன் பயணத்தைத் தொடங்கி, மகாராஷ்டிராவின் கிராமங்களில் உள்ள நூற்றுக்கணக்கான பெண்களைச் சேர்த்து ஊறுகாய், விவசாய பொருள்களை உற்பத்தி செய்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கு 18 சதவிகிதம் ஆண்டு வருமானம் தருவதாக உறுதியளித்தார்.
எந்தக் கட்டுமான வேலைகளும் நடக்காதபட்சத்திலும், விரைவாகப் பணம் ஈட்டும் திட்டம் 20 மாநிலங்களுக்குப் பரவத் தொடங்கியது.
நான்கு குழும நிறுவனங்களின் இயக்குநரான சாய் பிரசாத்தை, நிறுவன செயல்பாடுகளை மூடுமாறு செபி உத்தரவிட்டது. ஆனால், அவர் வேறு நிறுவனங்களை நிறுவி, பணத்தை அதற்கு மாற்றி இருக்கிறார்.
பெட்ரோலியம் மற்றும் கட்டுமானம் முதல் எரிசக்தி வரை 23 துணை நிறுவனங்கள் இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட 300 முதலீட்டாளர்களுக்கு முதிர்வுத் தொகை வழங்கப்படவில்லை எனக் காவல்துறையில் புகார் அளித்தனர்.

அதைத் தொடர்ந்து மும்பை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாரால் பாலாசாகேப் பாப்கர் 2020-ல் கைது செய்யப்பட்டார். செஹோர் மாவட்ட நீதிமன்றம், 20 மாநிலங்களில் 35 லட்சம் முதலீட்டாளர்களிடம் ரூ.4,000 கோடி வரை ஏமாற்றிய குற்றத்துக்காக இவருக்கு 250 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இவரின் தந்தை, மகன் உட்பட 5 பேருக்கும், 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்துள்ளது.
பணத்தை இரட்டிப்பாக்கும் ஆசையில் சிட் ஃபண்டில் பணத்தை செலுத்திய லட்சக்கணக்கான மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.