
ஷாருக் கானிடம் நான் ஒருபோதும் பணம் கேட்கவில்லை. எனவே, என் மீதான வழக்கை ரத்துசெய்யக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறேன்.
நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானைக் கைதுசெய்த ஐ.ஆர்.எஸ் அதிகாரி சமீர் வான்கடே லஞ்சப் புகாரில் சிக்கி, கைதாகும் நிலையிலிருக்கிறார்.
2021-ம் ஆண்டு ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான், மாடல் அழகி முன்முன் தமேச்சா உள்ளிட்டோர் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கிலிருந்து ஆர்யன் கானை விடுவிக்க ஐ.ஆர்.எஸ் அதிகாரி சமீர் வான்கடேயும், அவரால் சாட்சியாகச் சேர்க்கப்பட்ட கோசாவி என்பவரும் சேர்ந்து 25 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து அந்த வழக்கை கையாளும் பொறுப்பிலிருந்து சமீர் வான்கடே நீக்கப்பட்டார். பிறகு அவர் சென்னை வரி செலுத்துவோர் சேவைகள் பிரிவின் தலைவராக மாற்றப்பட்டார். கடந்த மார்ச் மாதம் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களைச் சந்தித்த வான்கடே, பணியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் குதிக்கவிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், சமீர் வான்கடே, கோசாவி உள்ளிட்ட நான்கு பேர்மீது சி.பி.ஐ திடீரென வழக்குபதிவு செய்திருக்கிறது.
இது குறித்து சமீர் வான்கடே நம்மிடம் பேசியபோது, “ஷாருக் கானிடம் நான் ஒருபோதும் பணம் கேட்கவில்லை. எனவே, என் மீதான வழக்கை ரத்துசெய்யக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறேன். என்னை மாற்றிவிட்டு, குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் சிறப்பு விசாரணைக்குழு, கடைசி நேரத்தில் ஆர்யன் கான் பெயரை வழக்கிலிருந்து நீக்கியிருக்கிறது. ஷாருக் கான் என்னுடன் பேசிய வாட்ஸ்அப் உரையாடல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறேன். சிறப்பு விசாரணைக்குழுத் தலைவர் ஞானேந்தர் சிங், சாதிரீதியாக என்னை அவமானப்படுத்தும் வகையில் நடந்துகொள்கிறார். இது குறித்தும் முறைப்படி புகார் செய்திருக்கிறேன்” என்றார்.

“ஆர்யன் கான் கைதுசெய்யப்பட்டது முதல், சிறப்பு விசாரணைக்குழு இந்த வழக்கைக் கையிலெடுத்தது வரையிலான நாள்களில் மும்பை போதைப்பொருள் தடுப்பு அலுவலகத்தின் கண்காணிப்பு கேமரா பதிவுகள் சேதமடைந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் ஷாருக் கான் அங்கு வந்து சென்றதாகச் சொல்லப்படுகிறது. மேலும், ஆர்யன் கானை வழக்கிலிருந்து விடுவிக்க, சமீர் வான்கடே சார்பாக, ரூ.50 லட்சத்தை கோசாவி முன்பணமாகப் பெற்றார் எனச் சொல்லப்படுகிறது. ஆனால், பணத்தைக் கொடுத்ததாகச் சொல்லப்படும் ஷாருக் கானின் உதவியாளர் பூஜாவிடம் இது குறித்து சிறப்பு விசாரணைக்குழு, சி.பி.ஐ தரப்பில் எந்த விசாரணையும் செய்யப்படவில்லை. வழக்கின் பின்னணியில் பணமும் இருக்கிறது, அரசியலும் இருக்கிறது!” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.