
‘உங்கள் வேலைக்கான பிராசஸ் நடந்துகொண்டிருக்கிறது. ஆஃபர் லெட்டர், விசா ஆகியவை இன்னும் சில தினங்களில் வந்துவிடும்.
சென்னையில் வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி, கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்த வழக்கில், நடிகை அல்போன்சாவின் தங்கை ஷோபா கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இந்த மோசடியின் பின்னணி குறித்து விசாரித்தோம்...
இது பற்றி சென்னை கமிஷனர் அலுவலக போலீஸார் பேசும்போது, “சென்னை கேளம்பாக்கத்திலுள்ள 28 மாடி தனியார் குடியிருப்பில் வசித்துவருபவர் ஷோபா. பிரபல நடிகை அல்போன்சாவின் தங்கையான இவர், வளசரவாக்கத்தில் ‘ஸ்ப்லாஷ் கஸ்டமர் சர்வீசஸ்’ என்ற பெயரில் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்திவந்தார். இந்த நிறுவனம் மூலமாக அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு இணையதளங்களில் வேலைக்காகப் பதிவுசெய்தவர்களின் தரவுகளை எடுத்திருக்கிறார். பிறகு, அவர்களைத் தொடர்புகொண்டு, `பிரபல வேலைவாய்ப்பு நிறுவனத்திலிருந்து அழைக்கிறோம். உங்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப வெளிநாட்டில் வேலை வாங்கித்தருகிறோம்’ என்று பேசி நம்பவைத்திருக்கிறார். அதை நம்பி வந்தவர்களிடம், விசா, விமானக் கட்டணம், கமிஷன் உட்பட 1 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை பணம் வசூலித்திருக்கிறார். ஆனால், பணம் செலுத்தியவர்கள் நீண்ட நாள்கள் காத்திருந்தும் வேலை தொடர்பாக எந்தவிதத் தகவலும் இல்லாததால், ஷோபாவைத் தொடர்புகொண்டு கேள்வியெழுப்பியிருக்கிறார்கள்.

அவர்களிடம், ‘உங்கள் வேலைக்கான பிராசஸ் நடந்துகொண்டிருக்கிறது. ஆஃபர் லெட்டர், விசா ஆகியவை இன்னும் சில தினங்களில் வந்துவிடும். உங்கள் வேலைக்கு நாங்கள் கியாரன்டி’ என்று சொல்லிச் சமாளித்திருக்கிறார் ஷோபா. ஆனால், அதன் பிறகும் எந்தவிதமான அப்டேட்டும் இல்லாததால், பாதிக்கப்பட்டோர் தரப்பினர் போலீஸில் புகாரளித்தனர். அவர்களிடம் சமாதானம் பேசி புகாரை வாபஸ் பெறச் செய்த ஷோபா, மீண்டும் வெவ்வேறு நபர்களிடம் இதேபோல மோசடியில் ஈடுபட்டுவந்திருக்கிறார். இது தொடர்பாக சென்னை கமிஷனர் அலுவலகத்துக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு, ஷோபா மீது வழக்கு பதிவுசெய்து அவரைக் கைதுசெய்திருக்கிறது” என்றனர்.

ஷோபா கைதுசெய்யப்பட்ட பின்னணி குறித்து நம்மிடம் பேசிய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், ``ஷோபா மீது இதுவரை 74 லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பதாக எங்களுக்குப் புகார்கள் வந்திருக்கின்றன. வேலைவாய்ப்புக்காக அவரிடம் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள், லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனால் பிரபல நடிகையின் தங்கை என்ற அடையாளத்தைப் பயன்படுத்தி, ஒருசில போலீஸாரின் உதவியுடன் அந்தப் புகார்களை திரும்பப் பெறச் செய்திருக்கிறார். இதற்காக, வேலை வாங்கித்தருவதாகப் பெறப்பட்ட பணத்தில், ஒரு பகுதியை செக்காக எழுதிக்கொடுத்து புகாரளித்தவர்களில் ஒருசிலரைச் சரிக்கட்டியிருக்கிறார். நாங்கள் அவர்மீது வழக்கு பதிவுசெய்தது தெரிந்ததும், தலைமறைவாகிவிட்டார். தற்போது அவரைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறோம்” என்றனர்.
மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்!
- ராணி கார்த்திக்