நம் வாழ்க்கையில் தினமும் செய்யக்கூடிய பல பணிகளை இன்று இணையம் எளிதாக்கி இருக்கிறது. இணையத்தின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க இணையம் தொடர்பான மோசடிகளும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. அந்த வகையில் தற்போது மோசடி கும்பல் ஒன்று தோனி, அபிஷேக் பச்சன், ஷில்பா செட்டி, இம்ரான் ஹாஸ்மி, மாதுரி தீக்ஷித் உள்ளிட்ட பிரபலங்களின் பெயர்களைப் பயன்படுத்தி கிரெடிட் கார்டுகள் வாங்கி மோசடியில் ஈடுபட்டு இருக்கிறது.

டெல்லியைச் சேர்ந்த அந்த மோசடி கும்பல், இணையதளத்தின் மூலம் பிரபலங்களின் GST அடையாள எண்ணைத் தெரிந்துகொண்டு அதன் மூலம் பான் கார்டு விவரங்களைத் திரட்டி, பிரபலங்களின் பெயர்களில் ‘ஒன் கார்டு’ என்ற நிறுவனத்திடம் இருந்து கிரெடிட் கார்டுகளைப் பெற்று சுமார் 21 லட்ச ரூபாய் வரை பண மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதனை அறிந்த அந்த நிறுவனம் டெல்லி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளது.
விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர் மோசடியில் ஈடுபட்ட ஐந்து பேரைக் கைது செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், “GST அடையாள எண்களில் முதல் இரண்டு இலக்க எண்கள் மாநில குறியீடு என்பதையும், அடுத்த பத்து எண்கள் பான் கார்டு எண் என்பதையும் தெரிந்து கொண்ட அவர்கள் அதனைப் பயன்படுத்தி இணையதளத்திலிருந்து பிரபலங்களின் பான் கார்டு விவரங்களைப் பெற்றுள்ளனர்.

இதனைச் சரியாகப் பயன்படுத்தி ஆதார் கார்டு விவரங்களைப் பெற்று பிரபலங்களின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம் உள்ளிட்டவற்றை இணைத்து கிரெடிட் கார்டை விண்ணப்பித்து இருக்கின்றனர். இந்த விவரங்களை நம்பி 'ஒன் கார்டு' நிறுவனமும் கிரெடிட் கார்டுகளை வழங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.